மது, கைடபர் என்னும் அசுரர்கள் வேதங்களை பிரம்மாவிடம் இருந்து திருடிச் சென்றனர். குதிரை முகத்துடன் தோன்றிய மகாவிஷ்ணு அவர்களை வதம் செய்து வேதங்களை மீட்டார். பின்னர் சங்கு, சக்கரம் தாங்கி ஞானமுத்திரையுடன் ‘ஹயக்ரீவர்’ என்னும் பெயரில் தேவர்களுக்கு தரிசனம் அளித்தார். இவரிடம் இருந்தே சரஸ்வதி அனைத்து வித்தைகளையும் கற்றுக் கொண்டாள். கடலுார் மாவட்டம் திருவஹீந்திரபுரத்தில் உள்ள குன்றின் மீது இவருக்கு கோயில் உள்ளது. சுவாமிதேசிகன் என்னும் மகானுக்கு இங்கு காட்சியளித்தார். படிப்பில் சிறக்க புதனன்று இவரை வழிபடுவது சிறப்பு.