Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநாவுக்கரசு நாயனார் கண்ணப்ப நாயனார் கண்ணப்ப நாயனார்
முதல் பக்கம் » 63 நாயன்மார்கள்
சுந்தரர்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 ஜன
2011
05:01

திருநாவலூர் என்னும் திருத்தலம் நீர்வளமும், நிலவளமும் நிறைந்தது. எக்காலத்தும் செழிப்போடு காணப்படும் இந்நகரில் தெய்வநலமும் சைவ நெறியும் பெருமை பெற்று ஓங்கியிருந்தன. இத்தலத்தில், ஆதிசைவர் மரபில், சகல நற்குணங்களும் ஒருங்கே அமையப்பபெற்ற சடையனார் என்பவருக்கும், நற்குண நங்கை இசைஞானியார் என்பவருக்கும் திருமுருகனே வந்து அவதாரம் செய்தாற்போல், சுந்தரமூர்த்தி நாயனார் தோன்றினார். எம்பெருமான் திருவருளால் அவதாரம் செய்த மகனுக்கு பெற்றோர்கள் நம்பியாரூரார் என்று இறைவன் திருநாமத்தையே சூட்டினர். நம்பியும், காப்புப் பருவம், செங்கீரைப் பருவம், தாலப் பருவம், சப்பாணிப் பருவம், முத்தப் பருவம் போன்ற பருவங்களை எல்லாம் கடந்து மேனியிலே பிரகாசமும், முகத்திலே தெய்வ ஒளியும் தோன்ற உருவெடுத்து விளங்கலானாள். நம்பியின் முடியிலே இரத்தினச்சுட்டியும், அழகு மார்பிலே நவரத்தினப் பொன்மணிகளும், மென்சீர் அடிகளிலே கொஞ்சும் சதங்கையும், திருவரையில் செம்பொன் அரை நாணும் அவரது அழகிற்கு அழகு செய்தன. ஒரு நாள் நம்பி ஆரூரர் வீதியிலே, சிறு தேர் உருட்டி தளிர்நடை போட்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது திருமுனைப்பாடி நாட்டை அரசாண்டு வந்த நரசிங்கமுனையர் திருநாவலூர்ப் பெருமானைத் தரிசித்து விட்டு தேரில் வந்து கொண்டிருந்தார். அவர் சிறு தேர் உருட்டி விளையாடும் ஆரூரரைக் கண்டார். அப்பால்மணம் மாறாப் பாலகனின் பேரழகை கண்டு அளவிலா மகிழ்ச்சி பூண்ட அரசர், தேரினின்றும் இறங்கி வந்து ஆரூரரை வாரி எடுத்து உச்சி முகர்ந்தார். அக்குழந்தையை எப்படியும் தம்மோடு அழைத்து சென்று விடுவது என்ற முடிவிற்கு வந்தார். அரசர், அக்கணமே அக்குழந்தையைத் தூக்கிக் கொண்டு, சடையனார் இல்லத்திற்குள் சென்றார். குழந்தையை தூக்கிக் கொண்டு வரும் அரசனைக் கண்டு பெற்றோர்கள் அதிசயித்தனர். விரைந்தோடு வந்து வேந்தனை வரவேற்றனர்.  சடையனாரும் நரசிங்கமுனையரும் பால்ய சிநேகிதர்கள். சுந்தரர் தனது நண்பனின் செல்வன் என்பதனை அறிந்து அரசன் இரட்டிப்பு மகிழ்ச்சி பூண்டான். அரசன் சடையனாரிடம், நண்பா! உங்கள் குழந்தையின் அழகில் நான் பேரன்பு பூண்டேன். அதனால் இக்குழந்தையை மகனாக வளர்க்கும் பாக்கியத்தை எனக்குத் தர வேண்டும், என்று பரிவும் பாசமும் பொங்கக் கேட்டான். மன்னனின் அன்பு மொழிக்கு அடிமையான பெற்றோர்கள் மறுமொழி ஏதும் பேச விரும்பவில்லை. தங்களது குமரன் அரண்மனையில் வளர வேண்டும் என்பது  தெய்வ சங்கல்பம் போலும் என்று எண்ணினர். மனநிறைவோடு ஆரூயிர்ச் செல்வனை, அரசருடன் அனுப்பி வைத்தனர். அரசன் ஆனந்தத்துடன், சுந்தர செல்வனைச் சுமந்து கொண்டு, தனது தேரில் புறப்பட்டார்.

ஆரூரர், அரண்மனையில் அரசகுமாரனைப்போல் வாழத் தொடங்கினார். சின்னஞ்சிறு வயதிலேயே, அரசர்க்குரிய அத்தனை கலைகளிலும் நல்ல தேர்ச்சி பெற்றார். மதநூல்களையும், ஆகம நூல்களையும் பயின்றார். உரிய பருவத்தில் ஆரூரருக்கு முப்புரி நூல் அணிந்து மகிழ்ந்தான் மன்னன்! இவ்வாறு பெற்றோர்களின் அன்பாலும், அரசரின் அரவணைப்பாலும் ஆரூரர் வளர்ந்து வரலானார். பெற்றோர்கள், ஆரூரருக்குத் திருமணம் செய்து வைக்கத் தீர்மானித்தனர். தங்கள் எண்ணத்தை அரசரிடம் கூறினர். அரசரும் அவர்கள் விருப்பம் போல் திருமணப் பெண்ணைத் தேர்ந்து எடுத்து மணம் முடிக்கக் கூறினான். அக்கணமே பெற்றோர்கள் ஆரூரருக்கு ஏற்ற மணப்பெண்ணைத் தேடலாயினர். திருநாவலூருக்கு அடுத்தாற் போல் புத்தூர் என்ற ஊரிலுள்ள, சடங்கவி சிவாச்சாரியார் என்பவரின் புதல்வியை ஆரூரருக்குப் பார்த்து மணம் முடிப்பதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கினர். திருமணமும் நிச்சயமானது; நல்ல நாளும் பார்க்கப்பட்டது. அயலூர் நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் திருமண அழைப்பு ஓலையை அனுப்பினார்கள். பெண் வீட்டாரது ஊரான புத்தூரிலேயே திருமணத்திற்கான எல்லா ஏற்பாடுகளும், மிக்க சிறப்போடும், கோலாகலத்தோடும் நடந்த வண்ணமாகவே இருந்தன. திருமணத்திற்கு முதல் நாள் ஆரூரர் திருநாவலூரில் இருந்து வெண்புரவியில், புத்தூருக்கு உற்றாரும், உறவினரும் புடைசூழ இன்னிசை நாதம் முழங்க, மேளதாளத்துடன் புறப்பட்டார். ஆரூரர், மன்னர் குலத்திற்குரிய, விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் அணிந்திருந்தாலும் அந்தணர் கோலத்திற்குரிய அலங்காரத்தையும் செய்து கொண்டிருந்தார். சரிகைக் கரை போடப்பட்டுள்ள வெண்பட்டு உடுத்தியிருந்தார். காதுகளிலே வைரக் கடுக்கன்கள் அணிந்திருந்தார். மணமிக்க சந்தனக் கலவையை மார்பிலே பூசியிருந்தார். அத்திருமார்பில் ஒளிமிகுந்து மாணிக்கங்கள் இழைத்த அணிகலன்களோடு, நறுமலர் மாலைகளையும் அணிந்திருந்தார். மங்கல முரசங்கள் முழங்கிட-பண் இசைக்கும் பாவையர் பரதமாட-மங்கல மங்கையர் பாலிகை ஏந்தி வர, கட்டிளங் கோதையர் திருமணப் பெண்ணுக்கு, சீர் வரிசைகளைப் பொன் தட்டுகளில் தாங்கிவர, சுந்தரரின் மணவிழா பவனி புத்தூரை நெருங்கிக் கொண்டிருந்தது. சடங்கவியார் தம் மகள் திருமணத்தை மிகச் சிறப்போடு நடத்துவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தார். ஊர் எல்லையிலிருந்தே பெரும் பந்தல் அமைத்து, ஆங்காங்கே, பூச்சரங்கள் அழகாகக் கட்டப்பட்டு, மாவிலைகளோடு கூடிய தோரணங்களும் அணி செய்யப்பட்டிருந்தன. வாழை, கமுகுகளும் நாட்டப்பட்டு விளங்குகிறது. மங்கல மனைகள் தோறும், நிறைகுடங்கள் வைக்கப்பட்டிருந்தன. வீதிகள் எங்கும் தூய்மை நிறைந்திருக்க பன்னீர் தெளிக்கப்பட்டு மாக்கோலமும், இடையிடையே சந்தனக்கோலமும் போடப்பட்டிருந்தன. பல்வகை வாத்தியங்கள் முழங்கிய வண்ணமாகவேயிருந்தன. வைகறைப் பொழுதில் ஆரூரர், புத்தூர் எல்லையை வந்தடைந்தார். பெண் வீட்டார்கள், ஆரூரரை எல்லையிலேயே தூப, தீப பாலிகை ஏந்தி வரவேற்றனர். வழி எங்கும் நறுமணப் பொடியையும், நறுமலரையும் வீசினார்கள். பன்னீர் தெளித்தார்கள். வானத்துப் பேரொளி வையத்தில் வந்து இறங்கினாற் போல் ஒளிமயத்தோடு புரவி மீது வந்து கொண்டிருந்த ஆரூரர், திருமணச்சோலைக்குள் நல்ல ஓரையிலே எழுந்தருளினார். திருமணப் பந்தலிலே, அழகே உருவெடுத்து அமர்ந்திருந்த ஆரூரரின் எழிற் தோற்றத்தைக் கண்டு, திருமணத்திற்கு வந்திருந்த அனைவருமே திகைத்து நின்றனர். பலரும் பலவாறு புகழ்ந்து பேசி மகிழ்ந்தனர்.

மணநாள் காணப்போகும் ஆரூரரை சிவபெருமான் தடுத்தாட்கொள்ளத் திருவுள்ளங் கொண்டார். அக்கணமே அந்தண வடிவம் தாங்கி புறப்பட்டார். தள்ளாடி தள்ளாடி நடக்கும் தளர்ந்த வயது! வெள்ளி முடிபோன்ற நரைத்த திருசடை! செவிகளிலே கண்டிகையும் குழையும்! திருமார்பிலே முப்புரி நூல்! திருத்தோளிலே வெண்ணிற உத்திரீயம்! நெற்றியிலும், திருமேனியிலும் புனிதமான திருவெண்ணீற்று ஒளி! ஆதவனின் வெம்மையைத் தணிக்க ஓர் திருக்கையிலே தாழங்குடை! மற்றொரு திருக்கையிலே தருப்பை முடிந்த மூங்கில் தடி! இங்ஙனம் தாம் ஏற்ற முதிய அந்தணர் வடிவத்திற்கு ஏற்ப, திருக்கோலத்தை மாற்றிருந்தார் எம்பெருமானார். மங்கல சடங்குகள் வழிமுறைக்கு ஏற்ப நடந்த வண்ணமிருந்தன, மங்கலமுரசம் முழங்கும் நல்ல ஓரையில் ஓர் இடிமுழக்கம்! இறைவர் ஒரு முதிய அந்தணர் கோலத்தோடு எழுந்தருளினார். பந்தலுக்குள் எழுந்தருளும் போதே, நான் கூறப்போகும் இம்மொழியை யாவரும் கேளுங்கள் என்று கூறிக்கொண்டேதான் வந்தார் எம்பெருமான்! அனைவரும் அம்முதியவரைப் பார்த்தனர். மூப்பணிந்த அந்தணரின் முகப்பொலிவைக் கண்டு நம்பியாரூர், பணிவன்போடு எழுந்து நின்று, கரங்கூப்பி வணங்கியவாறு, ஐயனே! தங்கள் வரவு நல்வரவாகுக!  நாங்கள் என்ன தவம் செய்தோமோ, இம்மண நாளன்று தேவரீர் எழுந்தருள என்று கூறினார். அம்மொழியைக் காதில் போட்டுக் கொள்ளாதவர் போல் அம்முதியவர், அப்பனே! உனக்கும் எனக்கும் முற்காலத்தேயுள்ள ஓர் தொடர்பு காரணமாக, ஒரு பெரும் வழக்குள்ளது. அவ்வழக்கைத் தீர்த்து விட்டு, நீ உன் திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்யலாம் என்று மொழிந்தார். முதியவர் மொழிந்ததைக் கேட்டு, அனைவரும் திகைக்க-சுந்தரர் மட்டும் சற்றும் கலங்காமல், ஐயனே! உமக்கும் எமக்கும் வழக்கு இருக்குமேயானால், நீவிர் சொல்வது போல், முதலில் அதை முடித்துவிட்டு, பின்னர் திருமணம் செய்து கொள்கிறேன். வழக்கை இயம்புவீராக! என்றார். வேதியர், அந்த அவையில் உள்ளோரை நோக்கி, அந்தணர் குலத்தோரே! எம்மொழியைக் கேளுங்கள். இந்நாவலூரான் என் அடிமை! என்றார். மங்களகரமான மணச்சடங்குகள் நடந்து கொண்டிருந்த வேளையில், இப்படியொரு பரபரப்பு நடப்பதை எண்ணி, செய்வதறியாது திகைத்துப்போன ஆரூரர், வேதியரை நோக்கியவாறு சலனத்தோடு இருந்தாரே தவிர, அவரால் இதற்கொரு வழிமார்க்கம் காண முடியவில்லை. வேதியர் தம் கையிலிருந்த நீட்டோலையைக் காண்பித்தவாறே, நீங்கள் எவரும் என்னைப் பார்த்து நகைக்கவும் வேண்டாம்; பதைக்கவும் வேண்டாம். எனக்கு இவனது பாட்டன், பண்டைய நாளிலேயே எழுதிக்கொடுத்த அடிமை ஓலை இதோ என் கையில் இருக்கிறது என்று சினம் பொங்கக் கூறினார். ஆரூரருக்கு வியப்பு மேலிட்டது. உதட்டிலே புன்னகை தவழ, வேதியரை இன்னாரென்று அறிய இயலாத நிலையில், ஐயா! வேதியரே! உமக்கு நன்றாக பித்து பிடித்திருக்கிறது. இல்லாவிடில், குற்றமற்ற என்னை உங்களுக்கு அடிமை என்று சொல்லிக் கொள்வீர்களா? பாவம்! பரிதாபத்திற்குரியவர்! நீர் என்ன பித்தனோ? என்று கேட்டார். இறைவன் சினம் பொங்கினாற்போல் சற்று கடுமையாக சுந்தரரைப் பார்த்து, யான் பித்தனுமாகுக; அன்றிப் பேயனுமாகுக! நீ என்னைப் பற்றி எவ்வளவு தூரம் இழிவாக மொழிந்தாலும் சிறிதுகூட வெட்கப்படவும் மாட்டேன்; கவலைப்படவும் மாட்டேன். என்னை உனக்குத் தெரியாது. நான் யார் என்பதை உன்னால் அறியவும் முடியாது. வீணாக விளையாட்டு மொழிகளைப் பேசி என் கோபத்தை கிளறாதே! மணவறையில் உட்கார்ந்து கொண்டு வித்தகம் பேசுகிறாயே எதற்கு? உன் கடன் எனக்குப் பணிசெய்து கிடப்பதே என்பதை நினைவிற் கொள்! என்றார்.

இதுவரை வேதியரிடம் குதர்க்கவாதம் புரிந்த ஆரூரர் சிந்திக்கத் தொடங்கினார். இவரது அருள் தோற்றம் ஆரூரரின் இதயத்தை எதனாலோ உருக்கியது. அவர் இதயத்தில் அன்பு பெருக்கெடுத்தது. அதே சமயத்தில் வேதியரின் பிதற்றல் வார்த்தைகளும், வயது முதிர்ந்த தோற்றமும் உள்ளத்தை உருக்கினாலும், அடிமை என்று அவர் மொழிந்த சொல் சுந்தரருக்கு சினத்தை மூட்டியது. இவ்வாறெல்லாம் மனம் குழம்பிய சுந்தரர். எப்படியும் முதியவரிடம் இருக்கும் அடிமை ஓலையை வாங்கிப் பார்த்து விடுவது என்ற தீர்மானத்திற்கு வந்தார். நீங்கள் கூறுவதை உண்மையான வார்த்தைகளா என்று பார்ப்போம். எங்கே அடிமை ஓலையைக் காட்டுங்கள் ஆரூர் கேட்டார். வேதியர் கோபம் பொங்க, அடிமை ஓலை கண்டு படித்துணரும் பேராற்றல் உடையவனோவாயோ? வேண்டுமென்றால் அவை அறிய ஓலையைக் காண்பிப்பேனே தவிர, தனிப்பட்ட முறையில் உன்னிடம் மட்டும் கொடுக்க முடியாது. துணிவிருந்தால் அவைக்களம் வா! பார்த்துக் கொள்ளலாம் என்றார். நம்பியாரூரரின் கோபம் எல்லை மீறியது. அவர் வெகுண்டு எழுந்து, அந்தணர் கையிலிருந்த அடிமை ஓலையைப் பலாத்காரமாகப் பறிக்க முற்பட்டார். அந்தணர் மணப்பந்தலைச் சுற்றி, நாற்புறமும் ஓடினார். ஆரூரரும் தொடர்ந்து ஓடினார். இருவரும் திருமணப் பந்தலுக்குள் சுற்றி, சுற்றி ஓடிவந்தார்கள். சுந்தரர் ஒருவாறு அவரைப் பிடித்தார். சுந்தரர் கையிலிருந்த அடிமை ஓலையைப் பிடுங்கி, அந்தணர் அடிமையாகி ஏவல் புரிவதா? எந்த வேதத்தில் சொல்லியிருக்கிறது என்பதைப் பார்த்துவிடுவோம் என்று கேட்ட வண்ணம் அவ்வோலையை சுக்கு சுக்காகக் கிழித்தெறிந்தார். ஓடி ஓடிச் சோர்ந்தவர் போல் காட்சி அளித்த இறைவன் சுந்தரரின் செயலைக் கண்டித்தார். எவ்வளவு பெருத்த அநியாயம்? இந்த திருமணப் பந்தலில் என் குறையைக் கேட்டு, உண்மைக்கு வாதாட எவருமே இல்லையா! இது கொடிய அநியாயம் என்று முறையிட்டுக் கூச்சலிட்டார். மறையொலிக்கும் மாயவன், குறையொலித்து நின்றார். கூனிக் குறுகி நின்ற சுந்தரர், செய்வதறியாது திகைப்பவர் போல் சற்று நிமிர்ந்து அவையோரைப் பார்த்தார். அப்பொழுது திருமணச் சடங்கிற்று வந்திருந்தவர்களில் சிலர், வேதியரை அணுகி, ஐயா பெரியவரே! உமது வழக்கு மிகவும் விசித்திரமாகத்தான் இருக்கிறது. உலகில் எங்குமே இல்லா புது வழக்கம்! அது போகட்டும். தூய மணநாள் அன்று வேண்டுமென்றே இப்படியொரு கதை கட்டி, கல்யாணத்தை தடுக்க கங்கணம் கட்டிக் கொண்டு வந்து நிற்கும் நீவிர் யார்? எங்கே இருக்கிறீர்? யாது உம் பூர்வாங்கம்? என்று கேள்விமேல் கேள்விகளைக் கேட்டனர். நான் அருகிலுள்ள வெண்ணெய்நல்லூரில் பிறந்து வளர்ந்தவன். இவன் பாட்டன் இவன் எனக்கு அடிமை என்று எழுதிக் கொடுக்காவிடில், எதற்காக நம்பியாரூரன், அறநெறி தவறி, என் கையிலிருந்த ஓலையைக் கிளித்தெறிய வேண்டும்? அவன் குற்றமுள்ள நெஞ்சம் தானே இப்படியொரு நஞ்சான செயலை செய்ய வைத்திருக்கிறது? இவன் என் அடிமைதான் என்பதை உறுதிப்படுத்தி உலகறியச் செய்ய இதைவிட எங்களுக்கு ஆதாரம் வேறென்ன வேண்டும்? என்று விடையளித்தார் எம்பெருமான்! அப்படியென்றால், இந்த வழக்கை வெண்ணெய் நல்லூரிலேயே தீர்த்துக் கொள்ளலாம் வாரும் என்று கூறினார் சுந்தரர்! அங்ஙனமே ஆகட்டும். இப்போது நீ கிழித்த ஓலை நகலேயாகும். மூல ஓலையைப் பத்திரமாக வைத்திருக்கிறேன். வெண்ணெய்நல்லூரிலுள்ள அவையோர் முன்னால் மூல ஓலையைக் காண்பித்து நீ என் அடிமை என்பதை நிரூபிக்கிறேன் என்ற மறையோன், தள்ளாதவரைப் போல தடியை ஊன்றிக் கொண்டு புறப்பட்டார்.

