மானாமதுரை முத்துமாரியம்மன் கோவில் ஆடி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூலை 2023 12:07
மானாமதுரை: மானாமதுரை கன்னார் தெரு முத்துமாரியம்மன் கோவில் ஆடி திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மானாமதுரை கன்னார் தெரு முத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் விஸ்வகர்மா மகா சபை,இளைஞர் பேரவை, அன்னதான குழு ஆகியவற்றின் சார்பில் தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான விழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக முத்துமாரியம்மனுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரங்கள் செய்து அபிஷேக,ஆராதனைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் மானாமதுரை கன்னார்தெரு மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான வருகிற 28ம் தேதி வைகை ஆற்றிலிருந்து பால்குடம் ஏந்தி அலகுகுத்தி வரும் பக்தர்கள் கோவில் முன்பாக பூக்குழி இறங்க உள்ளனர். அதனைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெற உள்ளது 29ஆம் தேதி முளைப்பாரி உற்சவ விழாவும் 30ம் தேதி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை விஸ்வகர்மா மகா சபை,இளைஞர் பேரவை,அன்னதான குழுவினர் செய்து வருகின்றனர்.