தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி தேரோட்டம்; பக்தர்கள் வடம் பிடித்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஆக 2023 11:08
தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயிலில் ஆடிப்பெருந்திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயில் குடகனாற்றின் கரையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க திருக்கோயிலாகும். தமிழகத்தில் வேறெந்த திருக்கோயிலிலும் இல்லாத கலையழகு மிக்க, கற்சிலா விக்கிரகங்கள் அமையப்பெற்ற பிரார்த்தனை திருத்தலமாகும். இக்கோயிலில் ஆடிப்பெரும் திருவிழா, 24.7.23 திங்கள் அன்று காலை 7:30 மணியளவில் கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சௌந்தரராஜ பெருமாள், வெவ்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி தேரோடும் வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தாடிக்கொம்பு நகர் பகுதி ஒவ்வொரு நாளும் விழா கோலமாய் மாறிப்போனது. இதனைத் தொடர்ந்து 30.7.23 அன்று மாலை 6:30 மணி முதல் 7:30 மணிக்குள் திருக்கல்யாணமும் நடந்தது. இதனை தொடர்ந்து மாப்பிள்ளை அழைப்பு, காசியாத்திரை உள்ளிட்ட பல்வேறு வைபவங்கள் நடத்தப்பட்டன. 1.8.23 செவ்வாய் அன்று மாலை 5:00 மணிக்கு மேல், வடம் பிடித்து திருத்தேரோட்டம் நடந்தது. இத் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் சுரேஷ், செயல் அலுவலர் முருகன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.