இரும்பைக் காந்தம் கவர்ந்தாற்போல் ஆரூரரும் பின் சென்றார். சுற்றமும், நட்பும் ஆரூரரைப் பின்தொடர்ந்து சென்றன. திருமண மன்றம் வழக்காடும் மன்றமானது. மணப்பந்தல் சோகத்தில் மூழ்கியது. அந்தணர் முன்வர அனைவரும் வெண்ணெய்நல்லூர் அவையை வந்தடைந்தனர். அவையோர் முன்னால் அந்தணர் தமது வழக்கைச் சமர்ப்பித்தார். செந்தண்மை பூண்டொழுகும் அந்தணர்களே! இந்நாவலூரன் என் அடிமை! அதற்கு சான்றாக இருந்த அடிமை ஓலையை, என்னிடமிருந்து பிடுங்கி, கிழித்து எறிந்துவிட்டான். அவைக்கு இவனை அழைத்து வந்துள்ளேன். இந்த ஏழை அந்தணரின் முறைபாட்டை சீர் தூக்கிப் பார்த்து உண்மைக்கு தீர்ப்பளியுங்கள். முதியவரே! யாது மொழிந்தீர்? அந்தணர் அடிமையாவது என்பது இவ்வுலகில் இதுவரை நடந்த வழக்கமாகத் தெரியவில்லையே! இதுபோன்ற வழக்கை அவை மட்டுமல்ல, இந்த அகிலமே இப்பொழுதுதான் சந்திக்கிறது. புதுமையான வழக்குதான் இது! முதியவர் மொழிந்ததைக் கேட்டு அவையோர் நகைத்துக் கொண்டே மேற்கண்டவாறு கூறினர். இவன் கிழித்த ஓலை, இன்று நேற்று எழுதப்பட்டதல்ல. பண்டுதொட்டு பாதுகாக்கப்பட்டு வருவது! ஒரு உடன்பாட்டின் மூலம் இவன் பாட்டன் எனக்கு எழுதிக் கொடுத்தது! இப்படியிருக்க எப்படி என் வழக்கை நீங்கள் அர்த்தமற்றது என்று கேலி பேச முடியும்? அப்படியா? நன்று வேதியரே நன்று, என்று அந்தணருக்கு ஆறுதல் மொழி பகர்ந்த அவையோர், நம்பியாரூரரை நோக்கி முதியோர்கள் உடன்பாட்டுடன் எழுதிய ஓலையை வலிய வாங்கிக் கிழித்தது பிழை! வயது முதிர்ந்த, இப்பெரியோர் தமது வழக்கைக் கூறிவிட்டார். இதுபற்றி உம்முடைய எண்ணம் யாதோ? என்று கேட்டனர். முதியவரின் மாயத்திற்கு முன்னால் நான் என்ன சொல்ல இருக்கிறது? இவர் வழக்கு எனக்கே விளங்காத புதிராக இருக்கிறது! ஆரூரர் சுற்றி வளைத்து, அவையில் பேச விரும்பாது, சுருக்கமாகவே கூறி முடித்தார். எல்லா நூல்களையும் கற்று உணர்ந்த பெரியோர்கள், நம்பியாரூரர் ஆதிசைவர்! அவர் ஒருபோதும் முறை தவறி நடக்கமாட்டார் என்பதை எண்ணி பார்த்து வேதியரிடம், முதியவரே! இவ்வழக்கு மிக்க கொடியது! இவர் உம்முடைய அடிமை என்பதை ஆதாரத்தோடு அவை அறியச் செய்தல் வேண்டும். ஆட்சி முறையிலாவது அன்றி சாட்சி, மூலமாவது அன்றி உடன்படிக்கை ஓலை மூலமாவது, உமது வாதத்தை உண்மை என்று நிரூபித்துக் காட்டுவீராகுக! என்று பணித்தனர். அவையோர் ஒருமித்துக் கூறியதைக் கேட்டு, வேதியர் மகிழ்ச்சி பொங்க, அவையோரைப் பார்த்து, முன்னர் இவன் கிழித்தது நகல் ஓலையே! இவன் இப்படி செய்தாலும் செய்வான் என்று அறிந்துதான், மூல ஓலையை முன்கூட்டியே பத்திராக வைத்துள்ளேன்! என்றார். அப்படியானால் மூல ஓலையைக் காட்டுங்கள். காட்டுகிறேன். ஆனால் இவன் முன்போல மீண்டும் இந்த மூல ஓலையையும் கிழித்துவிட்டால் நான் என்ன செய்வேன்? அவையோர் முன்னால், இத்தகைய தவறான நிகழ்ச்சி எதுவும் நடக்காமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீவிர் தைரியமாக ஓலையைக் காட்டலாம். வேதமுதல்வன், ஆரூரருக்கு பயப்படுபவரைப் போல் பாவனை செய்தவண்ணம், மூலஓலையை எடுத்து அவையோரிடம் கொடுத்தார். அவையோர் ஆணைப்படி, கணக்கன் ஓலையை வாங்கிப் படித்தான். அவ்வோலையில் பின்வருமாறு எழுதியிருந்தது.  திருநாவலூரில் இருக்கும் ஆதிசைவனாகிய ஆரூரன் என்னும் பெயருடைய நான், திருவெண்ணெய்நல்லூர் பித்தனுக்கு எழுதிக் கொடுத்தது. நானும் என் வழிவரும் மரபினோரும் வழிவழியாய் இவருக்கு அடிமை தொழில் செய்து வருவோம் என்பதற்காக உள்ளும் புறமும் ஒருமைப்பட்டு எழுதிக் கொடுத்தேன். இதற்கு இஃது என் கையெழுத்து. இம்மணிவாசகத்தைக் கணக்கன் வாசிக்கக் கேட்ட அவையோர், ஓலையை வாங்கிப் பார்த்தனர். சாட்சிக் கையெழுத்து இட்டார்கள் கூட இஃது தங்கள் கையெழுத்துதான் என்பதனை ஒப்புக் கொண்டனர்.ஆரூரரின் பாட்டனாரின் கையெழுத்தைச் சரிபார்க்கும் பொருட்டு, அவர் எழுதிய வேறு சில ஓலைகளையும் கொண்டுவரச் சொல்லி அதையும் சரிபார்த்தனர்.அவையோர் அந்தணர் கூறுவது முறைதான் என்று ஒப்புக்கொண்டனர்.

ஆரூரன் அந்தணருக்கு அடிமையாய்ப் பணிசெய்வது தான் கடமை, என்று தங்கள் தீர்ப்பை வழங்கினார்கள். ஆரூரர்க்கு ஒன்றுமே புரியவில்லை. என்றாலும் மறையவர் தீர்ப்புப்படி அந்தணருக்கு அடிமையாகி, அவையோர் தீர்ப்புக்கு தலை வணங்கினார். அவையோர், அம்முதியவரைப் பார்த்து, ஐயனே!  ஓலையில் நீவிர் வெண்ணெய்நல்லூர் என்று குறிப்பிட்டுள்ளீர்களே, இவ்வூரில் உமது இருப்பிடம் எங்கே என்று எங்களுக்குக் காட்டுவீராக என்று கேட்டனர். எம்பெருமான், அவர்களை அழைத்துக் கொண்டு தம் இருப்பிடத்தைக் காட்டுவதற்காக வேண்டி அவ்வூரிலுள்ள திருவட்டுறை என்கின்ற திருக்கோவிலை நோக்கி புறப்பட்டார். சுந்தரர் உள்பட அனைவரும் அந்தணரைப் பின் தொடர்ந்தனர். திருவெண்ணெய் நல்லூரிலுள்ள அக்கோயிலுள் அம்முதியோர் புகுந்து மறைந்தார். ஆரூரரும் அவர்பின் வந்தவர்களும் நெடுநேம் காத்திருந்தார்கள். அந்தணரைக் காணாமல் ஒருவர் பின் ஒருவராக வெளியேறினார்கள். ஆனால் ஆரூரர் மட்டும், வாயிலிலேயே நின்று கொண்டிருந்தார். இப்பெரியவர் கோயிலுள் புகுந்து திரும்பாதது ஏன்? என்று ஆரூரர் எம்பெருமான் மீது பூண்டுள்ள அளவற்ற அன்பின் காரணமாக சிந்திக்கத் தொடங்கினார். ஆரூரர் மட்டும் தனியே அந்தணரைத் தேடி கோயிலெங்கும் அலைந்தார். அவர் கண்களில் நீர் மல்கியது. கோயிலøச் சுற்றி சுற்றி வந்து உடல் தளர்ந்தது. வேதம் நான்கிலும் மெய்ப்பொருளாகிய எம்பெருமான்தான் இன்று தன்னை ஆட்கொண்ட அந்தணர் என்பதை உணர்ந்த ஆரூரர், எப்படியும் என் ஐயனை இன்று காணவேண்டும் என்று அன்பின் மிகுதியால் நினைத்துக் கொண்டார். ஆலயத்தினை வலம் வந்தார். எங்கு தேடியும் தேவாதி தேவனைக் காணவில்லை. அப்பொழுது கோயிலுள் பேரொளி பிறந்தது. முதிய அந்தணர் வடிவிலே, வந்து ஆரூரரை அடிமைகொண்ட ஆனந்தக் கூத்தன், அருள் வடிவமாய்-ஆனந்த மூர்த்தியாய் - உமையாளுடன் விடை மீது காட்சி அளித்தார். ஆலயத்தில் மணி பலத்த ஓசையை எழுப்பியது. தேவாதி தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர். தேவகணங்கள் இசை முழக்கம் செய்தனர். ஆரூரானுக்கு ஆனந்தக் காட்சியளித்த அம்மையப்பர் திருவாய் மலர்ந்து,  அன்பிற்கினிய ஆலால சுந்தரா! பூர்வத்திலேயே நீ என் அரிய தொண்டன், அன்று நீ மாதர் மயக்கத்தில் மதி இழந்தமையால் தான் மானிடப்பிறவி எடுக்க நேர்ந்தது. மீண்டும் பிறவிப் பெருங்கடல் உன்னைத் தொடராவண்ணம் உன் விருப்பப்படியே உன்னை தடுத்தாட் கொண்டோம் என்று அருளினார். தாய்ப்பசுவின் குரலைக் கேட்டு களிக்கும் கன்று போல் குழைந்தார் ஆரூரர்! அவருக்கு ஏற்பட்ட பேரானந்தத்திற்கு எல்லையே இல்லை. அவர் உடல் புளகம் போர்த்தது. தலைமீது தூக்கிய கரங்களை அவரால் தாழ்த்தவே முடியவில்லை. அப்படியே வணங்கி எழுந்தார். இறைவன் ஆரூரரை வாழ்த்தி, நீ எம்முடன் வன்மையாகப் பேசியதால் வன்றொண்டான் என்று உனக்குத் திருநாமம் சூட்டுகிறேன். எம்மை நீ தமிழ்ப்பாக்களால் அர்ச்சனை செய்வாயாக! என்று அன்பு கட்டளை இட்டார். சுந்தரர், ஆண்டவனின் கருணை வெள்ளத்தில் மூழ்கினார். பக்தி பிரவாகத்தில் மூழ்கி வழி தெரியாமல் தவித்தார். தடுத்தாட்கொண்ட தம்பிரான் தமிழாற் பாடுக  என்றதால் சுந்தரர் சிந்தை மகிழ்ந்து எம்பெருமானின் சேவடிகளை வணங்கி நின்றார். நான்முகனாலும், திருமாலாலும் அறிய முடியாத வரும், ஐந்தெழுத்தின் உட்பொருளாக விளங்குபவருமாகிய சிவபெருமான், தம்மைப் பாடு என்று அருளியது கேட்டு, வேதியனாகி வந்து என்னை வழக்கினால் வென்று அடிமை கொண்ட தேவரீர் திருவுள்ளத்தை எளியோன் உணர்ந்து கொள்ளவில்லை. இருப்பினும் உள்ளத்துக்கு உணர்வு அளித்து, என்னை ஆண்டருளிய ஆதியே! அரனே! அருட்பெருங்கடலே! யான் யாதும் அறிந்திலேனே! இச்சிறியோன் யாது கூறிப் பாடவல்லேன்? தேவரீரது கருணையை என்னென்பேன்? என்று சுந்தரர் விண்ணப்பித்து, உருகி நின்றார். இறைவன் தம்பிரான் தோழரைப் பார்த்து, உன்னை ஆட்கொண்ட போது எம்மை பித்தா! என்று அழைத்தாய், ஆதலின் பித்தா என்று அடி எடுத்துப்பாடுவாயாக!  என்று திருவாய் மலர்ந்து அருளினார். சுந்தமூர்த்தி சுவாமிகள், உள்ளமும் உடலும் பொங்கிப் பூரிக்க ஐந்தெழுத்து மந்திரத்தை மனதிலே தியானித்தவாறே, பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா! என்று அடி எடுத்து, தடுத்தாட்கொண்ட தம்பிரான் மீது திருப்பதிகம் ஒன்றைப் பாடத் தொடங்கினார். சுந்தரரின் இசைத்தமிழ் இன்ப வெள்ளத்திலே மூழ்கி மிதந்த எம்பெருமான், சுந்தரர்க்கு திருவருள் புரிந்து மறைந்தார். சுந்தரர், சிந்தை மகிழ திருநாவலூர் திரும்பினார். அங்கு எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் மீதும் திருப்பதிகங்களைப் பாடினார்.

எம்பெருமான், சுந்தரமூர்த்தி சுவாமிகளைத் தடுத்தாட் கொண்டதால் அவரது திருமணம் தடைப்பட்டது. சடங்கவியாருடைய அருந்தவப் புதல்வியும், ஆரூரரையே மனக்கோயிலில் தெய்வமாக இருத்தி, அவரது நினைவாலேயே சிவலோகத்தைச் சுலபமாகச் சேரும் பிறவாப் பெருவாழ்வைப் பெற்றார்கள். திருநாவலூர் கோயிலில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானின் பாதகமலங்களைப் பணிந்து வழிபட்டு வந்த சுந்தரர், தலங்கள் தோறும் யாத்திரை செய்து பரமனைப் பைந்தமிழால் பாடிப் பரவசமடைய எண்ணினார். ஒரு நாள் அங்கிருந்து புறப்பட்டு, அருகேயுள்ள துறையூரை வந்தடைந்தார். துறையூருறையும் அண்ணலைப் பணிந்து, தவநெறியைத் தந்தருள வேண்டும் என்று பைந்தமிழ் பாப்பாடி வழிபட்டார். இறைவனும் தவநெறியை அவருக்கு அருளினார். பின்னர் அங்கிருந்து தில்லைக்குப் புறப்பட்டார். பெண்ணை ஆற்றைக் கடந்து திருவதிகை என்னும் தலத்தை அடைந்தார் சுந்தரர். அத்திருத்தலம், நாவுக்கரசரால் உலகம் போற்ற உழவாரப் படைக்கொண்டு, எம்பெருமானுக்கு சிவத்தொண்டு புரிந்த புண்ணியத்தலம். அதை உணர்ந்த சுந்தரர், தமக்கு அந்த இடத்தில் தங்குவதற்கு தகுந்த இடம் கிடையாது என்று அஞ்சியவாறு, அருகிலுள்ள சித்தவடம் என்னும் இடத்திற்கு சென்று தங்கினார். எம்பெருமான் திருநாமத்தை மனதில் நினைத்தபடியே துயின்றார்.அப்பொழுது, திருவதிகைப் பெருமான், முதிய வேதியர் வடிவம் தாங்கி, எவருமறியாவண்ணம் சுந்தரர் துயிலும் மடத்துள் எழுந்தருளினார். சுந்தரர் சிரமீது தமது திருவடி படுமாறு வைத்து, தாமும் தூங்குபவர் போல் கிடந்தார். பரமனின் பாதம்பட்டு சுந்தரர் விழித்தெழுந்தார். தமது தலையருகே, இரு திருப்பாதங்கள் இருக்க கண்டார். சுந்தரர் சற்று தலையை உயர்த்திப் பார்த்தார். அங்கு எவரோ படுத்திருக்கக் கண்டார். சுந்தரர் அவரை நோக்கி, ஐயா! உம்முடைய பாதங்கள் என் தலை மீது படும்படியாக வைத்து துயின்றது ஏனோ? என்று கேட்டார். அப்பொழுதுதான் விழித்தவர் போல் அப்பெரியவர், எம் முதுமையால் நடந்த இச்சிறு பிழையைப் பொறுத்திடல் வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொண்டார். சுந்தரர், அப்பெரியவர் கூறியதின் உண்மையை உணர்ந்து, மற்றோர் இடம் சென்று முன் போல் துயில் கொண்டார். இம்முறையும் அம்மாயவன், வேண்டுமென்றே சுந்தரர் அருகே சென்று, அவருடைய தலை மீது தமது பாதம் படும்படியாக துயின்றார். சுந்தரர் முன்போல் எழுந்து பார்த்தார். பெரியவரின் பாதங்களைக் கண்டார். எது கருதி இவ்வேதியர் இவ்வாறு செய்கிறார்? என்று தனக்குள் எண்ணியவாராக அவரை நோக்கி, தாங்கள் யார்? என்று கேட்டார். என்னை நீ இன்னாரென்று அறியவில்லையே? என்று கூறியவாறு மாயமாக மறைந்தார். எம்பெருமான் மறைந்ததும் சுந்தரர் மனம் உருகினார். வேத முதல்வனே! மாதொரு பாகனே! ஆலமுண்ட அண்ணலே! உமது இத்திருவிளையாடல்களை அறியாது போனேனே! இறுமாப்படைந்தேனே! எம்பெருமானே! உமது பாதகமலங்கள் என் தலைமீது டப எத்துணைத் தவம் செய்தேனோ? தில்லை நடராஜத் தேவனே! எம்மை ஆட்கொண்ட அம்பலத்து அரசே! உமது திருவடிகளை இவ்வெளியோன் சிரமீது வைத்து தீட்சை தந்தருளினீரே! என்றெல்லாம் தம் அறியாமையை எண்ணி வருந்தினார். தம்மானை அறியாத சாதியார் உளரே என்று தொடங்கித் திருப்பதிகம் ஒன்றைப் பாடினார். பின்னர் தாளாத மன வேதனையுடன் துயின்றார். மறுநாள் அங்கிருந்து தில்லைக்குப் புறப்பட்டு சென்றார். தில்லையின் எல்லையில் நின்று தூலலிங்கமாகிய கோபுரத்தைக் கண்டு ஆராக்காதல் பூண்டு நிலமதில் வீழ்ந்து வணங்கி, சிரமீது கரந்தூக்கி நின்றார் சுந்தரர். தில்லைவாழ் அந்தணர்கள் எம்பெருமானின் திருவருளால் சுந்தரரின் வருகையை முன்னதாகவே அறிந்திருந்தனர். அவர்கள் அவரை மிக்கச் சிறப்போடும் கோலாகலத்தோடும் எல்லையில் எதிர்கொண்டு வரவேற்றனர். சுந்தரர் தில்லைவாழ் அந்தணர்களை வணங்கி பேரன்புப் பெருக்கோடு சிற்றம்பலத்தை அடைந்தார்.

பொன்னம்பலத்தைக் கூப்பிய கரத்துடன் பன்முறை வலம்வந்த சுந்தரர் வேதச் சிலம்பு ஒலிக்க ஆனந்தத் தாண்டவம் ஆடும் சிற்றம்பலத்துப் பேரரசரின் திருச்சந்நதியைக் கண்டார். பக்திப் பெருக்கின் அருள் ஒளியில், விழிகளைத் தவிர மற்ற எல்லா அவயங்களும் ஒடுங்கிப் போயின. கண்களிலே பேரின்பம் பெருக ஈசனைக் கண்குளிரக் கண்டார்; உளம் குழைய சேவித்தார். மது உண்ட வண்டு போலானார். மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற நான்கு கரணங்களின் செயல்களும், சிந்தையில் ஒன்றி ஒடுங்க, தில்லையம்பலத்தரசரின் ஆனந்தக் காட்சியில் மூழ்கினார்; பக்தி வெள்ளத்தில் பொங்கித் ததும்பினார்; பதிகங்கள் பல பாடி மகிழ்ந்தார் சுந்தரர்! அப்பொழுது வானவீதி வழியாக இறைவன், சுந்தரா! எம்மை சந்திக்க நீ ஆரூருக்கு வருவாயாக! என்று அசரீரியாக மொழிந்தார். எம்பெருமானின் இவ்வாணையைச் சென்னி மீது சுமந்து புறப்பட்ட ஆரூரர், தில்லையை விட்டுச் செல்ல மனமில்லாமல் எல்லையில் நின்றவாறே உளம் உருகினார். நமச்சிவாய நாமத்தை மனதிலே தியானித்துக் கொண்டே கொள்ளிட நதியைக் கடந்து புறப்பட்டார். சீர்காழியை அணுகிய சுந்தரர், ஞானசம்பந்தர் அவதாரம் செய்த அத்தலத்துள் செல்ல அஞ்சி நடுங்கினார். அந்நகரின் எல்லைப் புறத்தே நின்று வணங்கினார். அப்பொழுது, திருத்தோணியப்பர் உமையாளுடன் இடபத்தின் மேல் எழுந்தருளினார். அந்தப் பேரின்பக் காட்சியைக் கண்டுகளித்து கொண்டிருந்த சுந்தரர், தோணியப்பரை பதிகம் ஒன்றைப் பாடிப் போற்றினார். அங்கிருந்து புறப்பட்ட சுந்தரர், திருக்கோலக்கா, திருப்புன்கூர், மாயூரம், அம்பர்மாகாளம், திருப்புகலூர் முதலிய சிவத்தலங்களைத் தரிசித்தவண்ணம் திருவாரூரின் எல்லையை வந்தடைந்தார். நீராருஞ் சடைமுடிமேல் நிலவணிந்த அண்ணல், சுந்தரரின் வருகையை, திருவாரூர் சிவனடியார்களுக்கு முன்கூட்டியே உணர்த்த எண்ணினார்.ஐயன் அவ்வன்பர்களது கனவில் எழுந்தருளி, என் அழைப்பிற்கு இணங்கி எம்மால் தடுத்தாட் கொள்ளப்பட்ட தொண்டன் நம்பியாரூரன் மகிழ்வுடன் இங்கு வருகின்றான். அவனை எதிர்கொண்டு அழைத்து வருவீர்களாகுக! என்று பணித்தார். அக்கணமே தொண்டர்கள், எம்பெருமானின் கட்டளையை, அவ்வூர் மக்கள் அனைவருக்கும் அறிவித்தனர். தொண்டர்களும், சிவ அன்பர்களும், சுந்தரரது பெருமையை வியந்து, அவரை வரவேற்க நகரை நன்கு அலங்கரித்தனர். அறம்பேணும் வீடுகளிலும், பக்தித்திறம் காணும் பெருவீதிகளிலும் மாலைகளும், தோரணங்களும், வாழை மரங்களும் அழகோடு கட்டினர். வீதிகளைக் கோமய நீரால் சுத்தப்படுத்திப் பனிநீரைப் பொழிந்தனர். வீட்டுத் திண்ணைகளில் சந்தனக் குழம்பால் மெழுகி, மாக்கோலமிட்டு, பொரிகளையும், பொற்சுண்ணங்களையும், முத்துக்களையும் பரப்பி, மணிவிளக்கும், சரவிளக்கும் நிறைகுடமும், பொற்பாலிகைகளும் வைத்தனர். ஆங்காங்கே பெரும் பந்தல்கள் அமைத்தனர். மலர்மாலைகளைக் கட்டித் தொங்கவிட்டனர். திருவாரூர் தேவலோகம் போல் காட்சி அளித்தது. பெருங்கடல் ஊருக்குள் நுழைந்தாற்போல் சிவ அன்பர்களும், தொண்டர்களும் பொங்கி வழிந்தனர். சுந்தரரைப் பூரண பொற்கும்ப கலசங்களோடு வணங்கி வரவேற்றனர். பேரிகை முழங்க மங்கல வாத்தியங்கள் ஒலி எழுப்ப சிவ சிவ என்ற வேத ஒலி விண்ணை முட்டியது. தேவர்கள் ஆகாயத்திலிருந்து ஆரவாரம் செய்து பூமழை பொழிந்தனர். தேவதுந்துபிகள் முழங்கின. கந்தர்வர்களும், தேவ தேவாதியர்கள் வாழ்த்தி துதி பாடினர். அன்பர்களும், அடியார்களும் புடைசூழ திருக்கோயிலுக்குப் புறப்பட்ட சுந்தரர், எந்தை இருப்பதும் ஆரூர்! அவர் எம்மையும் ஆள்வரோ? கேளீர்! என்ற பதிகத்தைப் பாடியவண்ணம் கோயிலுள் நுழைந்தார். தேவாசிரிய மண்டபத்தை வணங்கித் துதித்தார். எம்பெருமானை நினைத்து நினைத்து ஊனும், உயிரும் உருகி உருகி கண்ணீர் வடித்தார் சுந்தரர்! ஆறாக் காதலை ஆரூர்ப் பெருமான் மீது மழையெனப் பொழிந்தார். எல்லையில்லா பக்திப் பெருக்கிலே, சிரமீது கரங்குவித்து, பரம்பொருளின் பாதகமலங்களில் வீழ்ந்து வணங்கினார். செந்தமிழ்த்தேன் சிந்த பக்தி சுவையோடு, இன்னிசை கலந்த, பதிகம் ஒன்றைப் பாடினார். எம்பிரானுடைய திருவடி எனும் திருப்பாற்கடலிலே மூழ்கினார். அப்பொழுது திருவாரூர் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் தியாகேசப் பெருமான்,  ஆலால சுந்தரனே! நாம் உமக்குத் தோழராகிவிட்டோம். அன்று உம்மைத் திருநாவலூர் மணப்பந்தலிலே தடுத்தாட் கொண்டோம். ஆனால், இப்பொழுது முன்போல் மணக்கோலம் பூண்டு வாழ்வில் என்றென்றும் மகிழ்ச்சியுடன் இருக்க அருள்கின்றோம் என்று வானவழியே அசரீரி வாக்கினால் உணர்த்தினார்! விண்வழியே வண்ணப் பிறையணிந்த வேணிபிரான் மொழிந்ததைக் கேட்டு சுந்தரர் சிந்தை குளிர்ந்தார்.

