பதிவு செய்த நாள்
18
ஜூலை
2023
06:07
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணிக்கு புல்லாரண்யம், தர்ப்ப சயனம் என்றும் பெயர் உண்டு. இங்கிருந்த காட்டில் வாழ்ந்த மகரிஷிகள் தவத்தில் ஈடுபட்ட போது அரக்கர்கள் துன்புறுத்தினர். தங்களைக் காப்பாற்ற வேண்டும் என வேண்டிய மகரிஷிகளுக்காக அரசமரமாக தோன்றினார் மகாவிஷ்ணு. அத்தலமே திருப்புல்லாணி ஜெகன்நாத பெருமாள் கோயிலாக திகழ்கிறது.
கோசலை, கைகேயி, சுமித்ரை ஆகிய மூன்று பட்டத்தரசிகள் இருந்தும் தனக்கு குழந்தை இல்லையே என அயோத்தி மன்னர் தசரதர் வருந்தினார். இங்குள்ள ஜெகன்நாத பெருமாளை வேண்டிக் கொண்டார். அதன் பயனாக ராமர், பரதர், லட்சுமணர், சத்ருக்னர் ஆகிய நான்கு குழந்தைகளைப் பெற்றார். பிற்காலத்தில் சீதையை பிரிந்த போது ராமர் இத்தலத்திற்கு வந்தார். ‘கடலை தாண்டி இலங்கைக்குச் சென்று எப்படி சீதையை மீட்பது’ என்ற சோகத்தில் தர்ப்பை புல்லின் மீது தலை வைத்து படுத்திருந்தார். அப்போது ராவணனின் தம்பியான விபீஷணன் சரணாகதி அடைய ராமரை சந்திக்க வந்தார். அவரிடம் ஆலோசித்த பின்னரே அனுமன் உள்ளிட்ட வானரங்களின் உதவியுடன் சேதுப்பாலம் அமைத்து இலங்கையை அடைந்தார். ராவணனுடன் போர் புரிந்து சீதையை மீட்டார். இக்கோயிலில் தர்ப்பை புல்லின் மீது கிடந்த கோலத்தில் ராமரை தரிசிக்கலாம்.
மகரிஷிகளைக் காப்பாற்ற பெருமாள் காட்சியளித்த அரசமரமே இக்கோயிலின் தலவிருட்சம். அஸ்வதா என்றும் அரசமரத்துக்கு பெயர் இருப்பதால் இங்குள்ள பெருமாள் ‘அஸ்வத நாராயணன்’ என்றும் அழைக்கப்படுகிறார். குழந்தைப் பேற்றை வழங்கும் தன்மை கொண்டது இந்த அரசமரம். குழந்தை வரம் வேண்டி இங்கு வழிபாடு செய்வோர் ஏராளம்.
பகவத் கீதையில், ‘மரங்களில் நான் அரச மரமாக இருக்கிறேன்’ என்கிறார் பகவான் கிருஷ்ணர். தசரதருக்கு குழந்தைப்பேறு அளித்ததும், சயன கோலத்தில் ராமர் காட்சி அளித்ததும், அரச மரமாக வந்து மகரிஷிகளை காப்பாற்றியதும், பட்டு பீதாம்பர தாரியாக மகாவிஷ்ணு காட்சியளிப்பதும் இத்தலத்தின் சிறப்புகள். மணமான தம்பதியர் குழந்தைப்பேறு வேண்டி பெருமாளையும், அரச மரத்தையும் வழிபடுகின்றனர். குழந்தை பிறந்த பின் சங்கு மாலையை காணிக்கை செலுத்துகின்றனர்.
மரங்களில் ராஜாவாக இருப்பது அரசமரம். ஞானம் தரும் இம்மரத்திற்கு போதிமரம் என்றும் பெயருண்டு. பல கோயில்களில் அரசமரம் தல விருட்சமாகவும், சித்தர்களில் பலர் அரச மரத்தின் அருகிலுள்ள குகைகளைத் தங்களின் இருப்பிடமாகவும் கொண்டிருந்தனர்.
மோரேசியே குடும்பத்தை சேர்ந்த அரச மரத்தின் தாவரவியல் பெயர் பைகஸ் ரிலிஜியோசா.
போகர் பாடிய பாடல்
அரசென்ற பேருடைய ஆண்மைகேளு
ஆண்மையா மிப்பலங் கெச்சமாகும்
தாசென்ற சபலபத் திரகமாகும்
தளிரான மங்கலியா சிரவனேர்வாம்
பிரசென்ற அசுவர்த்தோ பொதிவிருட்சம்
பேரான கெசந்தாதி மூலக்கிரகம்
திரசென்ற பரமானு கூலியாகுஞ்
செப்பியதோ ரரசுடைய சீருமாமே.
ஆண்மை, பலங்கெச்சம், மங்கலி, அஸ்வத்திரம், சிரவனோர்வம், சபல பத்திரம், கெசந்தாதி, பொதிவிருட்சம், மூலக்கிரகம், பரமானுகூலி என அரசமரத்திற்கு பல பெயர்கள் உண்டு.
அகத்தியர் பாடிய பாடல்
அரசவேர் மேல்விரணம் ஆற்றுமவ் வித்து
வெருவவரும் சுக்கிலநோய் விட்டும் - குரல்வறள்வி
தாகமொழிக் குங்கொழுந்து தாதுதரும் வெப்பகற்றும்
வேகமுத்தோ டம்போக்கும் மெய்
அரச மரத்தால் உடல் பலம் அதிகரிக்கும். இதன் கொழுந்து இலையைச் சாப்பிட பெண்களுக்கு கருப்பை நோய்கள் நீங்கும். கரு தங்கும். ஆண்மை பெருகும். உஷ்ணம் தணியும். வாதம், பித்தம், சிலேத்துமம் ஆகிய மூன்று வகையான குற்றங்களால் தோன்றும் நோய்களும் நீங்கும். காய்ச்சல் மறையும் என்கிறார் அகத்தியர்.
உடல்நலனை காப்பதோடு ஆயுளை நீட்டிக்கும் தன்மையும் அரச மரத்திற்கு உண்டு. இதன் இலை, பட்டை, வேர், விதைகள் அனைத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். உடலுக்கு பலம் தரும் லேகியம் தயாரிக்கவும் பயன்படுகிறது.