பரமக்குடி ஆடி விழாவில் முத்து பல்லக்கில் சுந்தரராஜபெருமாள் உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜூலை 2023 04:07
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவில் தவழும் கண்ணனாக பெருமாள் முத்து பல்லக்கில் வீதி உலா வந்தார்.
பரமக்குடியில் சவுந்தரவல்லி தாயார் சமேத சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்சவ விழா ஜூலை 24 தொடங்கி நடக்கிறது. ஜூலை 29 ஆண்டாள் பெருமாள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது தொடர்ந்து நேற்று எட்டாம் திருநாளில் காலை 10:00 மணிக்கு பெருமாள் தவழும் கண்ணனாக நவநீத கிருஷ்ணன் அலங்காரத்தில் முத்து பல்லக்கில் அருள் பாலித்தார். பின்னர் முக்கிய வீதிகளில் வலம் வந்த பெருமாளுக்கு பக்தர்கள் வெண்ணைய், நெய் படைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர். மதியம் 2:00 மணிக்கு வைகை ஆற்றில் அமைந்துள்ள மண்டகப்படியில் பெருமாள் சேர்க்கை ஆகினார். மாலை ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அங்கிருந்து பெருமாள், கள்ளழகர் திருக்கோலத்தில் குதிரை வாகனத்தில் அலங்காரமாகி திருக்கோயிலை அடைந்தார். நாளை காலை ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பெருமாள் எழுந்தருளி 10:31 மணிக்கு ரத வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்துள்ளனர்.