திருவாரூர்ப் பெருமானே! என்னை ஆட்கொண்டு, அருளிய உன் கருணையை என்னென்பது! உன் அன்பின் திறத்தினை எப்படித்தான் பாடிப் புகழ்வேன்? ஆரூர் அமர்ந்த திருமாமணியே! உம்மை எப்படி மகிழ்ந்து பாடுவேன் என்று இறைஞ்சினார். இறைவனால் தோழராக்கிக் கொள்ளப்பட்ட சுந்தரர் அன்று முதல் தம்பிரான் தோழர் என்ற திருநாமத்தைப் பெற்றார். அனைவரும், சுந்தரரை அவ்வாறே அழைப்பாராயினர். சுந்தரர் திருவாரூரில் சிலகாலம் தங்கியிருந்து, தியாகேசப் பெருமானை இனிது சேவித்து, தேனினும் இனிய தண் தமிழ்ப் பாக்களால், பாமாலை சாத்தினார். கைலாய மலையிலே, ஆலால சுந்தரர் விரும்பிப் பார்த்த உமாதேவியாரின் சேடியர் இருவருள் ஒருத்தியாகிய கமலினி என்பவள், திருவாரூரில், உருத்திர கணிகையர் மரபில் பரவையார் என்னும் பெயருடன் பிறந்து வளர்ந்து வரலானாள். பரவையார், இளமை முதற்கொண்டே சிவனாரிடத்தும், அவர் தம் அடியார்களிடத்தும் எல்லையில்லா பக்தி கொண்டிருந்தாள். தினந்தோறும் வைகறைத் துயிலெழுந்து, தூய நீராடி, கோயிலுக்கு சென்று தியாகேசப் பெருமானை தரிசித்து வந்தாள் பரவையார். வழக்கம்போல பரவையார் தமது சேடிகளுடன் கோயிலுக்கு வந்திருந்தாள். அது சமயம் சுந்தரரும், அன்பர்கள் புடைசூழ ஆலயம் வந்திருந்தார். கோயிலுள் பரவையாரும் சுந்தரரும் ஒருவரையொருவர் நேருக்கு நேர் நோக்குகின்ற சந்தர்ப்பம் ஏற்பட்டது. சுந்தரர், பரவையாரின் அழகைக் கண்டு சற்று நேரம் மெய் மறந்து நின்றார். பரவையாரும் சுந்தரரின் சுந்தர ரூபலாவண்யத்தில் தன்னை மறந்து ஒரு கணம் சிலையாக நின்றாள். இருவரது கண்களும் சந்தித்தன. உள்ளங்களும் உறவாடின. சுந்தரரின் அழகிலே மதிமயங்கிய பரவையார், முருகப்பெருமானோ? அன்றி மன்மதனோ? வித்தியாதரனோ? அரனாரின் அருள்பெற்ற அடியவனோ? இவர் இன்னாரென்பதே புரியவில்லையே! எந்த ஆடவரையும் தீண்டாத என் மனம், எப்படியோ இவர்பால் சென்று பனிபோல் ஓடிவிட்டதே! என்றெல்லாம் மனத்தால் எண்ணி வியந்தாள். காதல் கனிந்துருக, தளிர்க்கால்கள் தளர்நடை பயில, தன் உள்ளத்தை அவர்பால் ஈந்து இல்லத்திற்கு புறப்பட்டாள் பரவையார்! பரவையார் சென்ற பின்னர், மனதிலே அவளை நினைத்துருகலானார் சுந்தரர். அருகில் இருந்தோரைக் கேட்டு பரவையாரின் பெயரையும், அவள் இருப்பிடத்தையும், பெற்றோர்களையும் பற்றித் தெரிந்து கொண்டார் சுந்தரர்! பக்தி உள்ளத்தில் காதல் விதை ஊன்ற, பரமன் நினைவோடும், பரவையார் நினைவோடும் இறைவனை வணங்கி, தேவாசிரிய மண்டபத்தை வந்தடைந்தார். பரவையார் நினைவாக அங்கேயே தங்கிவிட்டார் சுந்தரர். பகலவன் மேற்குக் கடலில் மறைந்தான். எம்பெருமானின் திருவைந்தெழுத்தை உணரப் பெறாத அறிவற்ற வஞ்சகர் நெஞ்சம்போல், பெரிய வானத்தில் இருள் சூழந்து படர்ந்தது. திருவெண்ணீற்றின் தூய ஒளி போன்ற திங்கள், பாருக்குப் பாலைப் பொழிந்த வண்ணம் வானத்திலே பொங்கி எழுந்தது. நிலவிலே அல்லி மலர்ந்தது. குளிர் தென்றல் மிதமாக வீசிக் கொண்டிருந்தது. தேவாசிரிய மண்டபத்திலிருந்த சுந்தரர்க்கு குளிர் நிலவும், குளிர் தென்றலும், காமன் தொடுத்த கணையால் துன்பத்தை கொடுத்தன. அதே வெள்ளி நிலவின் பொன்னொளியில் பரவையாரும், நிலாமுற்ற மேடையில் நவரத்தினங்களால் அழகு செய்யப்பட்ட அழகிய மலர் தூவிய மஞ்சத்தில், தோழியருடன் அமர்ந்திருந்தாள். பரவையாருக்கும் சுந்தரர் நிலைதான்! பரவையார் தோழியரைப் பார்த்து, என் உயிர்த்தோழியர்களே! நாம் பூங்கோயிலுக்குள் நுழையும் போது சந்தித்த அந்த சுந்தர அழகன் யார்? என்று ஏக்கத்தோடு வினவினாள். அதற்கு தோழியருள் ஒருத்தி ஓ! அவரா தலைவி! அவர்தான் தம்பிரான் தோழர் என்பவர். அவர் எம்பெருமான் திருவருளால் தடுத்தாட்கொள்ளப்பட்டவர். எம்பெருமானின் அன்புத்தொண்டர்! உங்கள் சுந்தரர்-நம்பியாரூரர்! என்று விடையிறுத்தாள். தோழியர் மொழிந்ததைக் கேட்டு, பரவையார் சுந்தரர் மீது மேலும் மையல் கொண்டாள். காதல் மேலிட்டு பெருமூச் செறிந்தாள். மன்மதன் தொடுத்த மலர்க்கணையில் மனம் வாடி மலர்ப்படுக்கையில் மயங்கிய நிலையில் வீழ்ந்தாள் பரவையார். உணவு செல்லவில்லை; உறக்கம் கொள்ளவில்லை, மலர் பிடிக்கவில்லை; பஞ்சணை நொந்தது. மனம் வாடினாள். வருந்தினாள். காதல் கடலில் வீழ்ந்து கரையேறமுடியாது தவித்தாள்.

ஆலாலசுந்தரரையும், கமலினியையும் இம்மண்ணுலகில் பிறக்குமாறு கட்டளையிட்டருளிய பெருமான் அன்றிரவு தம் அடியவர் கனவில் எழுந்தருளி, பரவையாருக்கும், சுந்தரருக்கும் திருமணம் செய்து வையுங்கள் என்று பணித்தார். பின்னர் இறைவன் சுந்தரர் கனவில் எழுந்தருளி, பரவையாரை உனக்கு மணம் செய்து வைக்குமாறு எமது அடியவர்கட்கு ஆணையிட்டுள்ளோம் என்று அருளியபடியே, பரவையார் கனவிலும் தோன்றி, உன்னைத் தம்பிரான்தோழன் திருமணம் புரிந்து கொள்வான் என்றும் திருவாய் மலர்ந்து அருளி மறைந்தார். பொழுது புலர்ந்தது! சிவநேச செல்வர்கள் திரளாக வந்து சுந்தரரை வணங்கினர். இறைவன் கனவிலே தோன்றி தங்களுக்கு பணித்த அன்பு கட்டளையைக் கூறினர். சுந்தரர் அகமும் முகமும் மலர்ந்தார். அதுபோலவே அவ்வன்பர்கள், பரவையாரையும் சந்தித்து சர்வேசுவரனின் சித்தத்தைச் சொல்லினர். பரவையாரும் பரவசம் மிகக் கொண்டாள். அனைவரும் இவர்கள் திருமணத்திற்கான ஏற்பாடுகளைத் தொடங்கினர்.ஓர் சுபயோக சுபமுகூர்த்தத்தில் மண்ணும் விண்ணும் வியக்கும் வண்ணம் சுந்தரர்க்கும் பரவையாருக்கும் மிக்க சிறப்புடன் திருமணம் நடந்தேறியது.பரவையாரும் சுந்தரரும் மலரும் மணமும் போல-மகரயாழும் இசையும் போல-அடியார்களும் திருவெண்ணீறும் போல-இல்லறத்தில் இணைந்தனர்.இருவரும் சிவபக்தியுடன் இல்லறத்தை இனிது நடத்த வரலாயினர். இல்லற தர்மப்படி அடியார்களுக்கு விருந்தளிக்கும் திருத்தொண்டினைத் தவறாது நடத்தினர் இத்தெய்வீகத் தம்பதிகள். அடியார் சேவையும், ஆண்டவன் சேவையும் அவர்களுக்கு அகமகிழ்வை கொடுத்தது. ஒருநாள் சுந்தரர் மட்டும் தனியாக கோயிலுக்கு வந்தார். கோயிலிலுள்ள தேவாசிரிய மண்டபத்தில் தொண்டர்கள் பலர் கூடியிருந்தனர். இறைவனை வழிபடுவது எளிது; அவர்தம் அடியார்களை வழிபடுவது அரிது; அடியார்களை வணங்குவதற்குரிய தகுதியும், பக்தியும் நமக்கு ஏற்படவில்லையே என்று எண்ணினார். அவர்களை மனத்தால் போற்றினார். இவ்வடியார்களுக்கெல்லாம் நான் அடியேனாகும் நாள்தான் என்றோ? என்று எண்ணியவாறு, அடியார்களை மனத்தால் தியானித்தவாறு சற்று ஒதுங்கிச் சென்றார். தேவாசிரிய மண்டபத்தில் கூடியிருந்த அடியார்களுள் விறல் மிண்ட நாயனாரும் ஒருவர். இவர் சுந்தரரது செயலைத் தவறாகப் புரிந்து கொண்டார். சுந்தரது, ஒப்பற்ற நல்ல எண்ணத்தை உணர முடியாது போன விறல்மிண்டர் அவர் மீது சினங்கொண்டார். சுந்தரர் செவிகளில் விழுமாறு, முதலில் வணங்கத்தக்க தேவாதி தேவர்கள் இந்த தேவாசிரிய மண்டபத்தில் கூடியிருப்பதைப் புறக்கணித்துவிட்ட கோயிலுக்குள் சென்று என்ன பயன்? வன்றொண்டன் அடியார்களுக்கு புறம்பானவன். அவனை வலிய ஆட்கொண்ட வீதிவிடங்கப் பெருமானும் இவ்வடியார்களுக்கு புறம்பானவன் என்று கடுமையாக சொன்னார். விறல்மிண்டர் மொழிந்தது கேட்டு, சுந்தரர், விறல்மிண்டர் அடியார்களிடத்து கொண்டுள்ள பக்தி எத்துணை சிறப்புடையது என்று எண்ணிப் பெருமை கொண்டார். அந்த எண்ணத்துடனேயே கோயிலுக்குள் சென்றார். வீதிவிடங்கப் பெருமானை தொழுது, சுவாமி! அடியார்களுக்கெல்லாம் அடியானாகும் பேரின்ப நிலையைத் தந்தருள வேண்டும்! என்று பிரார்த்தித்தார் சுந்தரர். அக்கணமே எம்பெருமான் எழுந்தருளி, தமது அடியார்கள் பெருமையையும், திறத்தினையும் மொழிந்து, அவர்களைப் பற்றி பொருள்மிக்க பைந்தமிழ் பாக்களால் பாடுமாறு திருவாய் மலர்ந்தார். ஐயனின் ஆணைகேட்டு, அஞ்சி நடுங்கிய ஆரூரர், ஐயனே! திருத்தொண்டர்களைப் பாடுவதற்கு இந்த எளியேன் எவ்வித தகுதியும் உடையவன் அல்லன். அடியார்களின் வரலாற்றினையும், பெருமையினையும், பக்தியின் சிறப்பினையும் சற்றும் அறியாதவனாகிய நான், எவ்வாறு அவர்களை விரித்துரைக்கும் திருப்பதிகத்தைப் பாடுவேன்? ஐயனே! இவ்வடியார்களைத் துதித்து  இவர்களின் பெருமையையும் புகழையும் செந்தமிழ்ப் பாக்களால் பாடிடும் திறத்தினை அடியேனுக்கு தந்தருளல் வேண்டும்! என்று பக்திப் பெருக்கோடு இறைஞ்சி நின்றார்.

உலகம் உய்ய, வேதங்களை அருளிச் செய்த எம்பெருமான், தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என்று அடி எடுத்துக் கொடுத்து பாடும்படி பணித்தருளினார். சுந்தரர் மெய்யுருக, பரமனின் பாதகமலங்களைப் பணிந்தவாறு, தேவாசிரிய மண்டபம் சென்றார். திருத்தொண்டர்களை வணங்கினார். எம்பெருமான் திருவருளினால் தொண்டர்களின் தூய சரித்திரத்தைத் தொகுத்து விரித்துக்கூறும் திருப்பதிகத்தை இனிய தமிழில் பாடி மனம் குளிர்ந்தார் சுந்தரர்! அத்திருப்பதிகமே திருத்தொண்டத் தொகையாகும். இவ்வாறு, எம்பெருமான் திருவருளினாலே திருத்தொண்டத்தொகையைப் பாடியருளிய சுந்தரர், முப்பொழுதும் முக்கண் அண்ணலின் தாள் பணிந்து பரவையாரோடு இனிது வாழ்ந்து வந்தார். அந்நாளில், நாவலூரை அடுத்துள்ள குண்டையூர் என்னும் தலத்தில் பரமனிடத்தும், அடியார்களிடத்தும் பேரன்புடைய குண்டையூர்க்கிழார் என்பவர் வாழ்ந்து வந்தார். இப்பெரியார், சுந்தரமூர்த்தி சுவாமிகளிடம் எல்லையில்லா அன்பும், பக்தியும் பூண்டிருந்தார். தொண்டர்களுக்கு விருந்தளித்துத் திருத்தொண்டு புரிந்துவரும் சுந்தரமூர்த்தி நாயனாரின், திருத்தொண்டிற்கு தேவையான அளவு நெல், பருப்பு, வெல்லம் முதலிய பொருட்களை குண்டையூர்க்கிழார், தட்டாமல் அனுப்பிக் கொண்டிருந்தார். ஒருமுறை மழையின்றி பயிர்கள் வாடின. நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது. இதனால், பரவையார் மாளிகைக்கு குண்டையூர் கிழாரால் வழக்கம்போல் தானியங்களைத் தாராளமாக அனுப்ப முடியாது போனது. அப்பெரியார் மனம் புண்பட்டார். எம்பெருமானிடம் தமது குறையை சொல்லி இறைஞ்சினார். கண்ணுதலார் அடியார் கனவில் எழுந்தருளி, அன்பு உளம் வருந்தற்க! சுந்தரர் பொருட்டு உமக்கு வேண்டியளவு நெல்லினைத் தந்துள்ளோம் என்று திருவாய் மலர்ந்தார். எம்பெருமான் குபேரனுக்கு கட்டளையிட்டு வானத்தை மறைக்குமளவிற்கு, நெல்லை மலை போல் குண்டையூர் முழுவதும் குவிந்திடச் செய்தார். குண்டையூர்க்கிழார் அந்த நெல்மலையைக் கண்டு அதிசயித்தார். சுந்தரரின் பெருமையையும், எம்பெருமானின் திருவருளையும் எண்ணிப் பார்த்து, மகிழ்ந்த குண்டையூர்க் கிழார், இந்நெல் மலையை எங்ஙனம் திருவாரூர் பரவையார் திருமாளிகைக்கு அனுப்புவது என்று நினைத்து திகைத்தார். இத்தகைய வியக்கத்தக்க இறைவனின் அருட்கருணையை, சுந்தரமூர்த்தி சுவாமிகளிடம் தெரிவிக்கும் பொருட்டு திருவாரூருக்கு புறப்பட்டார் குண்டையூரார். அதற்குள் எம்பெருமான், சுந்தரமூர்த்தி நாயனார் கனவில் எழுந்தருளி, குண்டையூரில் நெல்லை மலை போல் குவித்துள்ளோம் என்று அருள்வாக்கு சொன்னார். குண்டையூரில் எம்பெருமான் நடத்திய அதிசயத்தை காணும் பொருட்டு, குண்டையூருக்குப் புறப்பட்டார் சுந்தரர்.வழியிலேயே அடியார்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டனர். ஆரத்தழுவி அகமகிழ்வு பூண்டனர். குண்டையூர்க்கிழார் சுந்தரரை வணங்கி எதிர் கொண்டு அழைத்து, தேவரீருக்கு எவ்வித இடர்பாடுமின்றி நெடுங்காலமாக அடியேன், செய்துவரும் திருத்தொண்டிற்கு இப்பொழுது சற்று தடை ஏற்பட்டிருந்தது. அது கண்டு, கண்ணுதலார் கருணைகாட்டி, தேவரீர் அன்பிற்காக எமக்கு நெல்மலையைக் குவித்தருளினார். அந்த நெல்மலை, மனிதர்களால் அகற்றப்பட முடியாத அளவிற்கு ஓங்கி உயர்ந்து காணப்படுகிறது. அதனை எவ்வாறு தேவரீர் மாளிகைக்கு அனுப்புவது! என்று விண்ணப்பம் செய்தார். சுந்தரர் அடியாரின் அன்பிற்கு தலைவணங்கினார். அவரோடு இனிது உரையாடிய வண்ணம் குண்டையூர் வந்தடைந்தார் சுந்தரர்! நெல்மலையைக் கண்டு வியந்தார்! அவர், குண்டையூர்க்கிழாருடன், திருக்கோளிலி என்னும் பகுதிக்கு சென்றார். அங்கு எழுந்தருளியிருக்கும் இறைவனைப் பணிந்து, நெல்மலையை திருவாரூருக்கு சேர்க்கும் பொருட்டு, நீள நினைத்தடியே எனத் தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடினார். அப்பொழுது வானத்திலே அசரீரி ஒலித்தது.

இன்றிரவு நம்முடைய பூதகணங்கள், பரவையார் மனையளவு மட்டுமின்றி திருவாரூர் முழுவதும் நிறையுமாறு நெல் மலையினைக் கொண்டு போய் சேர்க்கும். இறைவன் விண்வழியே மொழிந்தது கேட்டு சுந்தரர் மனம் மகிழ்ந்தார். சுந்தரர், குண்டையூர்க்கிழார் இல்லத்திற்கு சென்று அவரோடு அமுதுண்டு மகிழ்ந்து இருந்தார்.மறுநாள் குண்டையூர்க் கிழாரிடம் விடை பெற்றுக் கொண்டு திருவாரூருக்கு புறப்பட்டார் சுந்தரர். அன்றிரவு சிவபெருமானின் ஆணைப்படி பூதகணங்கள் குண்டையூரிலுள்ள நெல்மலையை எடுத்துச் சென்று பரவையார் மாளிகையிலும், திருவாரூர்ப் பெருவீதிகளிலும் நிரப்பினர். பொழுது புலர்ந்தது. ஊர் முழுவதும் நிரம்பியிருக்கும் நெற்குவியலை கண்ட மக்கள், சுந்தரமூர்த்தி சுவாமிகளின் பெருமையை வானளாவப் புகழ்ந்தனர். சுந்தரமூர்த்தி சுவாமிகள், அவரவர் வீட்டின் முன்னே உள்ள நெற்குவியலை அவரவர்களே, தத்தம் இல்லத்தில் சேமித்து வைத்துக் கொள்ளலாம் என்று ஊர் முழுவதும் அறிவித்தார். சுந்தரர், உலகம் வியக்கப் பல அதிசயங்களை நிகழ்த்திய வண்ணம் புகழ் பொங்க வாழ்ந்து வந்தார். இந்நாளில், குண்டையூர்க்கிழாரைப் போலவே, ஆரூரரிடம் உழவலன்பு பூண்டுள்ள அன்பன் ஒருவர் திருவாரூரை அடுத்துள்ள திருநாட்டியாத்தான் குடி என்னும் திருத்தலத்தில் வாழ்ந்து வந்தார். அவர் பெயர் கோட்புலி நாயனார். ஒருமுறை கோட்புலி நாயனார் விரும்பி அழைத்ததன் பொருட்டு, சுந்தரர், பல சிவத்தலங்களை வணங்கியவாறு திருநாட்டியத்தன் குடிக்குப் புறப்பட்டார். கோட்புலியார், சுந்தரரை எதிர்கொண்டு அழைத்து மகிழ்வுடன் தமது திருமாளிகைக்கு அழைத்து சென்றார். கோட்புலியார், சுந்தரரை நவரத்தின மணிகளினாலாகிய பசும்பொற் பீடத்தில் அமரச் செய்து அவரது பாதகமலங்களைத் தூய நீராட்டினார். அப்பாத நீரை தம் மீதும், தமது குடும்பத்தார் மீதும் தெளித்துக் கொண்டார். மாளிகை முழுவதும் தெளித்தார். கலவைச் சந்தனம், அகிற் சாந்து, கஸ்தூரிக் குழம்பு வகைகள், பலவித பரிவட்டங்கள் முதலியவற்றையும் வரிசையாக வைத்து முறைப்படி வழிபட்டுத் தொழுதார். திருவமுது செய்வித்து பெருமகிழ்ச்சி பூண்டார். தமது அருந்தவப் புதல்வியர்களாகிய சிங்கடியார், வனப்பகையார் இருவரையும் சுந்தரர் திருவடிகளை வழிபடச் செய்தார். எம்மையாட்கொள்ளும் எந்தையே! இவ்விருவரும் எம் புதல்வியர்கள்! இவள் சிங்கடியார். இவள் வனப்பகையார். இவ்விருவரையும் ஐயன் அடிமைகளாக ஏற்றுக்கொண்டு, அவர்கள் உய்யுமாறு அருள்புரிதல் வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொண்டார் கோட்புலியார். சுந்தரர் அப்பெண்மணிகளை வாழ்த்தி தம்முடைய மக்களாக ஏற்றுக் கொண்டார். அவர்கள் வேண்டுவனவற்றை எல்லாம் அளித்தார். எல்லோருமாக சிவாலயத்துக்கு சென்றனர். சுந்தரர், கோட்புலி நாயனாரின் தொண்டினை சிறப்பித்து பதிகம் ஒன்றைப் பாடினார். ஓரிரு தினங்களில், அவரிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்ட சுந்தரர், திருவலிவலம் வழியாக திருவாரூரை வந்தடைந்தார். திருவாரூரில் தங்கியிருந்து அனுதினமும் தியாகேச பெருமானைத் தண் தமிழ்ப் பதிகங்களால் வழிபட்டு வந்தார். திங்கள் பல தாண்டின. திருவாரூரில் பங்குனி உத்திரத் திருவிழா நெருங்கியது. ஆண்டுதோறும் அம்பலத்தரசரின் இவ்வானந்தத் திருவிழா, விண்ணவரும் மண்ணவரும் வியக்கும் வண்ணம் மிக்க கோலாகலத்துடன் நடைபெறும். இத்திருவிழா காலத்தில் பரவையார், பரமனடியார்களுக்கு தான தருமங்கள் செய்வாள். அம்பலத்திலே ஆண்டவன் சன்னிதானத்தில் அழகு நடனம் ஆடிக் களிப்பாள். இவ்வாண்டும் அதுபோலவே அடியார்களைப் போற்றுதற்குத் தேவையான பொன்னும், பொருளும் திரட்ட சுந்தரர் அன்பர்களோடு பரவையாரிடம் விடைபெற்றுக் கொண்டு, புகலூருக்கு புறப்பட்டார். புகலூர் தலத்தை அடைந்த சுந்தரர், அவ்விடத்தில் குடிகொண்டிருக்கும் சடைமுடிப் பெருமானிடம், தாம் வந்துள்ள கருத்தினை கூறி பதிகம் ஒன்றைப் பாடினார். அன்றிரவு ஆரூரர், அன்பர்களுடன், ஆலயத்திற்கு அருகிலுள்ள எந்த மடத்திலும் சென்று துயிலாமல் முற்றத்தில் துயில்கொள்ள விருப்பங்கொண்டார். திருக்கோயிலின் புறத்தே, திருப்பணிக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த சுட்ட செங்கற்கள் பலவற்றைக் கொணர்ந்து உயரமாக பீடம் அமைத்து அதன் மீது தமது வெண்பட்டாடையை விரித்து படுத்துக் கொண்டார். சுந்தரர், துயிலுணர்வு நீங்கி எழுந்து பார்த்தபோது, எம்பெருமானுடைய பேரருளினால் செங்கற்கட்டிகள் அனைத்தும் செம்பொன் கட்டிகளாக திகழக் கண்டார். பேரின்பப் பெருக்குடன் அகமகிழ்ந்த சுந்தரர், அன்பர்களுடன் ஆனந்தக் கூத்தாடினார். பைந்தமிழ்ப் பாக்களால் பரமனின் பாதங்களைப் பணிந்தார். அங்கிருந்து பொற்குவியலுடன் சுந்தரர் பல சிவத்தலங்களை சேவித்த வண்ணம் திருவாரூரை வந்தடைந்தார். பரவையாரிடம் புகலூர் பெருமானின் திருவருளை வியந்து கூறி ஆனந்தம் பூண்டார்.

