பதிவு செய்த நாள்
29
ஜூலை
2023
12:07
செந்துறை; நத்தம் அருகே செந்துறை மல்லநாயக்கன்பட்டியில் நடந்த மாடு மாலை தாண்டும் பாரம்பரிய எருது ஓட்ட நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நத்தம் செந்துறை அருகே மல்லநாயக்கன்பட்டி கிராமம் உள்ளது. கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் (கம்பளத்தார், நாயக்கர், குஜ்ஜ பொம்மு நாயக்கர்) குலங்களின் பாரம்பரியமாக வணங்கி வரும் ஸ்ரீ ஜக்காளம்மன் திருக்கோவிலில் மாலை தாண்டும் விழா 22 ஆண்டுக்கு பிறகு நேற்று நடைபெற்றது. இத்திருவிழாவையொட்டி கடந்த ஜூலை 17 ம் தேதி சாமி சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கிய திருவிழா 12 நாட்கள் நடைபெற்றது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று எருது ஓட்டம் எனும் மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கருத்த நாயக்கர் மந்தையில் ஜக்காளம்மன் கோவில் சிறப்பு பூஜை செய்து கவராயபட்டி நாயக்கர் மந்தை, தேனி, போடி, மணப்பறை, ஜய்யர் மலை, கடவூர் உள்ளிட்ட 14 மந்தைகளை சேர்ந்த கோவில் காளைகள் அழைத்து வரப்பட்டது. பின்னர் கோவில் முன்பாக நடைபெற்ற எருது சந்திப்பு நிகழ்ச்சியில் பாரம்பரிய முறையில் காளைகளுக்கு மரியாதை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொத்து கொம்புவில் காளைகள் அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் அந்த காளைகள் கொத்து கொம்புவில் இருந்து தோரணவாயிலை நோக்கி அவிழ்த்து விடப்பட்டது. அப்போது காளைகளைப் பிடித்துக் கொண்டு வீரர்கள் வேகமாக ஓடி வந்து எல்லையை தொட்டனர். இதில் முதலாவதாக வரும் காளையின் மீது முதல் மரியாதை செய்யும் விதமாக பெண்கள் மஞ்சள் பொடி தூவி, எலுமிச்சை பழம் பரிசாக மந்தை நாயக்கர் வழங்கினார் . இவ்விழாவில் தேனி, திண்டுக்கல், தேனி போடி, உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதியிலுள்ள ஏராளமான குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் அனைவருக்கும் காலை முதல் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டு அம்பலம், நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்ஷா,தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் ரத்தினகுமார், பழனிச்சாமி, நகர செயலாளர் ராஜ்மோகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.