ஆடி முதல் தேதி, நடு ஆடி (ஆடி 15), கடைசி ஆடி (ஆடி கடைசி தேதி)யின் போது தமிழக கிராமங்களில் இட்லி, தோசை, பணியாரம் என ஆடிப் பலகாரம் தயாரிப்பர். ஆடி முதல் நாளே பக்கத்து வீட்டு பெண்கள், என்ன மதினி என அவரவர் உறவு முறைகளைச் சொல்லி ஆடிப் பலகாரத்திற்கு ஆட்ட அரிசி, உளுந்து, வெந்தயம் ஊறப்போடலையா? எப்ப மாவாட்ட போறீங்க.. என பேசிக்கொள்வர். வசதியான வீடுகளில் மட்டுமே முன்பு ஆட்டு உரல் (மாவாட்டும் உரல்) இருக்கும். ஆடி முதல் நாள் மதியத்திலிருந்தே உரலில் அரிசி, உளுந்து, வெந்தயத்தை இட்டு கதைகள் பேசியபடி பெண்கள் மாவாட்டுவர். இரவு மாவில் உப்பிட்டு கையால் கரைத்து வைப்பர். ஆடி அதிகாலை பலகாரங்கள் சுட்டு, பக்கத்து வீடுகளில் பரிமாறிக்கொள்ளும் பழக்கம் இருந்தது. ஆனால் ஆட்டுரல் இருந்த இடத்தில் இன்று கிரைண்டர், மிக்சிகள். உரல்கள் எல்லாம் நினைவுச் சின்னங்களாகி விட்டன. கிராமங்களில் மட்டுமே இன்றும் இம்முறை தொடர்ந்து வருகிறது.