ஒருசில நாட்களில், மீண்டும் பரவையாரிடம் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டார். நன்னிலத்துப் பெருங்கோயிலை வந்தடைந்தார். அங்கு எழுந்தருளியிருக்கும் பெருமானின் திருவடியைத் தொழுது பதிகப் பாமாலையினைப் புனைந்து பணிந்தேத்தினார். அன்றிரவு எம்பெருமான், சுந்தரரின் கனவில் எழுந்தருளி திருமழிப்பாடிக்கு வர மறந்தனையோ? என்று திருவாய் மலர்ந்து அருளி மறைந்தார். சுந்தரர் விழித்தெழுந்தார். எம்பெருமானின் ஆணை கேட்டு புளகாங்கிதமடைந்தார். அப்பொழுதே அன்பர்களுடன் புறப்பட்டு, காவிரியைக் கடந்து, வடகரையை அடைந்து திருமழப்பாடி என்னும் தலத்தை வந்து சேர்ந்தார். அங்குள்ள பெருமானைப் பணிந்து, பொன்னார் மேனியனே புலித்தோலையரைக் கசைத்து எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடி பெருமையுற்றார். ஓரிரு நாட்களில் அங்கிருந்து புறப்பட்டார். காவிரியாற்றின் இருபக்கங்களிலும் உள்ள திருப்பதியங்களை வழிபட்ட வண்ணம் மேற்கு நோக்கி சென்ற திருவானைக்காவை அடைந்தார். அத்தலத்திலுள்ள தொண்டர்கள் ஆரூரரை வரவேற்று மகிழ்ந்தனர். அன்பர்கள் புடைசூழ, ஆரூரர் அருள் சுரக்க பக்திப் பாடல்களை பாடிக்கொண்டே கோயிலை அடைந்து, பெருமானை வழிபட்டு பதிகங்கள் பல பாடினர். பிறகு அவ்வூரை விட்டுப் புறப்பட்டார். திருப்பாச்சிலாச்சிரமம் என்னும் தலத்தை அடைந்தார். பரமனிடம் பொன் வேண்டிப் பாடினார்! பரமன் சுந்தரரை சோதிக்கக் கருதி பொன்னை கொடுத்தருளாது நின்றார். இறைவனையே தமது தோழராய் கொண்ட சுந்தரர் பொன் தராத அரனை-அவரிடம் தமக்குள்ள அன்பின் உரிமையால் கடிந்து கொள்ளக் கருதி, வைத்தனன் தனக்கே தலையுமென் நாவும் எனத் தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடினார். ஒவ்வொரு பாடலின் கடைசி அடிதோறும், இவர் இல்லாமற் போய்விட்டாரோ? என்று பொருள்படுமாறு, இரவலா தில்லையோ பிராமனார் என்று இகழ்ந்து பாடினார். ஆனால், சுந்தரருக்கே மனம் பெறாத காரணத்தினால், இத்திருப்பதிகத்தின் திருக்கடை காப்பில் ஏசின அல்ல எனப்பாடி தாம் இகழ்ந்துரைத்ததைப் பொறுத்தருள்படி வேண்டினார். சுந்தரருடைய பேரன்பின் சக்தியில் உளம் இரங்கிய பெருமான், பொற்குவை கொடுத்தருளினார். சுந்தரர், எம்பெருமான் அருளிய பொற்குவையடன், புறப்பட்டு திருப்பைஞ்ஞலியை அடைந்தார். அரனார் மலரடி போற்றினார். எம்பெருமான் சுந்தரர்க்கு கங்காள வேடத்துடன் திருக்காட்சி கொடுத்து அருளினார். சுந்தரர், உள்ளம் உருக பதிகம் ஒன்றைப் பாடினார். அங்கிருந்து புறப்பட்டு திருஈங்கோய் மலையைத் தரிசித்துக் கொண்டே கொங்கு நாட்டில் காவிரியின் தென்கரையில் விளங்கும் திருப்பாண்டிக் கொடுமுடி என்னும் திருத்தலத்தை வந்தடைந்தார். அங்கு எழுந்தருளியிருக்கும் கொடுமுடி நாதரைப் போற்றி மற்றுப் பற்றெனக் கின்றி நின்றிருப்பாதமே மனம் பாவித்தேன் எனத் தொடங்கும் நமச்சிவாயப் பதிகம் ஒன்று பாடி உலகமெல்லாம் உய்ய அருள் செய்தார். பின்னர், காஞ்சி நதிக்கரையில் அமைந்துள்ள திருப்போரூர் கோயிலை வந்தடைந்தார். அங்கு எம்பெருமானைக் காணவில்லை. மனம் புண்பட்டார். அங்கிருந்த நந்தி தேவரின் குறிப்பால், எம்பெருமான் இருக்குமிடத்தை அறிந்துகொண்ட சுந்தரர் வயற்பக்கம் வந்தார். அங்கு அவர் கண்ட காட்சி அவரை மெய்மறக்க செய்தது! வயற்புறத்தில் திரிபுரம் எரித்தவன், உழவுத்தொழில் செய்யும் பணியாளனாகவும், அவன் உடம்பில் பாதியைப் பெற்ற பார்வதி தேவியோ பணிப் பெண்ணாகவும் திருக்கோலம் கொண்டிருந்தார்கள். இலக்குமி, சரஸ்வதி, இந்திராணி முதலிய தேவியர்கள், சிவகணத் தலைவர்களும் வயலில் உழுவதும், நீர் பாய்ச்சுவதும் நாற்று நடுவதுமாக இருந்தனர்.

மதுரையிலே திருவிளையாடல்கள் பலபுரிந்த திருசடையான், இன்று தம் பொருட்டு உழவன் திருக்கோலம் பூண்டு நடத்தும் திருக்கூத்து கண்டு ஐயன் மீது ஆராக் காதலுடன் மறையவனரசன் செட்டி தன் தாதை எனத் தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடினார். இங்ஙனம் வயலில் வருந்தி உழுவது யார் பொருட்டு ஐயனே என்று நிலத்தில் வீழ்ந்து பணிந்து வினவியதும், எம்பெருமான் தில்லையம்பலத்திலே நின்றாடுகின்ற தமது நர்த்தனக் கோலத்தினைச் சுந்தரர்க்கு கோயிலுள் காட்டியருளினார். அங்கு சில நாட்கள் தங்கியிருந்து இறை வழிபாடுகளை இடையறாது நடத்திய சுந்தரர் அவ்விடத்தை நீத்து திருவெஞ்சாமக்கூடல், திருக்கற்குடிமலை, திருப்புறம்பய் வழியாக சிவதரிசனம் செய்துகொண்டே கூடலையாற்றூர் என்னும் பதியை அணுகினார். அவ்வூர் அருகே சென்றவர் அங்கு எழுந்தருளியிருக்கும் எம்பெருமானை வணங்காமல், முதுகுன்றத்தினை நோக்கிப் புறப்படலானார். அப்பொழுது எம்பெருமான் அந்தணர் வடிவம் கொண்டு சுந்தரர் முன்னால் எதிர்ப்பட்டார். சுந்தரர் அவரிடம், ஐயனே! திருமுதுகுன்றூருக்கு செல்லும் வழியினை எமக்கு சொல்லும் என்று வினவ அவ்வேதியர், இவ்வழி கூடலையாற்றுக்குப் போகும் வழியாகும் என்று விடை பகர்ந்த வண்ணம் சுந்தரர்க்கு அவ்வூர் எல்லைவரை வழித்துணையாக வழிகாட்டிச் சென்று மறைந்தருளினார். இஃது இறைவனின் திருவருட்செயல்தான் என்று எண்ணிய சுந்தரர் கூடலையாற்றுப் பெருமானைத் தொழுது பாமாலைப் பாடி பின்னர் முதுகுன்றூரை வந்தடைந்தார். முதுகுன்றூர் திருக்கோயிலின் கோபுரத்தை, எல்லையில் நின்றவண்ணம் தொழுது போற்றிய சுந்தரர் திருக்கோயில் புகுந்து, வலம் வந்து வணங்கி, நஞ்சிடை எனத் தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடினார். பொருள் வேட்கையால் பரமனின் பதம் போற்றி மெய்யை முற்றுப்பொடி பூசி என்று தொடங்கும் நம்பி என்ற திருப்பதிகத்தைப் பாடினார். பனிமதிச் சடையார், சுந்தரரின் பாமாலையில் திருவுள்ளம் மகிழ்ந்துருகி, பன்னிரெண்டாயிரம் பொற்காசுகளை கொடுத்தருளினார். பொற்காசுகளைப் பெற்று பெருமகிழ்ச்சி பூண்ட அன்பன், இவற்றை எடுத்து செல்வது எங்ஙனம்? என்று சித்தம் கலங்கியபோது, எம்பெருமான் விண்வழியே, இப்பொற்காசுகளை மணிமுத்தாற்றில் மூழ்கச் செய்து திருவாரூர் திருக்குளத்திலே எடுத்துக்கொள்வாயாக என்று அசரீரி வாக்கால் அருளி மறைந்தார். சுந்தரர், பொன்னின் ஒரு பகுதியை அடையாளமாக வெட்டி எடுத்துக்கொண்டு மணிமுத்தாற்றில் பொன்னை விடுத்தார். அத்திருவிடத்தில் சில காலம் தங்கியிருந்து தொண்டுகள்  பல புரிந்து தொடர்ந்து தமது சில யாத்திரையைத் தொடங்கினார். முதுகுன்றைவிட்டுப் புறப்பட்டசுந்தரர் தில்லையிலே நடனம்புரியும் பரமனின் அற்புத நடனத்தைக் கண்டு களித்து மகிழப் பெரு விருப்பங்கொண்டார்.சித்தத்தை தில்லையில் இருத்திய சுந்தரர், கடம்பூர் முதலிய சிவதலங்களை வணங்கி வழிபட்ட வண்ணம், பேரின்ப வீடு காண அரும்பணி ஆற்றும் அந்தண சிறாக்கள் கூடிவாழும் தில்லையம்பதியை வந்தடைந்தார். தில்லைவாழ் அந்தணர்கள் சுந்தரரை வரவேற்று அம்பலத்துள் அழைத்துச் சென்றனர். சுந்தரர் கண்ணீர் பெருக அம்பலத்தரசின் திருவருட்தாளினை வீழ்ந்து வணங்கி, மடித்தாடு மடிமைக்கண் அன்றியே என்று தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடினார். எம்பெருமானைப் பார்த்து பார்த்து பரவசமடைந்தார். தில்லைவாழ் அந்தணர்களோடு சிலகாலம் தங்கியிருந்து பரமனின் திவ்யதரிசனத்தை அகமாறக் கண்டார். அங்கிருந்து புறப்பட்டு கருப்பறியலூர், பழமண்ணிப் படிக்கரை வழியாகத் திருவாரூர் வந்தடைந்தார். திருக்கோயில் கோபுரத்தை வணங்கிய சுந்தரர் அடியார்களுடன் புற்றிடங்கொண்ட பெருமானைப் பாமாலை சாத்தி வணங்கினார். ஓரிரு தினங்களில் அவ்வூர் அன்பர்களிடம் விடைபெற்றுக் கொண்டு தம்முடன் வந்த தொண்டர்களுடன், சிவநாமத்தை ஜபித்தவாறு ஊர் திரும்பினார். பரவையார் திருமாளிகையை அடைந்த சுந்தரரை, பரவையார் அகமும், முகமும் மலர வரவேற்றாள். அவரது பாதகமலங்களில் நறுமலர்களைத் தூவி வணங்கினாள்.

சுந்தரர் பரவையாரிடம், முதுகுன்றூர் பெருமான் நமக்கு அளித்த பொற்குவியலை மணிமுத்தாற்றில் இட்டோம். இப்பொழுது எம்பெருமான் திருவருளால் அப்பொற்குவியலை இத்திருத்தலத்திலுள்ள கமலாலயப் பொய்கையிலே எடுத்துக்காட்டுவேன். எம்முடன் பொற்றாமரைக் குளத்திற்கு வருவாயாக என்று கூறியவாறு முதுகூரில் நடந்தவற்றை விளக்கினார்.அம்மையார் முகம் கமலம் போல் மலர்ந்தது. அம்மையார் பெரும் வியப்பில் மூழ்கினாள். ஐயனே! தாங்கள் இயம்புவது எமக்கு பெருத்த வியப்பினைக் கொடுக்கிறது. தாங்கள் கூறுவது எங்ஙனம் சாத்தியமாகும்? என்று ஐயத்துடன் கேட்டாள். அவள் இதழ்களில் புன்னகையும் மலரத்தான் செய்தது. சுந்தரர், பரவையாரையும் அழைத்துக் கொண்டு கோயிலுக்கு புறப்பட்டார். பூங்கோயிலினுள் சென்று வான்மீகிநாதரின் பாத கமலங்களைப் பதிகம்பாடிப் போற்றினார். கோயிலை வலம் வந்தார். மேற்கு திசையில் அமைந்துள்ள கமலாலயக் குளத்தை அடைந்தார். கமலாலயத்தில் சுந்தரர் பொற்குவியல் எடுக்கப் போகும் செய்தி எங்கும் பரவியது. அந்த அதிசயத்தைக் காண திருக்குளத்தைச் சுற்றி அன்பர்கள் கூட்டம்! சுந்தரர் பரவையாரைக் கரையில் ஒருபுறம் அமரச் செய்து குளத்துள் இறங்கினார். எம்பெருமானைத் தியானித்த வண்ணம் பொற்குவியலைத் தேடலானார். அவரது பூங்கரத்தில் பொன் என்பதே தென்படவில்லை. சுந்தரர் நீரிடை மூழ்கி, துருவி துருவித் தேடினார். மிக்க சிரமத்துடன் தேடியும் நாடிவந்த பொன் மட்டும் கைக்குக் கூடிவரவில்லை. வாடிய முகத்தோடு, சுந்தரர் நிற்பது கண்டு பரவையார், ஆற்றினில் இட்டுவிட்டு குளத்தினில் தேடுகின்றீரே! என்று நகைப்போடு கேட்டவாறு புன்னகை பூத்தாள். சுந்தரரின் பைந்தமிழ்ப் பாமாலையில் பெரு விருப்பங்கொண்ட எம்பெருமான், வேண்டுமென்றே தான் பொற்றாமரைக் குளத்தில் பொன்னைத் தருவிக்காமல் இருந்தார். ஐயனின் திருவிளையாடல்தான் இதுவும்! என்பதை உணர்ந்தார் சுந்தரர். பழமலைநாதரை மனதில் நினைத்தவண்ணம் பொன்செய்த மேனியீர் எனத் தொடங்கும் பதிகத்தை அன்பு கனிந்துருக, பக்தி பெருகிவர, செந்தமிழ்ப் பூவினால் பாமாலைகளாய்த் தொகுத்து பரமனின் அணிமார்பில் சாத்தினார். பொற்குவியல் அவரது கைக்கு கிட்டவில்லை! சுந்தரர்க்கு வேதனை மேலிட்டது! முதுகுன்றத்தில் தந்தருளிய பொற்குவியலைப் பெற முடியாது வருந்தும் எம் துயரத்தை இப்பரவையார் எதிரிலேயே தீர்த்தருளும் என்ற கருத்துடைய எட்டாவது பாடலைப் பாடினார். அப்படியும் பரமன் மனம் உருகி தமக்கு அருள் சுரக்காதது கண்டு வருந்தினார். அருட்பெருங்கூத்தனே! ஆனந்தத் தாண்டவனே! பழமலைநாதரே! பொற்குவியலை இப்பரவையார் முன்னே தந்தருள்வாயாக! என்னும் பொருள்பட, ஏத்தாதிருந்தறியேன் எனத் தொடங்கும் ஒன்பதாவது பாட்டால் இறைவனைத் துதித்துப் பாடியதும், இறைவன் சுந்தரர்க்கு திருவருள் புரிந்தார். பொற்குவியலை அவரது கரத்திற்குத் தட்டு பட செய்தார். மகிழ்ச்சி பொங்க, பொன்னோடு கரையேறினார் சுந்தரர். பொற்றாமரை குளத்தில் கூடியிருந்தோர் பெரும் வியப்பில் ஆழ்ந்தனர். பரவையார் அதிசயித்து நின்றாள். சுந்தரர், பொன்னின் மாற்றினை உரைத்துப் பார்த்து தாம் அடையாளமாக எடுத்து வந்த பொன்னோடு ஒப்பிட்டுப் பார்த்தார். சற்று மாற்றுக் குறைந்திருக்கக் கண்டு, இதுவும் திருநாவலுரான் திருவிளையாடலே என்று எண்ணியவராய் மீண்டும் திருப்பாடல் ஒன்றைப் பாடினார். அக்கணமே பொன்னின் மாற்று சரியானது. சுந்தரர் மகிழ்ச்சி கடலில் மூழ்கினார். பரவையார், இறைவன் தமது நாயகியிடம் கொண்டுள்ள திருவருளை நினைத்து வியந்தார். அனைவரும் ஆனந்தக் கூத்தாடினார்கள். குளத்தில் சூழ்ந்திருந்த தொண்டர் பலர், சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருவடியைப் போற்றினர். அவரை வாழ்த்தி மகிழ்ந்தனர். அவ்வாண்டு பங்குனி உத்திரப் பெருவிழாவை சுந்தரரும் பரவையாரும் வெகு விமர்சையாக கொண்டாடினர். சுந்தரரும் பரவையாரும் சில காலம் சிவத்தொண்டுகளைப் புரிந்து வாழ்ந்து வந்தனர். சுந்தரர் திருத்தல யாத்திரை புறப்பட எண்ணினார். ஒருநாள் பரவையாரிடம் விடை பெற்றுக் கொண்ட தொண்டர்கள் புடைசூழ திருத்தலங்களை தரிசிக்கப் புறப்பட்டார். திருநள்ளாறு, திருக்கடவூர், திருவலம்புறம், திருச்சாய்க்காடு, திருவெண்காடு, திருநனிப்பள்ளி, திருச்செம்பொன்பள்ளி, திருநின்றியூர், திருநீடுர், திருப்புன்கூர், திருக்கோலக்கா முதலிய பதிகளில் எழுந்தருளியிருக்கும் தேவதேவரின் தூய திருவடிகளைப் பணிந்து துதித்தார். திருப்பதிகம் பலவும் பாடி உள்ளம் உருகினார். சீர்காழியை வந்தடைந்தார். திருத்தோணியப்பரைத் தொழுது வணங்கி பதிகம் பாடினார்.

