பதிவு செய்த நாள்
01
ஆக
2023
04:08
சென்னை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக, சென்னையில் உள்ள நிலத்தில், ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தில், மணிகண்டன் என்பவர் தாக்கல் செய்த மனு: சென்னை அடையாறு அருணாச்சலபுரத்தில் உள்ள நிலம், அம்மாயி அம்மாள் என்பவருக்கு சொந்தமானது. 1909ல் இந்த நிலத்தில் தர்மசத்திரத்தை உருவாக்கினார். பின், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் நிர்வாக அறங்காவலருக்கு, உயில் வாயிலாக சொத்து மாற்றம் செய்யப்பட்டது. சைதாப்பேட்டை சார்- - பதிவாளர் அலுவலகத்தில், உயில் பதிவு செய்யப்பட்டது. காலியிடத்தில், ஜெய்ஸ்ரீ அருணாச்சல ஈஸ்வரர் கோவில் மற்றும் பக்த பஜன சபா ஆகியவை ஏற்படுத்தப்பட்டன. இந்நிலையில், போலி ஆவணங்களை தயாரித்து, கோவில் நிலத்தில் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். கோவில் சொத்துக்களை பாதுகாக்க, அறநிலையத் துறை தவறி விட்டது. ஆக்கிரமிப்பாளர்களை அகற்றவும், தானம் செய்தவரின் விருப்பத்தை நிறைவேற்றவும் கோரி, அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். மனுவை பரிசீலித்து, மோசடியாக பதிவு செய்த விற்பனை பத்திரத்தை, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. அறநிலையத் துறை சார்பில், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, கோவில் சொத்து விபரங்கள் மற்றும் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சொத்தை மீட்டு, கோவில் நலனுக்கு பயன்படுத்த, ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார், என்றார்.
மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஸ்ரீலேகா, மாவட்டப் பதிவாளர் சார்பில், அரசு வழக்கறிஞர் சி.ஜெயப்பிரகாஷ் ஆஜராகினர். மனுவை விசாரித்த, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களை சேகரித்து, வருவாய் துறை ஆவணங்களில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள, அறநிலையத் துறை ஆணையர் மற்றும் கோவில் இணை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்ட நடைமுறையை பின்பற்றி, ஆக்கிரமிப்பாளர்களையும் அகற்ற வேண்டும். கோவில் சொத்துக்களை சட்டவிரோதமாக மாற்றம் செய்வதை தடுக்க, சம்பந்தப்பட்ட சார் -- பதிவாளர் அலுவலகத்தில் உடனடியாக ஆட்சேபனைகளை தெரிவிக்க வேண்டும். ஆறு மாதங்களில், இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.