பதிவு செய்த நாள்
30
ஜூன்
2023
04:06
பழநி: பழநி முருகன் கோயிலில் வின்ச்சில் அனுமதிக்க மறுத்ததாக கூறி, கிருஷ்ணகிரி சேர்ந்த 76 வயது பக்தர் யானை பாதையில் தவழ்ந்து வந்து சிரமம் அடைந்தார்.
பழநி முருகன் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக வின்ச், ரோப்கார் சேவைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், ஜூன் 29 ல் ராக்கால பூஜை நிறைவு பெற்ற பிறகு கிருஷ்ணகிரியை சேர்ந்த முருகேசன் 76, குடும்பத்தினர் 6 பேர், மலைக் கோயிலில் இருந்து கீழிறங்க வின்ச் ஸ்டேஷனுக்கு சென்றனர். அங்கு கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் கோயில் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள தனியார் செக்யூரிட்டிகளிடம் வின்ச் டிக்கெட் கோரியுள்ளனர். செக்யூரிட்டிகள் டிக்கெட் வழங்க மறுத்ததால், யானை பாதை வழியாக மலைக்கோயிலில் இருந்து இறங்கினர். அவர்கள் இடும்பன் கோயில் அருகே வரும்போது முருகேசன் நடக்க முடியாமல் திணறினார். அச்சமயத்தில் கோயில் ஒலிபெருக்கி மூலம் கோயிலில் உள்ள விளக்குகள் அணைக்கப்படும் உடனடியாக பக்தர்கள் கீழே சொல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்ற அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து நடக்க முடியாத நிலையில் இருந்த முருகேசன் கைகளையும், கால்களையும் ஊன்றி தவழ்ந்து செல்லும் நிலை ஏற்பட்டதால் சிரமம் அடைந்தார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இது குறித்து கிருஷ்ணகிரி பக்தர் முருகேசன் கூறுகையில், "நான், எனது குடும்பத்தினருடன் பழநி முருகன் கோயிலுக்கு செல்ல மாலை 4:30 மணிக்கு ரோப் கார் நிலையத்திற்கு வந்தடைந்தோம். அங்கு டிக்கெட் வாங்க பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சாயரட்சை பூஜையில் தரிசனம் செய்ய வந்த நாங்கள், காலதாமதத்தால் ராக்கால பூஜையில் கலந்து கொண்டோம். ராக்கால பூஜை நிறைவு பெற்ற பிறகு, வின்ச் ஸ்டேஷன் பகுதிக்கு வந்து டிக்கெட் வழங்க கோரினோம். ஆனால் சர்வர் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் டிக்கெட் வழங்க இயலாது என அங்கு பணியில் இருந்த செக்யூரிட்டிகள் கூறினர். என்னையும் 65 வயதுடைய மேற்பட்ட எனது மனைவியும் மட்டும் அனுமதிக்கும்படி கூறினோம். ஆனால் செக்யூரிட்டிகள் அனுமதி மறுத்தனர். இதைத் தொடர்ந்து யானைபாதை வழியே கீழே இறங்கி செல்லும் போது, என்னால் நடக்க முடியாத சூழல் ஏற்பட்டது. கோயிலில் இருந்து விளக்குகள் அணைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. எனவே தவழ்ந்து வரும் சூழல் ஏற்பட்டது. அங்கு வந்த செக்யூரிட்டிகள், என்னை தூக்கிக்கொண்டு மலைக்கு கீழே அழைத்து வந்தனர். மலைக்கோயிலில் முதியவர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய முன்னுரிமைகள் வழங்கப்பட வேண்டும். அதனை முறையாக செயல்படுத்த வேண்டும். பக்தர்களை அலட்சியமாக பேசுவதை தவிர்க்க அங்கு கோயில் நிரந்தர பணியாளர்களை நியமிக்க வேண்டும். ரோப் கார் மற்றும் வின்ச் பகுதிகளில் வகை வயது முதிர்ந்த, என்னையும், எனது மனைவியும் மட்டும் அனுமதித்து இருந்தால் இது போன்ற மன சங்கடமான சூழல் எங்கள் குடும்பத்தினருக்கு ஏற்பட்டு இருக்காது." என்றார்.
விஸ்வ ஹிந்து பரிஷத், திருமடங்கள் திருக்கோயில்கள் பாதுகாப்பு, மாநில அமைப்பாளர் செந்தில்குமார் கூறுகையில்," பழநி கோயில் நிர்வாகம், வருவாய் ஈட்டும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. ஆனால் பக்தர்களின் வசதி மற்றும் அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை முறைப்படி செய்வதில்லை. பக்தர்களுக்கு ஏற்படும் அசவுரியங்களை சரி செய்வது இல்லை. கிருஷ்ணகிரி பக்தரை, முதியவர் என்று பாராமல், வின்ச் ஸ்டேஷன் ஊழியர்கள் அனுமதிக்காமல் சிரமப்படுத்தி உள்ளனர். முதியவர்களுக்கு டிக்கெட் வழங்காமல் மேலும் சிலருக்கு டிக்கெட் வழங்கி அனுப்பியுள்ளனர். இரவில் விளக்குகள் அமைக்கப்படும் அறிவிப்பால் நடந்து செல்ல முடியாத அவர் தவழ்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் போல் பலருக்கும் இது போன்ற சிரமங்கள் ஏற்பட்டிருக்கும். ஆனால் அவைகள் வெளியே தெரியாமல் இருந்துள்ளது. இதுகுறித்து கோயில் நிர்வாகம் கவனம் செலுத்தி பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.