திருஞானசம்பந்தர் திருவடிகளை மனத்தால் தியானித்தவண்ணம் குருகாவூர் என்னும் திருப்பதியை நோக்கி புறப்பட்டார். குருகாவூர் செல்லுகையில் சுந்தரரும் அவர் தம் தொண்டர்களும் வழிநடந்த களைப்பினாலும், தாகத்தினாலும், பசியினாலும் உடல் தளர்ந்தனர். இங்ஙனம் இவர்கள் துயறுருவதை உணர்ந்த சிவபெருமான் இவர்கள் வரும் வழியே குளிர்ப்பந்தல் ஒன்றை அமைத்தார். தாம் வேதியர் வடிவம் பூண்டு, சுந்தரரின் முன்னே எழுந்தருளினார். சுந்தரரும், அடியார்களும் தணலில் வெந்து வாடிய மலர் போல், உடல்வாடி வந்து கொண்டிருக்கும் பொழுது சற்றுத் தொலைவில் குளிர்ப்பந்தல் ஒன்று இருப்பது கண்டு அப்பந்தலை விரைந்து வந்து அடைந்தனர். அங்கு நின்று கொண்டிருந்த வேதியரை வணங்கி அனைவரும் உள்ளே சென்று அமர்ந்தனர். வேதியர் வேடத்திலிருந்த வேதமுதல்வன், சுந்தரர்க்கும் அவரது கூட்டத்தாருக்கும் உணவும், தண்ணீரும் அளித்தார். அனைவரும், வேதியரைப் போற்றி துதித்தனர். சிவநாமத்தை தியானித்த வண்ணம் களைப்பு மேலிட துயின்றனர். சுந்தரர்க்குத் தொண்டு புரிந்த தில்லைநாதர், மறைந்தார். தம்மோடு தண்ணீர்ப் பந்தலையும் மறையச் செய்தார். துயிலெழுந்த சுந்தரரும், தொண்டர்களும் பந்தலையும், அந்தணரையும் காணாது திகைத்தனர். இதுவும் எம்பெருமானின் திருவருட் கருணை என்பதை உணர்ந்து மனம் மகிழ்ந்தார் சுந்தரர்! இத்தனையாம் ஆற்றை அறிந்திலேன் எனத் தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடினார். அங்கிருந்து தமது யாத்திரையை தொடர்ந்தார். குருகாவூர், வெள்ளடை, திருக்கழிப்பாலை போன்ற தலங்களை தரிசித்தவாறு தில்லையை அடைந்தார். தில்லைவாழ் அந்தணர்கள் சுந்தரரை எதிர்கொண்டு அழைத்தனர். அவர்களோடு சேர்ந்து நடராஜ தரிசனத்தைக் கண்டுகளித்தார் சுந்தரர். அங்கிருந்து புறப்பட்டு நாவலூர் வழியாக திருக்கழுக்குன்றத்தை வந்தடைந்தார். திருக்கழுக்குன்ற சிவாலய தரிசனத்தை முடித்துக் கொண்டு திருக்கச்சூர் என்னும் தலத்தை வந்தடைந்தார். அத்தலத்தில் காட்சிதரும் மாதொருபங்கனைப் பணிந்தவாறு, பசியினாலும், வழி நடந்த களைப்பினாலும், உடல் வாட்டத்துடன் மதிற்புறத்தே வந்து தங்கினார். பசியால் வருந்திடும் சுந்தரரின் பசியினைத் தீர்க்கத் திருவுள்ளம் கொண்ட திருக்கச்சூர் பெருமான் முன்போல் வயது முதிர்ந்த அந்தணர் வடிவம் பூண்டார். கையிலே திருவோடு ஒன்றை ஏந்திக்கொண்டு, மதிர்ப்புறத்தே வந்தார். அவ்வேதியர், சுந்தரரைப் பார்த்து, நீர் உம் அன்பர்களுடன் பசியால் மிகவும் வருந்தி இளைப்புற்றிருக்கின்றீர். உங்கள் பசி வேட்கை நீங்கும்படி இப்பொழுதே சென்று நான் உமக்கு, சோறு இரந்து வந்து கொடுக்கிறேன். நீர் எங்கும் போய்விடாமல் எமக்காக இங்கேயே சற்று நேரம் அமர்ந்திரும் என்று செப்பினார். சுந்தரரும் வேதியரின் இன்மொழிக்கு மறுமொழி செப்பினாரில்லை. வேதமுதல்வன், வெள்ளிய தூய வெண்ணீற்றின் அழகு திகழவும், அழகிய முப்புரிநூலின் பேரொளி அசைந்து விளங்கவும், பாதகமலங்கள் நிலவுலகில் தோயவும், கண்டவர் மனமெல்லாம் உருகவும், கடும் பகலில், திருக்கச்சூர் வாழும் அந்தணர்களின் வீடுதோறும் சென்று சோற்றினை இரந்து பெற்றார். தடுத்தாட்கொண்டருளிய தம்பிரான் தோழரின் பசியைப் போக்க, இத்தகைய அன்புச் செய்ல் புரிந்த ஈசன், பிச்சை எடுத்துப் பெற்ற அமுதுடன் ஆரூரார் முன் வந்தார். அமுதினைக் கொடுத்தார். இவ்வமுதினையும், காய்கறிகளையும் உண்டு பசியைத் தீர்த்துக் கொள்வீர்களாக! என்று முகம் மலர திருவாய் மலர்ந்தார் ஈசன். சுந்தரரும், அடியார்களும் அமுதினை உண்டு மகிழ்ந்தனர். அதற்குள், அருள் வடிவமான அண்ணலார் மறைந்தார். வேதியர் மறைந்தது கண்டு சுந்தரர் மனம் வாடினார். எம்பெருமான், தம்பொருட்டு செய்த அருஞ்செயலை எண்ணிக் கலங்கினார். நாதச்சிலம்பணிந்த சேவடி நோவ நண்பகலில் நிலவுலகில் எழுந்தருளிய ஐயனின் பெருங்கருணையை எண்ணிப் பார்த்து மனம் உருகினார். விழிகளில் நீர் வழிய, முதுவாயோரி எனத் தொடங்கும் திருப்பதிகம் ஒன்றைப் பாடிப் பணிந்தார். அங்கு திருக்கூட்டத்தாருடன் சில நாட்கள் தங்கியிருந்தார். அங்கிருந்து புறப்பட்டு காஞ்சிபுரத்தை வந்தடைந்தார். சுந்தரரின் வருகையைப் பற்றி முன்னதாகவே அறிந்த காஞ்சிநகரத்து மெய்யன்பர்கள் சுந்தரரை எதிர் கொண்டழைக்க மேளவாத்தியங்களுடன் காஞ்சி நகரின் எல்லைக்கு வந்தனர். சுந்தரரைப் பூரண பொற்கும்ப கலசங்களுடன் மலர் தூவி எதிர்கொண்டழைத்து நகரத்துக்குள் பிரவேசித்தனர். சுந்தரர் அன்பர்களும், அடியார்களும் புடைசூழ, மங்கல இசைகள், வேத முழக்கத்தோடு சேர்ந்து ஒலிக்க, அலங்காரமாக விளங்கும் பெருமாட வீதி வழியே திருக்கோயிலை வந்தடைந்தார். சுந்தரர், சிரமீது கரங்கூப்பிக் கொண்டு, அகத்தெழுந்து எழில் மேவும் அணி மாளிகைகள் பலவற்றையும் தனித்தனியே வலம் வந்து வழிபட்டவாறே, திரு ஏகம்பர் திருச்சன்னதிக்குள் சென்றார்.

காமாட்சி அம்மையார் வழிபடும் ஏகம்பவாணரின் திருவடியை வீழ்ந்து வணங்கி பக்தி வெள்ளத்தில் மூழ்கினார். அருள்வடிவமாய் நின்றார். பக்திப்பெருக்கால் பரவசமாகிப் பாடிப் பரவினார். சுந்தரர் காமாட்சி அம்மனையும் தரிசித்து சிந்தை குளிர்ந்தார். காஞ்சிபுரத்திலேயே திருத்தொண்டர்களுடன் சில நாட்கள் தங்கியிருந்து அடுத்துள்ள பல சிவன் கோயில்களையும் வழிபட்டு வந்த சுந்தரர், மீண்டும் தமது சிவயாத்திரையைத் தொடர்ந்தார். திருவன் பார்த்தான், பனங்காட்டூர், திருமாற்பேறு, வல்லம் முதலிய தலங்களை தரிசித்து துதித்த வண்ணம் காளத்தி மலையை அடைந்தார். கண்ணப்பருக்கு அருள் தந்து, தம் அடிச் சேர்த்துக் கொண்ட குடுமித்தேவரின் திருவடியைப் போற்றி, செண்டாடு விடையாய் எனத் தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடி மகிழ்ந்தார். அங்கிருந்து புறப்பட்டு திருவொற்றியூரை வந்தடைந்தார் சுந்தரர்! சுந்தரர் திருக்கோபுரத்தை வணங்கியவாறு திருமாளிகையினை வலம் வந்து, பாட்டும் பாடிப் பரவி எனத் தொடங்கும் திருப்பதிகம் ஒன்றைப் பாடினார். திருவொற்றியூரானை விட்டுப் பிரிய மனம் வராத சுந்தரர், திருக்கூட்டத்தாருடன் திருவொற்றியூரிலேயே தங்கலானார். திருவொற்றியூர் என்னும் தலத்தருகே, ஞாயிறு என்னும் ஊரில், வளம் கொழிக்கும் வேளாண்மரபில் ஞாயிறுகிழார் என்னும் பெயருடைய பெருஞ்செல்வர் ஒருவர் வாழ்ந்து வந்தார். இப்பெரியார் செய்த அருந்தவப் பயனாய், திருக்கயிலை மலையில் உமையாளுக்குத் திருத்தொண்டு புரிந்து வந்து மங்கையர் இருவரில் ஒருவரான அநிந்திதையார், அன்புத் திருமகளாய் வந்து பிறந்திருந்தாள். ஞாயிறுகிழார், தமது அழகு மகளுக்கு சங்கிலியார் என்னும் நாமத்தை சூட்டி மகிழ்ந்தார். சங்கிலியார், இறைவன் அருளால் அழகோடும், பக்தியோடும், சிறந்த ஆற்றலோடும், தெய்வத்தன்மை மிக்க பொற்புடைச் செல்வியாய் விளங்கினாள். நாளொரு மேனி கண்டாள். பொழுதொருவண்ணம் கண்டாள். எழில்பொங்கும் மங்கைப் பருவத்தையும் கண்டாள். திருமணப் பருவம் எய்திய சங்கிலியாருக்கு, தங்கள் குலநலத்துக்கும், பண்பிற்கும் தக்கபடி ஒருவரைத் தேர்ந்தெடுத்து மணமுடிப்பது என்ற தீர்மானத்திற்கு வந்தனர் பெற்றோர். பெற்றோர்களின் இத்தகைய உள்ளக் கருத்தினை அவர்களது உரையாடல் பலவற்றுள்ளிருந்து உணர்ந்து கொண்ட சங்கிலியார், பெரும் வேதனையடைந்தாள். தனது லட்சியத்தை பெற்றோர்களிடம் கூற முடியாமல் தவித்தாள். ஒருநாள், தனது எண்ணத்தைக் கூறக்கூடச் சக்தியற்ற நிலையில், அஞ்சி நடுங்கியவளாய் மயக்கமுற்றாள்.எதிர்பாராமல், மகள் மயக்கமுற்று விழுந்ததைக் கண்ட ஞாயிறுகிழாரும், அவரது மனைவியாரும் உள்ளத் தடுமாற்றத்துடன், விரைந்து சென்று குளிர்ந்த நீரைக் கொண்டு வந்து, அம்மையாரின் முகத்தில் தெளித்தனர். சங்கிலியாரும் சற்று நேரத்தில் மூர்ச்சை தெளிந்து எழுந்தாள். பெற்றோர்கள் வேதனையால் பெருமூச்செறிந்தனர். அன்பு மகளே! உனக்கு யாது குறை? எது கருதி இவ்வாறு மயக்கம் ஏற்படும் நிலையை அடைந்தாய்? உள்ளத்தில் எதையாவது எண்ணிச் சொல்ல முடியாமல் தவிக்கின்றாயா? சொல்! தயங்காதே! என்றனர். சங்கிலியார், சற்றும் தயங்காமல் மனதை உறுதிப்படுத்தியவாறு, பெற்றோர்களிடம் தமது உள்ளக் கிடக்கையை வெளியிட்டாள். என் திருமணம் பற்றி நீங்கள் பேசி வருவதை நான் அறிந்தேன். எவருக்காகிலும் என்னை மணம் முடித்து விடவேண்டும் என்பது என் முடிவிற்கு சற்றும் பொருந்தாது. எம்பெருமானின் திருவருளைப் பரிபூரணமாகப் பெற்ற திருவருட் செல்வருக்குத்தான் உரியவளாவேனே தவிர, மற்றெவர்க்கும் அல்ல. அதனால் என்னைத் தடுக்காதீர்கள். நான் திருவொற்றியூரை அடைந்து சிவபெருமான் திருவருள் வழியிலேயே ஒழுகி நிற்க ஆசைப்படுகிறேன். எனக்கு சம்மதம் சொல்லுங்கள். பெற்றோர்களுக்கு இடி இடித்தாற்போல் இருந்தது. பயமும், பீதியும், பரிவும், பாசமும், அச்சமும் எல்லாம் ஒன்றோடொன்று சேர்ந்து அவர்களைக் கதி கலங்கச் செய்தது. இருப்பினும் அவர்கள், சங்கிலியார் கூறியவற்றை வெளியே தெரியாவண்ணம் அப்படியே மறைத்து விட்டனர்.

சங்கிலியாரின் வைராக்கிய குணத்தை உணரப் பெறாதவனாகிய ஒரு செல்வந்தன், சங்கிலியாரைத் தனக்கு மணம் பேச சிலரை ஞாயிறுகிழாரிடம் அனுப்பி வைத்தான். மணம் பேச வந்தவர்களை எங்ஙனம் திருப்பி அனுப்பி வைப்பது என்பது புரியாது, தர்மசங்கடமான நிலைக்கு ஆளான பெற்றோர், சங்கிலியாரைப் பற்றிய உண்மையான விவரங்களைக் கூறுவது சிறப்புடையதன்று என்று நினைத்தவராய், அவர்களிடம் தந்திரமாகப் பேசி, மிக்க சாமர்த்தியமாக திரும்ப அனுப்பினர். இதே சமயத்தில் அச்செல்வந்தன் எதிர்பாராமல் மரணம் அடைந்தான். இந்நிகழ்ச்சி ஞாயிறுகிழார் செவிகளுக்கு எட்டியது. அவரும் மனம் புண்பட்டார். இவ்விவரம் உற்றார் உறவினருக்கும் தெரியவந்தன. இதனால் சங்கிலியாரைப் பற்றிய பல தப்பான எண்ணங்களும், பேச்சுக்களும் மக்கள் மத்தியில் புயலெனப் புகுந்தது. இந்நிகழ்ச்சி நடந்த பிறகு சங்கிலியாரை மணம் பேச உறவினர்களோ, சுற்றத்தார்களோ எவருமே வரவில்லை. பெற்றோர்கள், தெய்வத்தன்மை மிக்க சங்கிலியாரை இனியும் அவளது விருப்பத்திற்கு மாறாக வீட்டில் வைத்துக் கொண்டு இருக்க விரும்பவில்லை. அவளது உள்ளக்கருத்திற்கு ஏற்ப, திருவொற்றியூர் கோயிலில் கொண்டு போய்ச் சேர்த்து விடுவது என்று எண்ணினர். திருவொற்றியூரில் கன்னிமாடம் ஒன்றை அமைத்து சங்கிலியாரை அங்கேயே வாசம் புரிய வழி செய்தனர் பெற்றோர்கள். திருவொற்றியூரில் இறைவன் கோயிலின் பக்கத்தில் கட்டியிருந்த கன்னிமாடத்தில், சங்கிலியார் அருந்தவசியைப் போல் வாழ்வை நடத்தினாள். அம்மையாருக்குப் பணிவிடை செய்ய சேடிகளும், ஏவல் புரியும் பெண்டிர்களும் இருந்தனர். எம்பெருமான் நினைவாகவே வாழ்ந்து வரும் சங்கிலியார், வைகறைப் பொழுது தூய நீராடி, அழகிய நெற்றியில் திருவெண்ணீற்றை அணிந்து கொண்டு,  சேடிகளுடன் மலர்வனம் செல்வாள். விதவிதமான வாசமிகு மலர்களை நிறையப் பறித்து வந்து, வெவ்வேறாக பிரித்து எடுத்து கொள்வாள். அவற்றை சற்றும் கசங்காமல் எடுத்துக் கொண்டு வந்து தனி இடத்தில் அமர்ந்து பல்வேறு திருமாலைகளாக உரிய காலத்திற்கு ஏற்றபடிக் காட்டுவாள். வழிபாட்டுக் காலங்களில் திருமாலைகளை, திருவொற்றியூர்ப் பெருமானின் பாத கமலங்களிலே அன்போடு சாத்தி வழிபடுவாள். உள்ளன்போடு, திருவைந்தெழுத்து மந்திரத்தை இடைவிடாமல் ஓதிக்கொண்டிருப்பாள். இங்ஙனம், கன்னிமாடத்தில் சங்கிலியார் சங்கரனின் செஞ்சேவடிகளுக்குத் திருத்தொண்டு புரிந்தவாறு வாழ்ந்து வரலானாள். சங்கிலியார், கன்னி மாடத்தில் தங்கியிருக்கும் தருணத்தில் சுந்தரர், திருவொற்றியூருக்குத் தமது திருக்கூட்டத்தாருடன் வந்து சேர்ந்தார். மடம் ஒன்றில் தங்கியிருந்து  நாடோறும் எம்பெருமானை வணங்கி வந்தார். ஒருநாள், சுந்தரர் அன்பர்களுடன், ஆலயத்தை வலம் வந்த வண்ணம் மண்டபத்தினுள் புகுந்தார். அவ்வமயம், சங்கிலியார் எம்பெருமானுக்குச் சாத்துவதற்காக, வாசமிகு நறுமலர் மாலையைக் கையில் ஏந்திய வண்ணம் திரை மறைவிலிருந்து வெளியே வந்தாள். நொடிப் பொழுதில் சங்கிலியார், மாலையை அர்ச்சகரிடம் கொடுத்து விட்டு, மின்னல் போலத் திரைக்குள் மறைந்து கன்னிமாடம் சென்றாள். தென்றலாக வந்து மின்னலாக மறைந்த சங்கிலியாரைத் தம் ஊழ்வினைப் பயனாலேயே கண்ணுற்றார் சுந்தரர். அந்த எழிற் பாவையின் ரூப லாவண்யத்தில் தம்மை மறந்து நின்றார். தம் எதிரிலே வானவில் போல் அழகுறத் தோன்றி மறைந்த எழுதாத ஓவியத்தின் ஒப்பற்ற பொன்மேனி அழகில் மனம் பேதலித்துப் போனார். கோவைபடாத முத்தினையும், வண்டுகள் மொய்க்காத மென்மையான அரும்பினையும் ஒத்த சங்கிலியாரைச் சந்தித்த சுந்தரர், மனம் தடுமாறினார். உணர்வு மங்கினார், மையல் நோயின் துன்பம் தாளாது அருகிலிருந்தவர்களிடம் சங்கிலியாரைப் பற்றி விசாரித்தார். இங்கு திரைமறைவிலிருந்து தோன்றி மறைந்தவள் யார்? பொன்னும், மணியும் ஒளியிடும் புத்தொளியின் புதுச்சுவையோடு, அமிழ்தத்தையும் கலந்து, தண்நிலவின் நீர்மையாலே குழைத்துச் செய்த அழகுப் புதுமை பூத்துக் குலுங்குகின்ற புதுமலர் போன்ற பெண்ணொருத்தி என்னை உள்ளம் திரியும்படிச் செய்தனள். அப்பெண்மனி யார்? அவள் எங்குள்ளாள்? என்று வினவினார் சுந்தரர். அருகிலுள்ளோர், அவள் பெயர் சங்கிலியார் என்பதையும், தெய்வத் தன்மை பொருந்திய அவள் அருந்தவத்தினால், எம்பெருமானின் பாதகமலங்களைப் போற்றி வணங்கி வரும் கன்னியராவாள் என்று விடையிறுத்தனர். சங்கிலியாரைப் பற்றிய விவரங்களைத் தெளிவாகத் தெரிந்துகொண்ட சுந்தரர், பரவையாரைப் பரமன் அருளாள் மணம் புரிந்தாற்போல் சங்கிலியாரையும் அடைந்தே தீருவேன் என்று தமக்குள் தீர்க்கமானதோர் முடிவிற்கு வந்தார்.

எம்பெருமானே! உமையாளைப் பொன் திருமேனியில் மறைத்ததுமன்றித் திருச்சடையில் கங்கையையும் மறைத்து எழுந்தருளும் மறை முதல்வனே! எமக்குற்ற துன்பத்தைத் தீர்த்தருள வல்லவர் நீவிர் ஒருவரே! அன்று பரவையாரை எமக்குத் திருமணம் செய்து வைத்த தேவாதி தேவா! இன்று, உமது பாதகமலங்களுக்குச் சாத்த பூமாலையினைத் தொடுத்துக் கட்டி மகிழும் சங்கிலியார் எனும் அழகுக்கோதை, எனது உள்ளமெனும் பூமாலையினை அவிழ்த்து எமக்கு அவள்பால் ஆராக் காதலைத் தோற்றுவிட்டாள். இத்தருணமும் ஐயன், எமக்காக எழுந்தருளி என் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட சங்கிலியாரை எமக்கு அளித்து என் துயரைப் போக்க வேண்டும். உம் திருத்தாளினை எண்ணுகின்ற எனது மன வலிமையை உடைந்து போகுமாறு அவள் செய்துவிட்டாள். இனியாது செய்வதென்பது அறியாது மனம் பேதலித்து நிற்கும் என்னைக் காத்து, அருள் புரியும் என்று இறைஞ்சினார் சுந்தரர். அன்றிரவு சங்கிலியார் நினைவாகவே, ஒருபுறத்தே துயின்றார் சுந்தரர்! எம்பெருமான், சுந்தரரின் கனவிலே எழுந்தருளி, அன்ப! இந்நிலவுலகில் யாவருக்கும் கிட்டாத அருந்தவத்தினையுடைய சங்கிலியாரை, உனது விருப்பப்படி மணம் முடித்து வைப்போம் என்றார். மறை முதல்வன், வேதியர் வடிவம் கொண்டு, சங்கிலியார் கனவிலும் எழுந்தருளினார். சங்கிலியார் செஞ்சடை அண்ணலின் பொன்சேவடிகளைப் பணிந்து, தேவரீர்! இந்த அடிமை உய்யும் பொருட்டு எழுந்தருளிய பெரும் பேற்றுக்கு யாது கைம்மாறு செய்வேன்? என்று சொல்லிப் பரவசமுற்றாள். சிறந்த தவத்தினையுடைய சங்கிலியே! எம்பால் அன்புடையவனும், மேருமாமலையைவிட மேம்பட்ட தவத்தினையுடையவனும், வெண்ணெய்நல்லூரில் எம்மால் தடுத்தாட் கொள்ளப்பட்டவனும் ஆகிய சுந்தரன் எனும் தொண்டன், உன்னை அடையக்கருதி எம்மிடம் வந்து இரந்து நின்றான். அவன் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டே யாம் இங்கு வந்துள்ளோம். நீ அவனை மணந்து வாழ்ந்து மகிழ்வாயாக! என்று எம்பெருமான் திருவாய் மலர்ந்தார். எம்பெருமானே! என் ஐயனே! உமது திருவருட் கட்டளையைச் சிரமேற் கொண்டேன். ஆனால், அவர் பரவையாரை மணந்து திருவாரூரில் சுகமாக, மகிழ்ச்சி பொங்க வாழ்கிறார் என்பது உலகறிந்த உண்மையாயிற்றே. அங்ஙனமிருக்க என்னை அவருக்குக் கொடுத்தருளுவது எங்ஙனம் சாத்தியமாகும்? தேவரீர் திருவுள்ளம் கொண்டு, அதற்கு ஒரு வழிமார்க்கம் செய்து என்னை அவருக்கு அடிமையாக்க அருள் செய்தல் வேண்டும் என்று பணிவன்போடு கேட்டுக் கொண்டாள் சங்கிலியார்! சங்கிலியே! சுந்தரன் உன்னை விட்டுப் பிரியாமல் இருப்பதற்கு, உன்னிடம் ஒரு உறுதிமொழி அளிக்குமாறு செய்கிறேன் என்று அருளி மறைந்தார். எம்பெருமான் முன்போல் சுந்தரர் கனவில் எழுந்தருளினார். சுந்தரர் பரமனைத் தொழுது நின்றார். ஆரூரா! உன் விருப்பத்தைச் சங்கிலியாரிடம் கூறினோம்; ஆனால், அவளை நீ மணம் செய்து கொள்வதில் ஒரு நிபந்தனை ஏற்பட்டுள்ளது. ஐயனே! இந்த அடியேன் ஏற்க வேண்டிய நிபந்தனை யாதோ? சுந்தரா! நீ சங்கிலியை மணப்பதற்கு அவளுக்கொரு சபதம் செய்து கொடுத்தல் வேண்டும். எம்பிரானே! மாதவம் புரியும் மங்கையான சங்கிலியை மணக்க, ஐயனின் ஆணைப்படி எவ்வித சபதம் செய்தல் வேண்டும்? அவளைவிட்டுப் பிரியாமல் என்றென்றும் அவளுடனேயே இருப்பேன், என்று உறுதிமொழி கொடுத்தல் வேண்டும். எம்பெருமானே! திருத்தலங்கள் தோறும் சென்று ஐயனைத் தரிசிக்காமல் என்னால் இருக்க முடியாது. அதனால், தங்கள் ஆணைப்படி, சங்கிலிக்கு நான் உன்னைப் பிரியேன் என்ற சபதம் செய்து கொடுப்பதற்காக, தங்கள் திருமுன்னே அவளோடு வரும்பொழுது, அடியேன் பொருட்டு ஐயன் திருக்கோயிலை விட்டு அகன்று மகிழ மரத்தின் கீழே எழுந்தருளல் வேண்டும் என்று வேண்டிக் கொண்டார் சுந்தரர்! அங்ஙனமே செய்வோம் என்றார் எம்பெருமான். செஞ்சடைவண்ணர், முன்போல் சங்கிலியார் முன்னால் எழுந்தருளி, சாரும் தவத்துச் சங்கிலியே, கேள்! சுந்தரன் என்னுடைய திருச்சந்நிதி முன்பாக வந்து நின்று உனக்கு சபதம் செய்து தருகிறேன் என்பான். அது சமயம் நீ அவனது விருப்பத்திற்கு இசையாது, அவனை மகிழ மரத்திற்கு கீழே நின்று சபதம் செய்து தருமாறு கேட்டுக்கொள்வாயாக! என்றார். சங்கிலியார், எம்பெருமானின் திருவடியைத் தொழுது எழுந்து, கரங்கூப்பி, மாலவனால் அறிவதற்கரியவரே! இத்தகைய ரகசியத்தை எமக்கு அருளிச் செய்து காத்தமையால் யான் ஐயனின் அடியேனாக ஏற்றுக்கொள்ளப் பெற்றேன் என்று கூறினாள். எம்பெருமான் சங்கிலியாரை வாழ்த்தி மறைந்தார். இவ்வாறு தமது அன்புத்தொண்டர்களுக்காக அற்புதத் திருவிளையாடல் நடத்தி ஆனந்தித்தார் திருவொற்றியூர் பெருமான்!

