அம்மனுக்கு தக்காளி மாலை செலுத்தி வழிபடும் பக்தர்கள்; நினைத்தது நடப்பதாக பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஆக 2023 11:08
சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி மீனாட்சிபுரத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு விழாவில் அம்மனுக்கு தக்காளிப் பழச்சாறால் அபிஷேகம் செய்வர். இளநீர், பன்னீர், திருநீறு, பஞ்சாமிர்தம் போன்ற அபிஷேகம் நடப்பது வாடிக்கை. ஆனால், தக்காளி பழச்சாறு அபிஷேகம் செய்வது வித்தியாசமான வழிபாடாகும். அம்மனுக்கு தக்காளி பழங்கள் கோர்த்த மாலையும் சாத்தப்படுகிறது.
காரைக்குடி நகரின் மையப்பகுதியில் உள்ள உள்ளது முத்துமாரியம்மன் கோயில். 1956ம் ஆண்டு நவம்பர் 8ம் நாள் லலிதா என்ற 8வயது சிறுமி காரைக்குடி அருகிலுள்ள மீனாட்சிபுரத்திற்கு உடல் முழுவதும் அம்மையுடன் வந்தாள். சமயபுரத்தில் இருந்து தனியாக வந்த அந்த சிறுமியை மக்கள் பார்த்தார்கள். சிலநாளில் சிறுமியின் வாயிலிருந்து கிளம்பிய வார்த்தைகளெல்லாம் அருள்வாக்காக வெளிவந்து பல அற்புதங்களை நிகழ்த்தியது. சிலநாளில் அந்த சிறுமியின் உடல் மீதிருந்த அம்மை முத்துக்கள் போல் முளைத்தது. சிறுமி படுத்த படுக்கையானாள். பலபேர் சிறுமியை கிண்டலடித்தனர். அதை அவள் பொருட்படுத்தவில்லை.
ஒருநாள் தன்னை ஏளனப்படுத்திய ஒருவரை, உன் தோட்டத்தில் ஒரு கிணறு இருக்கிறது; அந்தக்கிணற்றடியில் இருக்கும் தக்காளிச்செடியில் ஒரே ஒரு தக்காளி இருக்கும். அதைப்பறித்துக் கொண்டு வா என்றாள். அவரோ! சிரித்தபடியே,என் வீட்டிலா? கிணற்றடியிலா? தக்காளிச் செடியா? எனக்கே தெரியாமல் செடியாவது, பழமாவது எனக் கிண்டலாகப் பதில் கூறினார். சிறுமியோ,நீ போய்ப் பார். தக்காளியைக் கொண்டு வா எனக் கூறினாள். அவர் தனது வீட்டிற்கு சென்று பார்த்தார். அங்கு கிணற்றடியில் திடீரென முளைத்திருந்த தக்காளிச் செடியில் ஒரே ஒரு பெரிய தக்காளிப்பழம் மட்டும் இருந்தது. அப்போது தான் அவருக்கு அந்த தெய்வச் சிறுமியின் மகிமை புரிந்தது. உடனே தக்காளிப்பழத்தை பறித்து சிறுமியிடம் கொடுத்து அவளது காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார். அன்று முதல் பக்தர்கள் இத்தலத்தில் தக்காளியை தங்களது காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.