பதிவு செய்த நாள்
02
ஆக
2023
12:08
கீழச்சிவல்பட்டி; திருப்புத்தூர் ஒன்றியம் வடக்கு இளையாத்தங்குடியில் பூரண புஷ்கலா சமேத கருவேம்பு செல்ல அய்யனார் கோயில் எட்டரை கிராம செவ்வாய் புரவி எடுப்பு துவங்கியது.
இக்கோயில் புரவி எடுப்பை முன்னிட்டு ஜூன் 20 ல் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்து, சேங்கையிலிருந்து பிடி மண் கொடுத்தல் நடந்தது. அரண்மனையார், கல்வாச நாட்டு அம்பலகம், எட்டரைக் கிராமத்து அம்பலகாரர்கள், அனைத்து கிராமத்து சாமியாடிகள், பூசாரிகள், கோயில் குலால அர்ச்சகர்கள் கிராமத்தினர் பலரும் பங்கேற்றனர். தொடர்ந்து அரண்மணை குதிரை, நாட்டுக்குதிரை தலா ஒன்று, கிராமத்து குதிரை 32, நேர்த்திக் குதிரைகள் 6, பொம்மைகள் 30ம், காளைகள் 10ம் வடிவமைக்கப்பட்டது. நேற்று மாலை சூளையிலிருந்து புரவிகள் புறப்பாடு துவங்கியது. தொடர்ந்து புரவிகள் எடுக்கப்பட்டு ஊர்வலமாக வந்து புரவிப்பொட்டலுக்கு வந்தது. தொடர்ந்து புரவிகளுக்கு பூஜைகள் நடந்து தீபாராதனை காட்டப்பட்டது. இன்று மாலை மீண்டும் புரவிகள் புரவிப்பொட்டலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கோயிலுக்கு சேர்க்கப்படும். சுமார் 38 ஆண்டுகளுக்கு பின் தற்போது இக்கோயிலுக்கு புரவி எடுப்பு விழா நடத்தப்பட்டதால் வடக்கு இளையாத்தங்குடி, தெற்கு இளையாத்தங்குடி, கோயில் இளையாத்தங்குடி,சந்திரன்பட்டி, சேவிணிப்பட்டி, ஆவிணிப்பட்டி, ரெகுநாதப்பட்டி, கீரணிப்பட்டி, முத்தூர், விராமதி, கல்லாப்பேட்டை, அச்சரம்பட்டி,காவேரிபுரம் உள்ளிட்ட கிராமத்தினர் திரளாக பங்கேற்றனர்.