சங்கிலியார் விழித்தெழுந்தாள். சுற்றும் முற்றும் பார்த்தாள். அதுவரை தம் எதிரிலேயே எழுந்தருளி ஆட்கொண்ட எம்பெருமானைக் காணாது கலங்கினாள். இறைவனின் அன்பின் திறத்தினை எண்ணி, எண்ணி பெரும் வியப்பு கொண்டாள். சற்று நேரம் யாது செய்வதென்பதறியாது மனம் குழம்பிப் போன சங்கிலியார், உறக்கம் வராமல் தவித்தாள். சற்று சிந்தித்தாள். சட்டென்று ஏதோ ஒரு முடிவிற்கு வந்து தம் அருகே படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் சேடியர்களை எழுப்பினாள். அவர்களும் திடுக்கிட்டு விழித்தெழுந்தனர். அத்தோழியர்களிடம் இறைவர் தமது கனவில் எழுந்தருளி திருவாய் மலர்ந்து அருளிய நிகழ்ச்சியைப் பற்றிக் கூறினாள். மறுநாள் சங்கிலியார், தோழியருடன் திருமாலைகள் சாத்துவதற்காக வேண்டியளவு நறுமலர்களைப் பறித்துக் கொண்டாள். திருக்கோயிலை வந்தடைந்ததாள். சுந்தரரும், சங்கிலியாரை எதிர்பார்த்து கோயிலுக்கு வந்திருந்தார். அவளருகே சென்று, எம்பெருமான் தமது கனவில் எழுந்தருளி திருவருள் புரிந்ததனை இயம்பினார். அம்மொழி கேட்டு சங்கிலியார் நாணத்தால் கன்னம் சிவக்க, புன்னகையை சிந்திவிட்டு, இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்பளிக்க, செக்க சிவந்த மென்சீரடி எடுத்து அன்னம்போல நடந்து கோயிலுள் புகுந்தாள். சுந்தரர் சங்கிலியார் பின்சென்று, ஆயிழையீர்! எம்பெருமான் திருவாய் மலர்ந்து அருளியதற்கு ஏற்ப, உம்மை மணந்து என்றும் பிரிந்து போகாத நிலையில் இவ்வூரிலேயே வாழ்கிறேன் என்று ஆணையிட்டுத் தருகிறேன். அதனால் எம்பெருமான் திருமுன்பு வருவீர்களாக! என்று கேட்டுக் கொண்டார். எமது பெருமானே! இதற்காக இறைவன் முன்பு ஆணையிட்டுத் தருவதென்பது தகாத செயலாகும் என்றனர் சேடியர்! சேடியர் சொல்லியவற்றைக் கேட்டு, சுந்தர் பெண்களே! எம்பெருமானின் திருமுன் சபதம் செய்து தருவதை விட வேறு சிறந்த இடம் எங்குள்ளது? மகிழ மரத்தின் கீழே இருந்து சத்தியம் செய்து கொடுத்தால் அதுவே எங்களுக்கும், எங்கள் தலைவிக்கும் போதுமானதாகும். சுந்தரர் சற்று திடுக்கிட்டார். மகிழ மரத்தடியில் அல்லவா எம்பெருமானை எழுந்தருளியிருக்கச் சொன்னோம் என்றெண்ணி நிலை தடுமாறினார். இருந்தும் சுந்தரர் தமது தயக்கத்தையோ, ஐயத்தையோ வெளிப்படுத்தவில்லை! தோழியர்கள் விருப்பத்திற்கு மாறாக நடக்க விரும்பவில்லை. துணிந்து அவர்கள் வினவியதற்கு ஏற்ப மகிழ மரத்தடியில் சபதம் செய்து கொடுப்பது என்ற தீர்மானத்திற்கு வந்தார். அவர்களை அழைத்துக் கொண்டு மகிழ மரத்தருகே சென்றார். சுந்தரர் மகிழ மரத்தை வலம் வந்து எம்பெருமானை மனதில் தியானித்தார். திருவொற்றியூரை விட்டு அகன்று உன்னை என்றும் பிரியேன் என்று சங்கிலியாருக்கு திருத்தமாக சத்திய சபதம் செய்து கொடுத்தார் சுந்தரர்! சங்கிலியார், எடுத்த பிறவியின் முழுப்பயனையும் பெற்றுவிட்ட பேரின்பக் களிப்பில், சுந்தரர் திருவடி வீழ்ந்து வணங்கினாள். சேடியர்களுடன் சுந்தரரிடம் விடைபெற்றுச் சென்றாள். சுந்தரர், இறைவனின் பாதகமலங்களைப் பணிந்து பதிகம் பாடி துதித்தார். அன்றிரவே எம்பெருமான், சுந்தரர்க்கும், சங்கிலியாருக்கும் திருமணத்தை நடத்திவைக்கும் பொருட்டு, திருவொற்றியூரிலுள்ள சிவத்தொண்டர் கனவில் எழுந்தருளி, எம்மால் தடுத்தாட் கொள்ளப்பட்ட வன்றொண்டனுக்கும், மாதவமிக்க மங்கை நல்லாள் சங்கிலிக்கும் திருமணத்தை நடத்தை வைப்பீர்களாகுக என்று கட்டளையிட்டார். மறுநாள், அச்சிவத்தொண்டர்கள் சங்கிலியாருக்கும், சுந்தரருக்கும் திருமணத்தை நடத்துவதற்கான ஏற்பாட்டைத் தொடங்கினர். சங்கிலியார் பெற்றோர்களிடம் விவரத்தைக் கூறினாள். அவர்களும் மகிழ்ந்தனர். மங்களகரமான நன்னாளன்று உலகமே வியக்கும் வண்ணம் சுந்தரருக்கும், சங்கிலியாருக்கும் மிக்கச் சிறப்புடன் திருமணம் நடந்தது. இறைவனின் அருள்பெற்ற சங்கிலியாரும், சுந்தரரும் இல்லற வாழ்க்கையை இனிது நடத்தினர். சங்கிலியார் பூமாலையால் பரமனைப் பணிய, சுந்தரர் பைந்தமிழ் பாமாலையால் பரமனைப் பணிந்தார். இருவரும் நாடோறும் திருவொற்றியூர் ஆலயத்தை வலம் வந்து, நலந்தந்த நாதன் மலரடியைத் தொழுது வணங்கி சிவத்தொண்டுகள் பல புரிந்து இல்லறமெனும் இன்பக் கடலில் மூழ்கி மிதந்து எல்லையில்லா இன்பம் பூண்டு வாழ்ந்து வரலாயினர். வசந்த காலம் வந்தது! திருவாரூர் வீதிவிடங்கப் பெருமானுக்கு வசந்த காலத்தில் தான் பெருவிழா நடைபெறுவது வழக்கம். பொங்கு தமிழ் வளர்கின்ற பொதிய மலையிலே தோன்றி சந்தன மரங்களிடையே தவழ்ந்து, மலைச்சாரல்களிடையே வளர்ந்து வரும் தென்றல் காற்று சுந்தரர் மேனியில் பட்டு இன்பக் கிளுகிளுப்பை ஏற்படுத்தியது. இத்தகைய வசந்த காலத் தென்றலில் சுந்தமூர்த்தி நாயனார் சங்கிலியாருடன் சுந்தரகீதம் பாடிய வண்ணம் சொக்கி மகிழ்ந்து கொண்டிருந்தார். அவரது உள்ளுணர்வு வசந்த காலத்தில் திருவாரூரில் நடைபெறும் திருவிழாக் காட்சியையும், அத்திருவிழாக் கோலத்தில் தியாகேசப் பெருமான் எழுந்தருளியிருக்கும் மாட்சியையும், பரவையார் பக்திப் பெருக்கோடு பரமன் முன்னால் பரதம் ஆடி அக மகிழ்வதைப் போன்ற காட்சியையும் தோன்றச் செய்தது. பூங்கோயிலினுள் அமர்ந்தாரை-புற்றிடங் கொண்டாரை-எந்நேரமும் அடியார்களை எண்ணி அருள்புரிகின்ற அம்பலவாணரை இவ்விடத்து நான் மறந்திருந்தேனே என்று தியாகேசப்பெருமானின், பிரிவாற்றாமையால் சித்தம் கலங்கினார் சுந்தரர்.

பத்திமையையும் அடிமையையும் கைவிடுவான் என்று தொடங்கி, எத்தனை நாளும் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே என்ற குறிப்பை உணர்த்தும் தமிழ்ப் பாமாலையைப் பாடினார். அவரால் திருவொற்றியூரில் இருக்கவே முடியவில்லை. சங்கரர் நினைவால் சிந்தை குளிர்ந்த சுந்தரர் சங்கிலியாருக்குக் கொடுத்த சபதத்தை மறந்தார். எப்படியும் திருவாரூருக்குப் புறப்பட்டுப் போய்விடுவது என்ற திடமான முடிவிற்கு வந்தார். ஒருநாள் சுந்தரர் சங்கிலியாருக்கு தெரியாமல் திருவொற்றியூர் எல்லையைக் கடந்து அடி எடுத்து வைத்தார். சங்கிலியாருக்குக் கொடுத்த உறுதிமொழியை மீறியதால் அக்கணமே சுந்தரரது கண்கள் இரண்டும் ஒளியை இழந்தன. நாயனார் மூர்ச்சித்தார்.சுந்தரர் அப்போதே தமது தவற்றை உணர்ந்தார். சங்கிலியாருக்கு அளித்த உறுதிமொழியை முறித்துவிட்டதினால் தான் இறைவன் தன் கண் ஒளியைப் பறித்துக் கொண்டார் என்பதையும் சுந்தரர் உணர்ந்தார். அழுக்கு மெய்கொடு என்று தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடிப் பரமனைப் பணிந்தார். இறைவன் சுந்தரர்க்கு அருள் செய்யாது வாளா இருந்தார்.எப்படியும் திருவாரூரை அடைந்து தியாகேசப் பெருமானைத் தொழுது வழிபடுவது என உறுதி பூண்டார். ஒருவாறு தட்டுத்தடுமாறி, முல்லைவாயில் தலத்தில் கோயில் கொண்டுள்ள கருநட்ட கண்டரைத் தரிசித்தவாறு திருவெண்பாக்கம் என்னும் பழம்பதியை வந்தடைந்தார் சுந்தரர்! திருவெண்பாக்கத்து எம்பெருமானைக் கண்டுகளிக்க கண்ணுக்கு ஒளி இல்லாமற் போய்விட்டதே எனச் சித்தம் கலங்கிய நாயனார், பரமனைத் துதித்து, பிறைமுடிப் பெருமானே நீவிர் இத்திருக்கோயிலின் உள்ளேதான் எழுந்தருளியிருக்கின்றீரோ? என்று உளம் வருந்த இறைஞ்சி நின்றார். சுந்தரரின் கனிமொழியைக் கேட்டு, பிரம்படி பட்ட பரமன் ஊன்றுகோல் ஒன்று அவரது கைகளில் வந்து தங்குமாறு அருள்புரிந்தார். சுந்தரா! யாம் கோயிலின் உள்ளேதான் இருக்கின்றோம் என்ற கருத்தமைய, யாம் உள்ளோம். நீர் போகீர் என்று இணக்கமில்லாத மொழிகளால் விடை பகர்ந்தார். விடையேறும் பெருமான் அன்னியனிடம் கூறுவது போல் சற்று கடுமையாக மொழிந்ததைக் கேட்டு, சுந்தரர் வேதனை தாளாமல் பிழையுறன பொறுத்திடுவர் எனத் தொடங்கும் பாடலால் மெய்யுருகினார். எம்பெருமானின் அருள் உள்ளம் இந்த அளவிற்குத்தான் இத்தலத்தில் தமக்கு கிட்டியதுபோலும் என்று உள்ளத்திலே எண்ணியவாறு, ஊன்றுகோலை ஊன்றிக் கொண்டு புறப்பட்டார். சுந்தரர் திருவாலங்காடு, திருவூறல் போன்ற சிவத்தலங்களை வழிபட்டவாறு காஞ்சிமா நகரத்தினை வந்தடைந்தார். எழில்மிகு சோலைகளால் சுந்தரத் தோற்றமளிக்கும் திருக்கச்சிக்காமக் கோட்டத்தில் உள்ள காமாட்சி அம்மையாரின் சன்னதியை வணங்கித் துதித்த சுந்தரமூர்த்தி நாயனார், அப்படியே ஏகம்பவாணர் சன்னதியையும் அடைந்தார். விண்ணவர் வாழ நஞ்சுண்ட கயிலைமலைக் கண்ணாளா! கச்சி ஏகம்பனே! பவளவண்ணரே! மறைகட்கும் எட்டாத மாமுனியே! உமது ஆனந்த ரூபத்தைத் தரிசித்து மகிழ, கடையேனாகிய எனது பிழையைப் பொறுத்து அருளி பார்வையைத் தந்து காத்திட வேண்டும். அன்று நல்லூர் மணப்பந்தலிலே என்னை தடுத்தாட் கொண்ட அண்ணலே! இன்று உன் அருட்கோலத்தைக் கண்டு மகிழத் துடிக்கும் உன் தோழனுக்குப் பார்வையைத் தரலாகாதோ? ஐயனே! என் உணர்வை நீ உணராதவன் அல்லவே! என்றெல்லாம் பலவாறு கதறிக் கதறி இறைஞ்சி நின்றார். காமாட்சி அம்மையாருடைய தளிர்க் கரங்களால் வழிபாடு செய்து பணிந்த ஏகம்பவாணரின் பாத கமலங்களைப் பணிந்தார். துதித்து பாமாலை பாடினார். சுந்தரரின் பாமாலைக்கு பரமன் மனம் குளிர்ந்தார். காமாட்சி அம்மையார் தழுவக் குழைந்த திருசடைப்பெருமான் சுந்தரருக்கு இடக்கண் பார்வையினை மட்டும் கொடுத்து, தமது திருக்கோலத்தை காட்டி அருளினார். சுந்தரர் கண் பெற்ற பெருமிதத்தில் ஆடினார்; பாடினார்; நிலமதில் வீழ்ந்து பன்முறை வணங்கி, வணங்கி எழுந்தார். ஆலந் தானுகந் தமது செய்தானை என்று தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடினார். ஏகம்பவாணரின் மலர்த்தாளினைத் துதித்தார் சுந்தரர்.

சுந்தரர் தொண்டர்களுடன் சில நாட்கள் அப்பதியிலேயே தங்கி, சிவ வழிபாடு புரிந்து வந்தார். பின்னர் அங்கிருந்து தமது சிவ யாத்திரையைத் துவங்கினார். இரவென்றும், பகலென்றும் பாராமல் வழி நடந்தார். அவர் உடலில் நோய் கண்டது. நடை தளர்ந்தார். அப்படியும் சிவதரிசனத்தை மட்டும் கைவிடவில்லை.எண்ணற்ற சிவத்தலங்களைத் தரிசித்து, பதிகங்கள் பல பாடியவாறே மாத்தூர், திருநெல்வாயில் வழியாக காவிரியாற்றைக் கடந்து திருவாடுதுறை திருத்துருத்தியினை அடைந்தார்.சிவக்கோயிலை பன்முறை வலம் வந்து எம்பெருமானின் செஞ்சேவடிகளை தரிசித்து, நம்மை துன்புறுத்தி வரும் உடம்பின் மேல் உற்ற பிணியை ஒழித்துக் காக்க வேண்டும் என்று பணிந்து நின்றார்.சுந்தரரின் அன்பிற்குக் கட்டுப்பட்ட திருத்துருத்தி மேவும் விரிசடைத் தம்பிரான், ஆரூரா! அஞ்சாதே! இக்கோயிலின் வடபுறத்திலுள்ள குளத்தில் நீராடினால் உன் உடம்பில் பற்றியுள்ள வெப்பு நோய் விலகும் என்று அருளினார்.அரனாரின் அன்புமொழி கேட்டு ஆனந்தப் பெருக்கோடு சுந்தரர் கோயிலின் வடபுறத்திலுள்ள குளத்தில் ஐந்தெழுத்து மந்திரத்தை மனதிலே தியானித்தவண்ணம் மூழ்கி எழுந்தார்.எம்பெருமானின் அருளால் அவரது மேனியில் இடைக்காலத்து ஏற்பட்ட புதிய வெப்பு நோய் நீங்கப் பெற்ற மாணிக்கம் போல் பேரொளி வீசும் பொன்மேனியைப் பெற்றார்.சிவனருள் பெற்ற அச்சிவச்செல்வர், தேன் உண்ட வண்டு போல் இன்பம் பெற்றார்.மின்னுமா மேகம் எனத் தொடங்கும் பதிகத்தை ஏழிசைகளில் எடுத்துரைத்து எல்லையில்லா இன்பம் கண்டார். எம்பெருமானின் அருளை நினைத்தவராய்த் தொண்டர்களுடன் திருவாரூரை நோக்கி புறப்பட்டார். திருவாரூர் எல்லையை வந்தடைந்த சுந்தரர், தியாகேசப்பெருமான் எழுந்தருளியிருக்கும் பூங்கோயிலின் பெருங்கோபுரத்தைக் கண்டு மகிழ்ந்தார். பொழுது சாயும் வேளையில் திருவாரூரினுள்ளே நுழைந்தார். தொண்டர்கள் புடைசூழ, திருப்பரவையுண் மண்டலி என்னும் ஆலயத்தை வலம் வந்து வழிபட்டு, தூவாயத் தொண்டு என்று தொடங்கும் செந்தமிழ்ப் பாமாலையினை சாத்தி சிந்தை குளிர்ந்தார் சுந்தரர்! குருகுபாய எனத் தொடங்கும் சிவப்பதிகத்தைப் பாடியவாறே சிவன் அடியார்களுடன், தேவாசிரிய மண்டபத்தை அடைந்த சுந்தரர், கோபுரத்தைத் தரிசித்தவாறே புற்றிடங்கொண்ட நாதரின் சிலம்பணிந்த தாளினைப் பணிந்து போற்றினார். எம்பெருமானே! இன்னுமா தங்கள் தோழர்க்குத் தீராத துயரம். துயரக்கடலில் அல்லலுற்று வருந்தும் இவ்வடியேனைக் கரைசேர்த்து, மற்றொரு கண்ணுக்கும் ஒளி தந்தருளுவீர்! என்று இறைஞ்சி நின்ற சுந்தரர், மீளா வடிவை எனத் தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடினார். அப்படியும் இறைவனின் மனமிரங்காதது கண்டு, அருட்பெருஞ்சோதியே! உமது திருமலர்த்தாளினை இடையறாது, பைந்தமிழ்ப் பாமாலையால் வழிபடும் தொண்டனுக்கு ஏற்படும் தீராத துன்பங்கண்டு நீ ஒருபோதும் பொறுத்திருக்க மாட்டாயே! அக்கணமே அன்பர்களின் துயரத்தைத் தீர்த்து வைத்து மகிழ்வாயே! அப்படியிருக்க எம்மை காத்தருளலாகாதது ஏனோ? என்று குறிப்புடனே, அடிமையும், தோழமையும் கலந்த அருத்திறத்தோடு கூடிய இன்பத் தமிழ்ப்பதிகம் ஒன்றைப் பாடிப் பரமனைப் பணிந்தார். சுந்தரமூர்த்தி நாயனாரின் திருப்பதிகங்களில் சிந்தை குளிர்ந்த செஞ்சுடர் வண்ணர், சித்தம் இரங்கி, அவருக்கு வலக்கண் பார்வையினையும் கொடுத்து அருள்புரிந்தார். கதிரவனைக் கண்டு தாமரை மலர்ந்தாற் போல் பரமன் அருளிலே சுந்தரர் முகம் மலர, ஒளி பெற்ற பேரானந்தத்தில் பரமனைப் பணிந்து உலகையே மறந்தார்.கண் பெற்ற சுந்தரர், தாம் கண்மூடித்தனமாக பரவையாருக்குச் செய்த துரோகச் செயலை எண்ணிப் பார்த்தார். அவர் மனம் வேதனையாலும், வெட்கத்தாலும் கூனிக் குறுகியது. பரவையார் மாளிகைக்கு செல்ல அஞ்சியவராய், தேவாசிரிய மண்டபத்திலேயே தங்கிவிட்டார் சுந்தரர்.

