பதிவு செய்த நாள்
02
ஆக
2023
11:08
திருப்பதி: திருமலை ஏழுமலையானுக்கு, பிரசாதமாக படைக்கப்படும், லட்டின் வயது, 308 வருடங்கள் என, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை ஏழுமலையானுக்கு, விசேஷ பிரசாதமாக படைக்கப்படுவது லட்டு. இந்த லட்டு, கடலை மாவு, சர்க்கரை, நெய், ஏலக்காய், பச்சை கற்பூரம், பாதாம், முந்திரி, கல்கண்டு, உலர் திராட்சை, குங்குமப்பூ ஆகியவைகளை, குறிப்பிட்ட அளவில், அதற்கென உள்ள முறைப்படி சேர்த்து தயாரிக்கப்படுகிறது. திருமலையில், தினசரி, 2 லட்சம் முதல், 3 லட்சம் எண்ணிக்கையில் லட்டு பிரசாதங்கள் தயாரிக்கப்படுகிறது. உற்சவ நாட்களில், 5 லட்சம் லட்டுகள் வரை, சேமிப்பில் வைக்கப்படும். இந்த லட்டு நிவேதனம், ஏழுமலையானுக்கு, 1715ம் ஆண்டு, ஆக., 2ல், துவக்கப்பட்டது. இந்நிலையில், லட்டு பிரசாதத்திற்கு, நாளை (ஆக.,3), 308 வயதாகிறது. கடந்த, 2009ல், திருமலை லட்டு பிரசாதத்திற்கு, புவிசார் குறியீடும் வழங்கப்பட்டது. லட்டு பிரசாத விற்பனை மூலம், தேவஸ்தானத்திற்கு, மாதம், 1 கோடி ரூபாய் வருமானம் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது. லட்டு படைத்ததற்கு முன், திருமலை ஏழுமலையானுக்கு, வடை முக்கிய பிரசாதமாக படைக்கப்பட்டு வந்தது.