கோடை காலத்தில் மழை பொழிய வைத்து மக்களின் பஞ்சம் தீர்ப்பவள் மாரி. அவள் கோயில் கொண்டு விளங்கும் எந்த இடத்திலும் நோய்கள் அண்டாது. பயம் இருக்காது. அவளை வழிபடுவோர் அனைவரும் நலம் பெறுவர். பக்தை வேண்டிக்கொண்டதற்காக அந்த இடத்திலேயே சக்தி மாரியம்மனாக அருள் செய்கிறார். பெங்களூரு நகர் பில்லன்னா கார்டனில் உள்ளது இக்கோயில். வாங்க அது பற்றி தெரிந்து கொள்வோம். நுாறு ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் வாழ்ந்த பெண் ஒருத்தி எது நடந்தாலும் மாரியம்மா பார்த்துக் கொள்வாள் அவள் மீது பாரத்தை சுமத்தி விட்டு தன் வேலைகளை ஒழுங்காக செய்வாள். இவளின் வைராக்கிய பக்திக்கு சோதனை காத்திருந்தது. ஒருநாள் காட்டிலுள்ள சுள்ளிகளை பொறுக்க குழந்தையுடன் சென்றாள். அங்கிருந்த மரத்தில் தொட்டில் கட்டி குழந்தையை உறங்க வைத்து விட்டு காட்டிற்குள் சென்றாள். பிறகு தான் குழந்தை ஞாபகம் வர ஓடி வந்தாள். அந்த சமயத்தில் அங்கிருந்த ஓநாயுடன் எங்கிருந்தோ வந்த சிங்கம் சண்டையிட்டு அதனிடமிருந்து குழந்தை காப்பாற்றியது. இதைக்கண்ட அவள் சிங்க வடிவில் வந்தது அம்மன் தான் என்பதை உணர்ந்தாள். அன்றிலிருந்து அவ்விடத்தில் சிறுபீடம் நிறுவி வழிபட்டுவந்தனர். அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவ்விடத்தில் அம்மனுக்கு கோயில் ஒன்றை கட்டியுள்ளனர். மூர்த்தி சிறியதாயினும் கீர்த்தி பெரியது என்பர். அதற்கு ஏற்றார் போல கருவறையில் நாகம் குடைப்பிடிக்க நான்கு கரங்களுடன் அம்மன் காட்சி தருகிறாள். இன்றும் குழந்தைகளுக்கு காய்ச்சல், சீர் தட்டிக் கொண்டால் அம்மன் சன்னதிக்கு வந்து தீர்த்தம் பெற்று செல்கின்றார்கள் இங்குள்ள மக்கள். கோயிலின் முன்பு அரசும் வேம்பும் ஒன்றாக இருப்பதால் தெய்வீக சக்தி நிறைந்து காணப்படுகிறது. அந்த மரங்களில் சிறு கொப்புகள் எதுவும் இன்று வரை ஒடிக்கப் படுவதில்லை. ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்து அன்னதானம் செய்கின்றனர். எப்படி செல்வது கே. கே. நகரில் இருந்து 15 கி.மீ.,