சுந்தரர் பிரிந்து சென்ற பிறகு பரவையார், பிரிவாற்றாமை தாளாது, எல்லையில்லாத் துன்பமடைந்தாள். அம்மையாருக்கு இரவு பகலாகவும், பகல் இரவாகவும் கழிந்தன. மனதிலே நிம்மதியென்பது கடுகளவு கூட இல்லாமற் போது. அன்பரைப் பிரிந்து தணல் மேல் புழுப் போல் துவண்டு கொண்டிருக்கும் நாளில்தான், திருவொற்றியூரில் சுந்தரர் சங்கிலியாரைத் திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தி பரவையாருக்கு எட்டியது. பரவையார் மேலும் வேதனையும் பெருங்கோபமும் கொண்டாள். இரவும், பகலும் மாலையிட்ட மணாளனின் நினைவாகவே நெஞ்சு நெகிழ்ந்து, சிறகொடிந்த பறவைபோல்-பற்றுக்கோல் அற்ற முல்லைக் கொடிபோல்- பாலைவனத்திலே காயும் நிலவு போல்-பாய்மரம் இல்லாத மரக்கலம் போல் அவதிப்பட்டு கொண்டிருந்தாள் பரவையார். வண்டுகள் மொய்க்கும் அன்றலர்ந்த மென்மலர் தூவிய பட்டு விரித்த ரத்தின மணிக்கட்டில் நித்திரை கொள்ளாது எந்நேரமும் விழித்தேயிருந்தாள். இவ்வாறு பரவையார் வாழ்ந்து வரும் நாளிலே, தேவாசிரிய மண்டபத்திலே தங்கியிருந்த சுந்தரர், பரவையார் மாளிகைக்குச் செல்ல அஞ்சியவராய், தமது ஏவலாளர் சிலரை அனுப்பி, தமது வருகையை அம்மையாரிடம் தெரிவிக்கத் தக்க ஏற்பாடுகளைச் செய்தார். பரவையார் மாளிகையை அடைந்த ஏவலாளர்களால், உள்ளே சென்று பரவையாரைப் பார்க்கக் கூட முடியவில்லை. எப்படியோ விஷயம் அறிந்த தோழியர்கள் தலைவியின் கட்டளைப்படி கதவடைத்து அனுப்பி விட்டார்கள். ஏவலாளர்கள் ஏமாற்றத்தோடு சுந்தரரை அணுகி, ஐயனே! தாங்கள் திருவொற்றியூரில் சங்கிலியாரோடு வாழ்ந்து வந்த வரலாற்றைத் தெரிந்து வைத்திருக்கும் அம்மையார் எங்களைப் பார்க்க மறுத்ததோடல்லாமல், தோழியர்களிடம் சொல்லிக் கதவையும் தாழிடச் செய்துவிட்டார்கள் என்றனர். சுந்தரர் சித்தம் தடுமாறினார், பரவையார் பிணக்கை போக்கி, அவர்களது திருமாளிகைக்குச் செல்வதுதான் எங்ஙனம்? என்று தமக்குள் எண்ணி மனம் கலங்கினார். நெடு நேரம் சிந்தித்தார். முடிவில், உலக இயல்பினைக் கற்றுத் தெளிந்த திறமைமிக்க மாதர்களை, பரவையாரிடம் தூது அனுப்பி வைத்தார். பரவையார் மாளிகையை அடைந்த அம்மாதர்கள் பரவையாரை நேரில் சந்தித்து, தங்கள் வணக்கத்தைத் தெரிவித்து கொண்டனர். நற்றமிவக்க நங்கையே! எம்பிரானால் தடுத்தாட் கொள்ளப்பட்ட தங்கள் நாயகர் தம்பிரான் தோழர், மீண்டும் தங்களுடன் சேர்ந்து வாழ வந்துள்ளார்கள். உங்கள் பெருமையையும் அவரது பெருமையையும் அளவிட முடியாதது. அங்ஙனமிருக்க, நீங்கள் உங்கள் நாயகர் மீது இவ்வாறு ஊடல் கொண்டு, பிணக்கம் கொள்வது நம் பண்பிற்கு ஒவ்வாதது. இறைவனின் அருளால் மீண்டும் கண்களைப் பெற்றது உங்களை எண்ணி மனம் உருகிக் கண்ணீர் வடிப்பதற்கல்ல; உங்கள் அழகு நடனத்தையும், ஒளிமிக்க கமலவதனத்தையும் கண்டு களிப்பதற்காகத் தான். அதனால் அம்மையார் எங்கள் பொருட்டாவது ஐயன் மீது கொண்டுள்ள கோபத்தை தணித்து கொள்ளுங்கள் என்று பலவாறு அம்மாதர்கள் கூறினர். அவர்களது அறிவுரைகளைப் பரவையார் சற்றும் செவிமடுக்கவில்லை. என்னை மறந்து, வேறு பெண்ணை மணம் செய்துகொண்டு, எனக்குத் தீராத துயரத்தையும் ஆறாத கவலையையும் அளித்த அவரது குற்றத்தை மறைக்க நீங்கள் எவ்வளவுதான் அறிவுரைகள் பகர்ந்தாலும் என்னால் ஒருபோதும் ஏற்க முடியாது. நீங்கள் மேலும் மேலும் பேசிப் பேசி என் மனதை புண்படுத்துவீர்களானால் நான் உயிரை இழப்பது திண்ணம். தயவு செய்து  போய்விடுங்கள் என்று ஒரேயடியாக, சினத்தோடு மறுத்து அவர்களைத் திரும்ப அனுப்பி விட்டார் பரவையார். பரவையார் பேச்சிற்கு மறுமொழி பேசாமல், ஏமாற்றத்தோடு வெளியே வந்த மாதர்கள், சுந்தரரிடம் நிகழ்ந்தவை அனைத்தையும் கூறிச் சென்றனர். சுந்தரர், மன சோர்வுற்றார். இரவு கழிந்து கொண்டேயிருந்தது. நடு ஜாமம் வந்தது. இருந்தும் சுந்தரருக்கு உறக்கம் சற்றுகூட வரவில்லை. அவருடன் சூழ்ந்திருந்த அன்பர்கள் அனைவரும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர்.  கவலை தோய்ந்த முகத்தோடு, இறைவனைத் தியானித்த வண்ணம் கண்விழித்திருந்த சுந்தரர், தமது குறையை இறைவனிடம் முறையிடுவது என்று எண்ணினார். சுந்தரர், ஒளி கொடுத்த திங்கள் வளர்நாயகரைப் பணிந்து, என்னைத் தடுத்தாட்கொண்ட தம்பிரானே! அன்பர்க்கு அன்பனே! எமக்கு தேவரீர் இப்படியும் ஒரு சோதனையைக் கொடுத்து திருவிளையாடல் புரியலாமா? முன்வினைப் பயனால், இப்பிறப்பில் தேவரீர் அருளோடு மணம் புரிந்து கொண்ட பரவையார் என்னைத் திரும்ப ஏற்க மறுப்பதைத் தாங்கள் அறியாததல்லவே! எம்பிரானே! பரவையாருக்கு எம்மோடுள்ள பிணக்கை போக்கி உய்யும் வழிசெய்யும் திறத்தவர் உம்மையன்றி வேறு எவர் எனக்குள்ளார்? விண்ணவர்களுக்காக விடமுண்ட நீலகண்ட நாயகரே! இந்நடுராத்திரியில் இவ்வடியேனுக்காக இங்கு எழுந்தருளி, காத்தருளலாகாதா? என்று வேண்டினார். அக்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்துள்ள பரம் பொருளான கயிலையரசன், சுந்தரரின் துயரத்தைத் தீர்க்க திருவுள்ளம் கொண்டார். அந்த நள்ளிரவு நேரத்தில் எம்பெருமான் சுந்தரர் முன்னால் பேரொளிப் பிழம்பாகக் காட்சி அளித்தார். சுந்தரர் பக்தி வெள்ளம் போல் பெருக, இறைவனது சேவடிகளைப் பணிந்து போற்றினார். புற்றிடங்கொண்ட பெருமான், தம்மைப் பற்றிக் கொண்ட தோழருக்கு அருள் செய்து, அன்பனே! இந்த நடு ஜாமத்தில் அபயக்குரல் எது கருதி? அப்பனே! உனக்கு நேர்ந்ததுதான் என்ன? என்று ஒன்றுமறியாதவரைப் போல் கேட்டார். இறைவன் இவ்வாறு கேட்டதும் தம்பிரான் தோழர் உடல் நடுங்க, மெய்சிலிர்க்க, பித்தா! பிறைசூடி! பெருமானே! அன்பர் மனங்களில் எந்நேரமும் எழுந்தருளியிருக்கும் அருளாளா! தயாபரா! நீ அறியாததொன்றில்லையே! உமது சக்தியில்தானே அகில உலகமும் சுற்றிச் சுழலுகிறது.

சங்கரா! எனக்கு இன்று ஏற்பட்டுள்ள துன்பத்தைப் பொறுத்து ஆட்கொள்ள வேண்டியது தேவரீருடைய கடமையாகும். ஐயனின் ஆணைப்படி மகிழமரத்தின் கீழே சபதம் செய்து சங்கிலியாரைத் திருமணம் செய்து கொண்டு நான் திருவொற்றியூரில் வாழ்ந்த செய்தி எப்படியோ பரவையாருக்கு எட்டிவிட்டது. அதனால், பரவையார் என் மீது கோபம் கொண்டுள்ளதோடல்லாமல், என்னால் தனது உயிரையே இழப்பதாகவும் கூறுகிறாளாம். இந்த எளியோன் தேவரீரின் அடியேன்! ஐயன்தான் எனக்குத் தாயும் தந்தையும்! துன்பக் கடலினின்றும் நீந்திக் கரையேறுவதற்குரிய மரக்கலம் இல்லாது மனம் கலங்கும் என்னைக் காக்க வேண்டும். இவ்விரவிலேயே, இவ்வெளியேனுக்காகப் பரவையார் மாளிகைக்கு எழுந்தருளி, என் நிலையை விளக்கி, அவளுடைய கோபத்தைத் தணித்து எம்மோடு கூடி வாழச் செய்திடல் வேண்டும் என்று பணிவன்போடு கேட்டுக் கொண்டார். சுந்தரா! கவலையை மறப்பாயாக! நான் இப்பொழுதே பரவையாரிடம் தூது சொல்கிறேன் என்று மொழிந்தார் பரமன். அந்த அருள் வார்த்தையிலே சிந்தை குளிர்ந்த சுந்தரர் எல்லையற்ற உவகையோடு, ஐயனே! பரவையார் மாளிகைக்கு விரைந்து சென்று அவரது ஊடலைத் தீர்த்து கூடல் கொள்ளச் செய்து வருவீராகுக! என்று மீண்டும் அன்புக் கட்டளையிட்டார். எம்பெருமான், அந்த அர்த்தயாம வேளையில் தமது திருவடிகள் நிலவுலகில் பொருந்தப் பரவையார் மாளிகையை நோக்கிப் புறப்பட்டார். விண்ணிலிருந்து மலர்மாரி பொழிந்தவண்ணமாகவே இருந்தது. எம்பெருமானைப் பின் தொடர்ந்து தேவாசிரிய மண்டபத்திலே எழுந்தருளியுள்ள அமரர்களும், சிவகணங்களும், அருந்தவசிகளும், நந்தியெம்பெருமானும், குபேரன் முதலானோரும் பரமனைத் துதித்தவாறு பின்னால் சென்றனர். திருவாரூர் சிவலோகம் போல் காட்சி அளிக்க, சிவனார் மணிவீதி வழியாக தூது புறப்பட்டார். அவருடைய திருச்சடையைச் சுற்றி விளையாடும் பாம்புகளும், மாணிக்க ஒளி வீசத் தொடர்ந்து படமெடுத்துப் பின் வந்தன. இளம்பிறை நிழலில் மலர்ந்துள்ள கொன்றைப் பூக்களில் தேன் பருகும் வண்டுகளும், ரீங்காரம் செய்த வண்ணம் தொடர்ந்து வந்தன. கூடவே சுந்தரமூர்த்தி சுவாமிகளின் மனமும் பின் தொடர்ந்தது. வேதங்கள் பின்தொடர, பரவையார் மாளிகையை அடைந்த இறைவன், அனைவரையும் புறத்தே தங்குமாறு ஆணையிட்டு விட்டு, தாம் மட்டும் ஓர் அர்ச்சகரைப் போல் வடிவம் கொண்டு, மாளிகையை அடைந்தார். உள்ளே தாழ்போட்டுள்ள கதவைத் தட்டியவண்ணம், பரவையே! கதவினைத் திறந்திடுவாய்! எனச் செம்பவளவாய் திறந்து அழைத்தார் அம்பலவாணர். உறக்கம் வராமல் மலர் மஞ்சத்தில் படுத்திருந்த பரவையார் திடுக்கிட்டு எழுந்தார். அர்ச்சகரின் குரலோசை கேட்டு அம்மையார், இந்த அர்த்த ஜாமத்தில் நம்மைத் தேடி அர்ச்சகர் வரவேண்டிய காரணம் என்ன? என்று எண்ணியவளாய் விரைந்து வந்து கதவைத் திறந்தாள். அர்ச்சகர் வடிவில் வந்துள்ள இறைவனை வணங்கி, வரவேற்ற பரவையார், ஊர் உறங்கும் இவ்வேளையில் தேவரீர் இவ்வடியாளின் இருப்பிடத்திற்கு எழுந்தருளிய காரணம் யாதோ? என்று பணிவன்புடன் கேட்டாள். பரவையே! வந்த காரணத்தைக் கூறுவேன்; ஆனால் நீ மட்டும் மறுக்காமல் எமது கோரிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆணையிடுங்கள் சுவாமி! பரவையே கேள்! சுந்தரர் சற்றுத் தவறியதற்காக நீ அவரை முற்றும் வெறுத்து இங்ஙனம் ஊடல் கொள்வது முறையாகாது. உனது பிரிவினால் மிக்கத் துயருரும் நாவலூர் நம்பி உன் நினைவாகவே தேவாசிரிய மண்டபத்தில் வந்து தங்கியுள்ளார். அவர் மீண்டும் இங்கு வந்து உன்னோடு கூடி வாழ்தல் வேண்டும். இதற்கு நீ இசைந்து விடுவதுதான் நல்லது. நன்று! நன்று! தாங்கள் செப்புவது! சிவத்தலங்களை தரிசிக்கப் போகிறேன் என்று என்னிடம் விடை பெற்றுச் சென்றார். எப்படியும் பங்குனித் திருநாள் அன்று விரைந்து வந்துவிடுவார் என்று எதிர்பார்த்து ஏமாந்தேன். அவரோ திருவொற்றியூரில் சங்கிலியார் என்னும் பெண்ணை மணந்து வாழ்ந்துள்ளார். இனிமேல் அவருக்கும் எனக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. இதற்காகவா, இந்த இரவு வேளையில் தாங்கள் இங்கு வந்தீர்கள்? பரவையே! கோபம் தணிந்து, உன் நாயகனின் குற்றத்தைப் பொறுத்துக் கொள், என்று நான் எடுத்துச் சொல்வது உனக்கு புரியவில்லையா? நங்கையே! என் பொருட்டாவது சுந்தரரை ஏற்றுக் கொள்ளலாகாதா? அதுதான் உனக்கு தகுதியான செயலும் கூட.
ஐயனே! இவ்வாறு திரும்ப திரும்ப என்னிடம் கதை கூறுவது தங்கள் பெருமைக்கு ஒருபோதும் ஒவ்வாது. இதற்கு நான் இணங்கப்போவதாக இல்லை. தயவுசெய்து போய் வாருங்கள் என்று கடுமையாக, தமது முடிவான பதிலைக் கூறினாள். அதற்குமேல், பரவையாரிடம் வாதாட விரும்பாத அரனார் அவளிடம் விடைபெற்றுப் புறப்பட்டார். எம்பெருமானை, பரவையார் மாளிகைக்குத் தூதராக அனுப்பிவிட்டு, அவரது வரவை எதிர்பார்த்திருந்த சுந்தரர், கங்கையை முடித்த சங்கரா! சற்றும் அறிவில்லாத இவ்வடியேன், தங்கள் திருப்பாதம் நோகுமாறு இப்பாதி இரவு வேளையில், பரவை மாளிகைக்கு அவளது புலவி தீர்த்துவரும் பொருட்டு தூதராக அனுப்பிவிட்டேனே! நான் செய்த இப்பொல்லாத பிழைக்கு மன்னிப்பே கிடையாது. இதற்கென்று தங்களை வணங்கி வேண்டினேனே! அபச்சாரம்! என் ஐயனுக்கு எவ்வளவு கொடிய பாவத்தை செய்துவிட்டேன் என்று வாய்விட்டுக் கதறி வருந்தினார். உடனே பரவையார் நினைவு ஏற்படவே, பரவையார் மாளிகையில், இறைவன் எப்படியும் எனக்காக வாதாடி, அவளது இசைவினைப் பெற்றே மீளுவார்; கண்டிப்பாக பரவையாரது சிறு ஊடலைத் தீர்த்து விட்டுத்தான் வருவார் என்று எண்ணி மகிழ்ச்சி கொண்டார் சுந்தரர். நேரம் நகர்ந்து கொண்டேயிருந்தது. சுந்தரர்க்கு ஓரிடத்தில் இருப்புக் கொள்ளவில்லை. அப்படியும் இப்படியுமாக அல்லல் பட்டுக் கொண்டிருந்தார். எம்பெருமான் வரும் வழியே தமது விழியையும் மனதையும் செல்லவிட்டார். அந்த நிலையில் மன்மதனின் மலர்க்கணை, மாரி போல் சுந்தரர் மீது பொழிந்தன. அவை மேலும் துன்பத்தைக் கொடுத்தன. இத்தருணத்தில் இறைவன், அர்ச்சகர் கோலத்தை மறைத்து பிறையணிந்த அண்ணலாக சுந்தரர் முன்னால் தோன்றினார். அணையை உடைத்துக் கொண்டு பாய்ந்து ஓடிவரும் வெள்ளப் பிரவாகம் போல் சுந்தரர், ஆசை பொங்கிப் பெருகி வர, எம்மை ஆட்கொண்ட அண்ணலே! இந்தப் பாதி இரவில் மலர்ப்பாதம் நோக பரவையார் மாளிகைக்கு எழுந்தருளி, எமக்காக வேண்டி அவளது பிணக்கைப் போக்கி வெற்றிப் பெருமிதத்தோடு எழுந்தருளியுள்ளீர்களே சுவாமி! ஐயனின் கருணையை என்னென்பேன்! என்று அகமும் முகமும் மலரக் கூறினார்.

சுந்தரர் செப்பியது கேட்டு செஞ்சடை வண்ணர், சுந்தரா! உன் ஆற்றலையும், அருந்திறத்தினையும் அளவிட முடியாத அளவிற்கு அடுக்கடுக்காக எடுத்துக் கூறினேன்.  அத்தனையும் விழலுக்கு இறைத்த நீராகி விட்டதே. பரவையார் எமது மொழியைச் செவிசாய்க்க மறுத்து, வெறுப்போடு என்னைத் திரும்ப அனுப்பி விட்டாள் என மொழிந்தார். முக்கண்ணர் அருளியதைக் கேட்டு மனம் கலங்கிய சுந்தரர், நடுக்கமுற்று கண்கலங்கி, கரங்கூப்பி வணங்கியவாறு, தேவரீர் திருமொழியை மறுக்க வல்லவள் பரவையார் அல்லவே! ஐயன் அருள் கூர்ந்தால் அகிலத்தில் ஆகாதது ஒன்றில்லையே! தேவரீர்! இதற்காகவா வலிய வந்து எம்மை தடுத்தாட் கொண்டீர்கள்? முப்புரம் எரித்த மறையவனே! அமரர் வாழ ஆலகால விடமுண்ட அருமாமணியே! பாலனுக்காகக் காலனை உதைத்து, மார்கண்டேயன் என்னும் தொண்டனை அடிமை கொண்டருளிய அம்பலத்தரசே! என் மீது மட்டும் தங்கள் அருட்கண் மலரவில்லையா? சுவாமி! எம்மை வேண்டத்தகாதவன் என்று கருதி, திரும்ப வந்து விட்டீர்களோ? இறைவா! எனக்காக வேண்டி மீண்டும் ஒருமுறை பரவையாரிடம் சென்று அவளது சினத்தைப் போக்குவீர். எனது நோயையும், துயரத்தையும் நேரில் கண்டும், உமது திருவுள்ளம் இரங்கவில்லையா? இன்றிரவு ஐயன் அருள் செய்து என்னைப் பரவையாரோடு சேர்க்காவிட்டால் என்னுயிர் நீங்கி விடும் என்பது மட்டும் உறுதி என்று புலம்பி கண்ணீரால் எம்பெருமானின் பாதகமலங்களைக் குளிரச் செய்தார். தமது திருவடிகளில் சரணமென்று வீழ்ந்து பணிந்து கிடக்கும் சுந்தரரை அருளோடு பார்த்த எம்பெருமான், சுந்தரா எழுந்திரு! வருந்தாதே! உன் துயரத்தை நான் உணர்வதுபோல், எப்படியும் பரவையையும் உணருமாறு செய்கிறேன். மீண்டும் உன் பொருட்டு அவளிடம் சென்று வருகிறோம். கவலையை மறந்து திடமாக இரு. என்று மதுரமொழிபகர்ந்தவாறு பரவையார் மாளிகைக்கு மீண்டும் புறப்பட்டார் சங்கரர்! அர்ச்சகர் வடிவில் வந்த அரனார் சென்ற பிறகு பரவையார் மனதில் எதனாலோ, இனம் தெரியாத ஒருவித கலக்கம் ஏற்பட்டது. அந்தணர் வடிவுடன் எழுந்தருளியவர் திருவாரூர் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் தியாகேசப் பெருமானே தான் என்ற உண்மையயை பரவையாருக்கு உணர்த்துவது போல் வியக்கதக்க  நிகழ்ச்சிகள் பல பரவையார் மாளிகையில் தோன்றின. அது கண்ட பரவையார் மனம் திருக்கிட்டாள். எம்பெருமானுக்கு பெரும் பிழை இழைத்து விட்டோமே! ஐயோ! அபச்சாரம் நடந்துவிட்டது, கெட்டேன்! என் நாயகருக்காக, சிவவேதியர் கோலத்துடன் வந்தணைந்தவரை இன்னாரென்று அறியமுடியாத அளவிற்கு என் அகக் கண்களும், புறக்கண்களும் குருடாகிவிட்டனவே! பரமனுக்கு பெரும் துன்பத்தை கொடுத்த பாவியாகிவிட்டேனே! என்று பலவாறு கருதிப் புலம்பி, நிலை தளர்ந்து தோழியர்களுடன் உறக்கமின்றி வாயிலை நோக்கியவாறு அமர்ந்திருந்தாள் பரவையார். அது சமயம் இறைவன் மீண்டும் பூதகண நாதர்கள் சூழ, பரவையார் மாளிகைக்கு எழுந்தருளினார். பரவையார் விரைந்து சென்று பரமனின் பொற்பாதங்களை வணங்கி, வரவேற்று எதிர்கொண்டு மாளிகையுள் அழைத்துச் சென்றாள். பரவையார் மாளிகை, மகாதேவனின் அருள் ஒளியினால் திருக்கயிலாயத் திருமாமலைபோல் ஜெகஜோதியாகப் பிரகாசித்தது.பரவையார் கரமிரண்டையும் தாமரை குவித்தாற் போன்று சிரமீது தூக்கியவண்ணம், கண்களில் நீர்மல்க, அஞ்சி நடுநடுங்கி நின்று கொண்டிருந்தாள். பெருமான், பரவையாரை திருநோக்கம் செய்தார். பரவையே! என் தோழனான நம்பியாரூரன் எம்மை அடிமைகொண்ட உரிமையால், தூதராக ஏவ, மீண்டும் இப்பொழுது உன்னிடம் வந்துள்ளோம்! முன்போல் இம்முறையும் மறுத்துவிடாதே! உனது பிரிவால் என் தோழன் சொல்ல முடியாத நிலையில் அளவு கடந்து வருந்துகின்றான். நீ அவனை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று திருவாய் மலர்ந்தார் கண்ணுதற் கடவுள். அன்பே வடிவெடுத்த அரனார் முன்னே, அச்சமே வடிவாகி, உளம் தடுமாற, வணங்கிப் பவுடன் நின்று கொண்டிருந்த பரவையார், ஐயனே! முன்பு அந்தணர் வடிவத்தில் எழுந்தருளிய அண்ணலே! முற்பிறப்பில் நான் செய்த அருந்தவப்பயனை என்னென்பேன்! தேவரீர் இந்த ஏழையின் மாளிகைக்குத் திருவடி தேய எழுந்தருளும் அளவிற்குத் தவறு புரிந்தேனே! அறியாது செய்த என் பிழையைப் பொறுத்தருள வேண்டும். இனியும் தேவரீர் திருமொழிக்கு அடியேன் இசையாமல் வேறு என்செய்ய வல்லேன்? என்று கூறி நிலமதில் வீழ்ந்து வணங்கி எழுந்தாள். எம்பெருமான் பரவையார் மொழிந்ததைக் கேட்டு நங்கையே! உனது பண்பிற்குத் தக்கவாறு நீ மொழிந்தது நன்றே! என்று பாராட்டி, மாயமாய் மறைந்தருளினார். பரவையார், எம்பெருமான் மறைந்த திசைநோக்கித் தொழுவண்ணம் நின்று கொண்டிருந்தாள். அவளது மனதில் சுந்தரரின் தூயவடிவம் பிரகாசித்தது. பரவையார் பொறுமையே வடிவமாய், நாயகரின் நினைவினால் சிலையாகி நின்றாள். சுந்தரர் முன்னால் எம்பெருமான் எழுந்தருளினார். சுந்தரர் நிலமதில் வீழ்ந்து அவரது மலரடிகளைப் பணிந்து, எம்பெருமானே! இம்முறை எம் பரவையாரிடமிருந்து யாது குறை கொண்டு வந்தீர்கள்? என்று ஆவலோடு வேட்கை மேலிட வினவினார். எம்பெருமான் சுந்தரரைப் பார்த்து, நம்பியாரூரனே! உன் மீது பரவையார் கொண்டிருந்த தீராத கோபத்தைத் தணிய செய்தோம். இனிமேல், எவ்வித தடையுமின்றி நீ அவளைச் சென்று அடைந்து முன்போல் மகிழ்ந்து வாழலாம் என்று அருளி பூங்கோயிலுள் புகுந்தார். மறுநாள் சுந்தரர் பரமனை வணங்கி பரவையாரது மாளிகைக்கு அன்பர்களுடனும் அடியார்களுடனும் புறப்பட்டார். மலர்மாலை, கலவைச் சந்தனம், கஸ்தூரி சாந்து, தங்க ஆபரணங்கள், பட்டாடைகள் முதலிய பல நற்சடங்கிற்கான பொருட்களை ஏந்தியவண்ணம் அன்பர்கள் முன்னால் சென்று கொண்டிருக்க, மங்கல இசைகள் ஒலி எழுப்ப இறைவன் திருநாமம் விண்ணெட்ட முழங்க சுந்தரர், சுந்தரகோலத்தோடு பவனி புறப்பட்ட காட்சியைக் கண்டு வியக்காதவரில்லை. சுந்தரர் எழுந்தருளப் போகும் பெருமிதத்தில், பரவையார் பொழுது புலரும் நேரத்துள் தமது மாளிகையை அழகுற விளங்கச் செய்தாள். மாளிகை எங்கும் நெய் விளக்குகளை ஏற்றி, பொற் சுண்ணங்களையும் மலர் தாதுக்களையும் சிந்தினர். தூபங்களையும், புண்ணியப் புது நீரை நிறைத்து வைத்த பொற்குடங்களையும் வரிசையாக வைத்தனர். வண்டுகள் ரீங்காரமிடும் நறுமலர் மாலைகளையும், ஒளிமிகும் மணிமாலைகளையும் அடுத்தடுத்து அழகிற்கு அழகு செய்தாற்போல் தொங்கவிட்டனர். வெண்கடுகுப் புகையாலும், நெய்யுடன் கலந்த அகிற் புகையாலும் மாளிகை முழுவதும் தெய்வமணம் கமழச் செய்தனர். வண்ண மலர் தூவி, வாழ்த்தொலி எழுப்பி, சுந்தரரை வரவேற்க, பரவையார் தோழியர்களோடு வாயிலருகே நின்று கொண்டிருந்தாள். மங்கல இசை ஒலி எழுப்ப, தொண்டர்களுடன் மாளிகையை வந்தடைந்தார் சுந்தரர். பரவையார் காதல் வெள்ளத்தில் மூழ்கித் திளைத்தவராய், புத்தம் புது மலர்களை, சுந்தரரின் சேவடிகளிலே கொட்டிக் குவித்து வணங்கி வரவேற்றாள். சுந்தரர் மகிழ்ச்சி பொங்க, பரவையாரின் திருக்கரத்தைப் பற்றிக்கொண்டு மாளிகைக்குள் சென்றார். முன்போல் உடலும் உயிரும் ஒன்றாயினர். பரவையாரும், சுந்தரரும் வாழ்க்கைக் கடலில் பக்தி எனும் ஓடத்தில் அமர்ந்து பரமனின் திருவடி என்னும் கரையை அடைய வழி செய்யத் தொடங்கினர். பரவையார், பரமனைப் பணிவதோடு, தமது நாயகரான சுந்தரரின் திருவடிகளையும் வணங்கி வழிபட்டாள். இவ்வாறு இருவரும் இல்லறம் எனும் நல்லறத்தில் நலம்பெற வாழ்ந்து வரலாயினர். சித்தத்தைச் சிவன்பாற் வைத்து நித்தம் நித்தம் புற்றிடங்கொண்ட பெருமானின் ஞானக் கதிர்களாகிய திருத்தாள்களை போற்றிப் பணிந்து வந்தவாறு பரவை நாச்சியாருடன் இன்புற்று வாழ்ந்து வந்தார் சுந்தரர். இவ்வாறு வாழ்ந்து வரும் நாளில் இவருக்கு சேரமான் பெருமாள் நாயனாரைக் கண்டுவர வேண்டும் என்ற காதல் உள்ளத்திலே ஊற்றெடுத்து பெருகியது.

