பதிவு செய்த நாள்
18
ஜூலை
2023
10:07
வேடசந்தூர்; அகரம் பேரூராட்சி சத்திரப்பட்டியில் கடந்த மாதம் 14, 15,16 தேதிகளில் முத்தாலம்மன் கோயில் திருவிழா நடந்தது. திருவிழா 16 ம் தேதி முடிந்ததால், ஆடல் பாடலுடன் சாமி அழைத்துச் சென்று, அங்குள்ள பூஞ்சோலையில் வைக்கப்பட்டது. பூஞ்சோலையில் வைக்கப்பட்ட சாமி சிலை, மழை பெய்தால் தானாகவே கரைந்து விடும். போதிய மழை பெய்யாத நிலையில் சுவாமி சிலை கரையாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த வாரம் முதல் சிலையை காணவில்லை. இதனால் ஊர் பொதுமக்களும் முக்கியஸ்தர்களும் மழையும் பெய்யவில்லை, சிலையும் கரையவில்லை. ஆனால் சிலையை காணோமே என வருத்தப்பட்டனர். காணாமல் போன சிலையையும் தேடி வந்தனர். இந்நிலையில் முத்தாலம்மன் சுவாமி சிலையை, மர்ம நபர்கள் கடத்திச் சென்று, வேடசந்தூர் அருகே உள்ள லட்சுமணன் பட்டி தடுப்பணையின் ஓரத்தில் தண்ணீரில் வீசி சென்றது தெரிய வந்தது. தண்ணீரில் விழுந்த சிலை முகம் மற்றும் உடல் பகுதி தெரியும் அளவிற்கு விழுந்து கிடப்பதால், சுற்றுப்பகுதி மக்களுக்குத் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து சத்திரப்பட்டி மக்கள் வந்து தண்ணீரில் கிடைக்கும் சிலையை பார்த்து கொந்தளித்து நின்றனர். . வேடசந்தூர் போலீசாருக்கும் தகவல் தெரிய வர, எஸ்.ஐ., பாண்டியன் சம்பவ இடத்திற்கு சென்று, சாமி சிலையை பார்த்துவிட்டு, அங்குள்ள மக்களிடம் பேசி சமாதானப்படுத்தினார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து, சிலையை தூக்கி வந்து ஆற்றுக்குள் போட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.