ஒரு நன்னாள் பரவையாரிடம் விடை பெற்றுப் பூங்கோவில் அமர்ந்து பெருமானின் பொற்கழல்களை பணிந்து அடியார் புடைசூழ திருவஞ்சைக்களம் புறப்பட்டார்.
சோழநாட்டுத் தலங்களை கண்குளிரக் கண்டு வணங்கியவாறு கொங்கு நாட்டிலுள்ள திருப்புக கொளியூரை அடைந்தார். வேதியர் வாழ்கின்ற தேரோடும் திருவீதி வழியாக வந்து கொண்டிருந்த சுந்தரர் அவ்வீதியில் எதிர் எதிராக அமைந்துள்ள இரு வீட்டில் நடந்த நிகழ்ச்சியை கண்ணுற்றார். ஒரு வீட்டில் அலங்காரமும் ஆனந்தமும் பொங்கிப் பெருகி, மங்கல வாத்தியங்கள் முழங்கியவாறு இருக்க மற்றொரு வீட்டில் அமங்கலமான தோற்றமும், அழுகையும் நெஞ்சை உருக்கும் சோகக் காட்சியும் இருக்கக் கண்டார். சுந்தரர், அங்குள்ளோரிடம், இவ்விரு வீட்டார்க்கும் உள்ள இன்ப துன்பங்களுக்கு காரணம் யாது? என்று வினவினார். அதற்கு அந்தணர்கள், சுவாமி! இவ்விரு வீட்டிலும் இருந்த இரு சிறுவர்கள், அருகிலுள்ள மடுவிற்கு நீராடச் சென்றார்கள். அதில் ஒருவனை முதலை விழுங்கி விட்டது. தப்பிப் பிழைத்த மற்றொருவனுக்கு இப்பொழுது உரிய பருவம் வந்ததும் பெற்றோர்கள் முப்புரி நூல் அணியும் சடங்கினைச் செய்து மகிழ்கிறார்கள் என்றனர். இதற்குள் அச்சிறுவனை இழந்து அழுது கொண்டிருந்த பெற்றோர்கள், சுந்தரர் எழுந்தருளியுள்ளார் என்று கேள்வியுற்று வேதனையை மறந்த நிலையில் விரைந்தோடி வந்து அவரது திருவடித் தாமரைகளைப் பணிந்தனர். அருகிலுள்ளோர் மூலம் சிறுவனை இழந்த பெற்றோர்கள் இவர்கள்தான் என்பதைத் தெரிந்து கொண்ட சுந்தரர், சோகம் நீங்கி; முகமலர்ச்சியுடன் தம்மை வந்து வணங்கிய பெற்றோர்களைக் கண்டு, நீங்களா மகனை இழந்தவர்கள்? என்று வியப்பு மேலிடக் கேட்டார். ஆமாம் சுவாமி ! அந்நிகழ்ச்சி நடந்து ஆண்டுகள் பல தாண்டிவிட்டன. ஆனால் இப்பொழுது ஐயன் எழுந்தருளியது கண்டு, நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம். இம்மையில் நாங்கள் பெற்ற பேறு எவர் பெறுவர் என்று கூறி மீண்டும் அவரது திருவடிகளில் வீழ்ந்து வணங்கினர். அப்பெற்றோர்களின் அன்பிற்கும், பக்திக்கும் கட்டுப்பட்ட சுந்தரர் அவர்களது துயரை எப்படியும் தீர்ப்பது என்ற உறுதியில் அவர்களிடம் குழந்தையை விழுங்கிய மடு எங்குள்ளது? என்று கேட்டார். பெற்றோர்கள் சுவாமிகளை அழைத்துக்கொண்டு மடுவிற்குப் புறப்பட்டனர். சுந்தரரைத் தொடர்ந்து சிவ அன்பர்களும் சென்றனர். மடுவின் கரையை அடைந்தனர். பெற்றோர்கள் சுந்தரரை வணங்கி, சுவாமி ! எங்கள் குலக் கொழுந்தை விழுங்கிய மடு இதுதான் என்று கூறினார். சுந்தரர் பெருமாளைத் தியானித்தார். ஆக்கவும், அழிக்கவும் வல்ல அவினாசியப்பரை துதித்து ஏற்றான் மறக்கேன் எனத் தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடினார். தேமதூரத் தமிழில் நான்காவது பாட்டைப் பாடி முடிப்பதற்குள் பெரு முதலை ஒன்று நீரிலிருந்து வெளிப்பட்டு பிள்ளையைக் கரையில் கொண்டுவந்து உமிழ்ந்தது. அன்பு பெற்றோர்கள் ஓடிச்சென்று தங்களது பச்சிளம் பாலகனை வாரித் தழுவி உச்சிமோந்து அகமும், முகமும் மலர சிறுவனுடன் சுந்தரர் திருவடியைத் தொழுதனர். சுந்தரரின் தெய்வீகச் சக்தியைக் கண்டு பக்தர்கள் அதிசயித்து வியந்து போற்றினர். சுந்தரமூர்த்தி நாயனார் வாழ்க என்ற கோஷம் வானைப் பிளந்தது. சுந்தரர் அவர்களை வாழ்த்தி அருளினார். அவிநாசியப்பர் ஆலயம் சென்று, பாடிப் பேரின்பம் பூண்டு, மீண்டும் தமது பயணத்தைத் தொடர்ந்தார் சுந்தரர். சுந்தரரின் வியக்கத்தக்க அருட்செயலையும், தமது நகருக்கு எழுந்தருளுவதையும் கேள்வியுற்ற சேரர் கொடுங்கோளூரைக் கவின்பெற அலங்கரிக்கத் தக்க ஏற்பாடுகளைச் செய்தார். சுந்தரர் வருகையை நாடு முழுவதும் பறையறைந்து அறிவித்தார். சேரப் பெருந்தகையார் யானை மீது புறப்பட்டார். அணி, தேர், புரவி, ஆட்பெரும் படையுடனும் மற்ற பரிவாரங்களுடனும், சிவ அன்பர்களுடனும், புறப்பட்ட சேர வேந்தன், சுந்தரரை எதிர்கொண்டு அழைக்க எல்லையிலேயே காத்திருந்தார். சுந்தரர் அன்பர்களுடன், தமது சிவயாத்திரையை முடித்தவாறு எல்லையை வந்தடைந்ததும் சேரப் பெருந்தகையார் யானையினின்றும் இறங்கினார். விரைந்தோடிச் சென்று சுந்தரரை ஆரத்தழுவினார். சுந்தரரும், சேரமான் பெருமாள் நாயனாரை ஆரத்தழுவி அகமகிழ்ந்தார். கடல் வெள்ளம்போல் திரண்டு வந்த மக்கள் விண்ணெட்ட வாழ்த்தொலி எழுப்பினர்.முரசு ஒலிக்க - சங்கு முழக்க - பறை அலற - மேள தாளங்கள் சிவநாமத்தோடு பொங்கி எழ, சேரமான் பெருமாள் சுந்தரரைத் தாம் அமர்ந்து வந்த யானை மீது அமரச் செய்தார். தாமும் பின்னால் அமர்ந்து, வெண் கொற்றக் குடையினைப் பிடித்தார். அனைவரும் அரண்மனையை அடைந்தனர். மன்னனின் எல்லையில்லாப் பக்திக்குத் தலைவணங்கி எல்லையில் கூடியிருந்த பக்தர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். இரு ஞானமூர்த்திகளும் அரண்மனைக்குள் எழுந்தருளினர். சேரமான் பெருமாள் சுந்தரரைத் தமது அரியணையில் அமரச் செய்து வழிபாடு புரிந்து இன்புற்றார். இரு சிவச் செல்வர்களும் மாகோதை மாநகரில் இருந்தவாறே அடுத்துள்ள சிவத்தலங்கள் பலவற்றிற்குச் சென்று பதிகம் பாடிப் பரமனைக் கண்டுகளித்து வந்தனர். மாகோதை நகரில் குடிகொண்டிருக்கும் எம்பெருமானை வழிபட்டு வரும் சேரரும், சுந்தரரும், ஆலயத்துள் செல்லும் முன் அடுத்துள்ள அழகிய பொய்கையில் நீராடிச் செல்வது வழக்கம். ஒருநாள் இருவரும் பொய்கையில் நீராடிக் கொண்டிருக்கும்பொழுது சுந்தரர் மட்டும், சற்று முன்னதாகவே நீராடலை முடித்துக்கொண்டு இறைவன் திருமுன்னே வழிபடச் சென்றார். சுந்தரரின் உடல் புளகம் போர்த்தது; உள்ளத்திலே அருள் உயர்வு பொங்கி எழுந்தது. சைவப் பழமான சுந்தரர் பேரொளிப் பிழம்புபோல் ஆனார். அவர் கண்களில் கண்ணீர் பெருகியது.

எம்பெருமான் திருமுன் பன்முறை வீழ்ந்து வீழ்ந்து வணங்கி எழுந்தார். அவரை அறியாத உள்ளக்கிளர்ச்சியும், உடல் நெகிழ்ச்சியும் அவருக்கு உலக மாயையிலிருந்து விடுபடும் பேரின்ப சக்தியைக் கொடுத்தது. அருளே வடிவான சுந்தரர் தலைக்குத் தலைமாலை என்னும் பதிகத்தைக் கயிலையரசன் செவிகுளிரப் பாடிப் பரவினார். சுந்தரரின் செந்தமிழ்த் தேன் அமுதத்தை அள்ளிப் பருகி மெய்யுருகிய நீலகண்டர் தமது அன்பு ஆலால சுந்தரரைத் திரும்பவும் தம்மோடு அழைத்துக் கொள்ளத் திருவுள்ளங் கொண்டார். அதற்கேற்ப எம்பெருமான் அமரர்களை அழைத்து ஆலாலசுந்தரரை வெள்ளை யானையில் அழைத்து வருவீர்களாக! என்று ஆணையிட்டார். அமரர்கள் வெள்ளை யானையுடன் புறப்பட்டு திருவஞ்சைக்களம் அடைந்தனர். ஆரூரைக் கண்டு வணங்கினர். ஆண்டவனின் ஆணையைக் கூறி வெள்ளையானையில் அமர்ந்து கயிலைக்கு எழுந்தருளுமாறு கேட்டுக் கொண்டனர். அரனார் அருள் வாக்கிலே, செய்வதறியாது நின்ற சுந்தரர் எம்பெருமானை நினைத்து துதித்தார். தேவர்கள், அவரை  வலம் வந்து வெள்ளை யானையின் மீது எழுந்தருளச் செய்தனர். சுந்தரர் தமது தோழராம் சேரர் நினைவாக வெள்ளை யானை மீதமர்ந்து விண்ணை நோக்கிப் புறப்பட்டார். அமரர்கள் மலர்மாரி பொழிந்தனர். பொய்கையினின்றும் வந்த சேரவேந்தன் சுந்தரரைக் காணாது திகைத்தார். சுந்தரர் திருக்கயிலை மலைக்கு வெள்ளை யானையில் எழுந்தருளுவதைத் தமது தபோ வலிமையால் அறிந்து கொண்டார் சேர மன்னர்; அக்கணமே தாமும் ஆரூரரைத் தொடர்ந்து செல்லத் திருவுள்ளங் கொண்டார். சோழன் வெண்புரவியில் அமர்ந்தார். குதிரையின் செவியில் நமச்சிவாய மந்திரத்தை இடையறாது ஓதினார். குதிரை காற்றினும் கடுகப் புறப்பட்டது. வெள்ளை யானையை அணுகி, வலம் வந்தது. மன்னர் சுந்தரரை வணங்கி வழிபட்டார். மன்னர் புரவியில், யானைக்கு முன்னதாகவே கயிலைமலையை நோக்கிப் புறப்பட்டார். சுந்தரர் தம்மை வணங்கி முன்னால் செல்லும் மன்னனைக் கண்டார். தமக்குள் புன்முறுவல் பூத்தார். வெள்ளை யானையில் வந்து கொண்டிருந்த சுந்தரர் தானெனை முன் படைத்தான் எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடியவாறு கயிலைமலைக் கோவிலின் தென்திசை வாயிலை அடைந்தார். வேகமாக வந்த சேரமான் வாயில் அடைத்திருப்பது கண்டு திகைத்தார். அங்கேயே சுந்தரர் வருகையை எதிர்பார்த்து நின்றார். சுந்தரர் வந்தார். அங்கே நின்று  கொண்டிருந்த சேரமான் பெருமாள் சுந்தரரை நமஸ்கரித்தார். இரு சிவச் செம்மல்களும் தமது வாகனங்களை விட்டிறங்கி, திருவாயில்கள் பலவற்றைக் கடந்து, திருவணுக்கன் திருவாயிலை அடைந்தார்கள். சேரர் அவ்வாயிலில் தடைபட்டு நின்றார். சுந்தரர் மட்டும் இறைவன் திருவருளாள் எம்பெருமான் திருமுன் சென்றார். பொன்மயமான கயிலை மாமலையில் வேத முழக்கங்களும், துந்துபி நாதங்களும் ஒலித்த வண்ணமாகவே இருந்தன.முனிவர்கள் சிரமீது கரம் உயர்த்தி சுந்தரரை வரவேற்றனர். தேவகணங்கள், கந்தர்வர்கள் கற்பக மலர் தூவித் துதித்துக் கொண்டிருக்க, எம்பெருமான் கற்பக வல்லியோடு எழுந்தருளியிருந்தார். இத்திருக்கோலக் காட்சியைக் கண்டு கண்களில் நீர் மல்க தாய்ப் பசுவைக் கண்டு விரைந்து வரும் இளங்கன்றைப் போல் ஆராக் காதலோடு ஐயன் திருமுன் சென்று அவரது கமலமலர்ப் பாதங்களை பணிந்து துதித்து நின்றார் சுந்தரர்!  ஆலால சுந்தரரைக் கண்ட திருசடை அண்ணல், ஆனந்தப் பெருக்கோடு, ஆரூரனே நீ வந்தனையோ? என்று திருவாய் மலர்ந்து அருளினார். ஐயனின் அமுதமொழிக் கேட்டு அகமும் முகமும் மலர்ந்த சுந்தரர், ஐயனே ! இந்த ஏழையின் பிழை பொறுத்து, எம்மைத் தடுத்தாட் கொண்ட தெய்வமே! முடிவிலாத் தூய முத்தி நெறியினை அருளிய பெருங்கருணையை எடுத்தருளும் திறத்தினை எமக்கருள வில்லையே? என்று சொல்லி பலமுறை பணிந்து எழுந்து சிவானந்தப் பாற்கடலில் அழுந்தி நின்றார். பேரின்பப் பெருக்கில் மெய்யுருகி நின்ற தம்பிரான் தோழர், எம்பெருமானிடம், நிலவணிந்த நீரணி வேணிய!  நின் மலர்க்கழல் சாரும் பொருட்டுச் சாரும் தவத்தையுடைய சேரமான் பெருமாள் திருவணுக்கன் திருவாயிற் புறத்தே தடைபட்டு நிற்கின்றார் என பணிவோடு பகர்ந்தார். சங்கரர் நந்திதேவரை அழைத்துச் சேரரை அழைத்துவர ஆணையிட்டருளினார். நந்திதேவர் இறைவன் ஆணைப்படி சேரரை அழைத்து வந்தார். எம்பெருமான் திருமுன் வந்த சேரமான் பெருமாள் நாயனார் உள்ளமும் உடலும் பொங்கப் பூரிக்க மெய்ம்மறந்து எம்பெருமானின் திருத்தாள்களில் பன்முறை வீழ்ந்து வணங்கி எழுந்தார். எம்பெருமானின் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பு தவழ சேரரை நோக்கி, எமது அழைப்பின்றி நீ ஏன் இவ்வளவு தொலைவு வந்தாய்? என திருவாய் மலர்ந்து அருளினார். சிரமீது கரங்குவித்து நின்ற சேரமன்னன் எம்பெருமான் திருமுன் தமது பிரார்த்தனையைச் சமர்ப்பித்தார். இவ்வெளியோன் ஆரூரர் கழல் போற்றி ஐயன் திருமுன் அணையப் பெற்றேன். ஐயனின் கருணை வெள்ளத்தால், அடியேன் திருமுன்னே வந்து நின்று சேவித்து நிற்கும் பொன்னான பேறு பெற்றேன். இப்பொழுது இந்த எளியோனுக்குத் தேவரீர்! திருவருள் புரிய வேண்டும்.ஆரூரரின் அரிய நட்பை இவ்வடியேனுக்கு தந்தருளிய வேத முதல்வனே ! எம்பெருமான் மீது பூண்டுள்ள ஆராக்காதலால் இவ்வடியேன் திருவுலா என்னும் பிரபந்தம் ஒன்று பாடினேன். அதனை ஐயன் திருச்செவி சாத்தி அருளப் பணிவோடு கேட்கின்றேன் என்று பிரார்த்தித்தார். எம்பெருமான் சொல்லுக ! எனச் சேரர்க்கு ஆணையிட்டருளினார். புலமைமிக்கச் சேரப் பெருந்தகையார் அருள்மிக்க ஞானவுலா என்னும் திருக்கயிலாய உலாவை மெய்யுருகப் பாடினார். எம்பெருமான் ஞான உலாவினைக் கேட்டு மகிழ்ந்தார். சேரரையும், சுந்தரரையும் சிவகணத் தலைவர்களாக, தமது திருவடி நிழலில் இருக்குமாறு வாழ்த்தி அருளினார். சேரமான் பெருமாள் நாயனார் சிவபிரானின் செஞ்சேவடிகளைத் துதித்து திருத்தொண்டு புரியலானார். சுந்தரமூர்த்தி நாயனார், முன்போல் ஆலால சுந்தரராய், இறைவனின் அணுக்கத் தொண்டராய்த் திருத்தொண்டு புரிந்து வரலானார். பூவுலகில் இருந்த பரவையாரும், சங்கிலியாரும் உலகப் பற்றை விட்டகன்று முன்போல் கமலினி, அனிநிந்தையாருமாகி உமாதேவியாரின் சேவடி போற்றும் சேடிகள் ஆயினர். சுந்தரமூர்த்தி நாயனார் குடும்பமே ஒரு நாயன்மார் குடும்பம் ஆகும். தந்தை சடையனார், தாய் இசைஞானியார், சுந்தரர் இவர்கள் மூவருமே நாயன்மார் என்ற பெருமையைப் பெற்றவர்கள்.

குருபூஜை: சுந்தரரின் குருபூஜை ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

திருச்சிற்றம்பலம்.

 
மேலும் 63 நாயன்மார்கள் »
temple news
பிறையணிந்த பெருமானை வழிவழியாகப் போற்றி வரும் சோழர்களின் கொடி நிழலிலே வளம் கொழிக்கும் திருநகரங்கள் ... மேலும்
 
temple news
திருமுனைப்பாடி பல்லவ நாட்டின்கண் அமைந்துள்ளது. இத்தலத்தில் ஓங்கி உயர்ந்த மாடங்களும், ... மேலும்
 
temple news
உடுப்பூர் என்பது பூம்பொழில்களும், புத்தம் புது மலர்ச்சோலைகளும் சூழ்ந்த மலைவள மிக்கப் பொத்தப்பி ... மேலும்
 
temple news
சோழ நாட்டிலே காவிரிப் பூம்பட்டினமும், நாகபட்டினமும் இரு பெரும் நகரங்களாக விளங்கின. அந்நகரங்களில் ... மேலும்
 
temple news
வடவெள்ளாற்றின் தென்கரையிலே அமைந்துள்ள இருக்குவேளூர் என்னும் தலத்திலே வாழ்ந்து வந்த பெருங்குடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar