மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி கும்பாபிஷேகத்திற்கு தயாராகும் பிரம்மாண்ட யாக சாலை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஆக 2023 02:08
மயிலாடுதுறை: மயிலாடுதுறை பெரிய கோவிலுக்கு செப் 3 கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. பிரம்மாண்ட யாக சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி கோயில் மிகப்பழமை வாய்ந்தது. ஒருசமயம் சிவனை மதியாமல் நடந்த தட்சன் வேள்வியில் கலந்துகொண்ட உமாதேவியார் அந்தப்பாவம் நீங்க பரிகாரம் தேடினார். அப்போது சிவபெருமான் உமாதேவியாரிடம் துலாக்காவிரி நதிக்கரையில் உள்ள மாமரத்தோப்பில் சுயம்புவாக உள்ள சிவலிங்கத்தை பூஜை செய்துவந்தால் பாவங்கள் நீங்கிடும் என்று அருளினார். அதைக்கேட்ட பார்வதி மயில் உருவம் கொண்டு இத்தலத்தில் சிவபூஜை செய்துவந்தார். அந்த வழிபாட்டினால் மகிழ்ந்த சிவபெருமான் ஆண்மயிலாக அம்பிகைக்கு காட்சியருள இருவரும் மயூரதாண்டவம் ஆடி உலகிற்கு அருள்பாலித்தனர். இதனால் மாயூரம் என்றும் மயிலாடுதுறை என்றும் இத்தலத்திற்கு பெயர் வழங்கலாயிற்று. ஞானசம்பந்தர், நாவுக்கர் தேவாரம் பாடிய சிறப்புடையது. மாயூர நாதரை வள்ளல் என்று போற்றுகின்றனர். தம்மை வழிபடுவோர்க்கு எல்லா நலன்களையும் வாரிவழங்குவதால் வள்ளலார் என்று தமிழ்வேதம் போற்றுகின்றது.
அருணகிரிநாதர் இத்தலத்து ஷண்முகர்மீது திருப்புகழ் பாடியுள்ளார். நல்லத்துக்குடி கிருஷ்ண ஐயர் இத்தலத்து அம்பிகைமீது அபயாம்பிகை சதகம் எனும் நூறு பாடல்கள் பாடியுள்ளார். முத்துசாமி தீட்சிதர் நவாவரண கீர்த்தனை பாடி அம்மையை வழிபட்டுள்ளார். இத்தலம் திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்துக்குச்சொந்தமானது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த மயிலாடுதுறை அபயாம்பிகை சமேத மாயூரநாத சுவாமி கோயில் திருப்பணிகள் பக்தர்களின் பெரும் பங்களிப்புடன் சிறப்பாக நடைபெற்று முடிவடையும் தருவாயில் உள்ளது. தொடர்ந்து ஆவணி மாதம் 17ம் தேதி, செப்டம்பர் 3ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 7 மணி முதல் 8 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் திருவாவடுதுறை ஆதீனம் 24 வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் நிகழவுள்ளது. இதற்காக உத்தமபட்ச யாகம் என்று சொல்லக்கூடிய 33 குண்டங்கள் கொண்ட யாகசாலை சுவாமிக்கும் அம்பாளுக்கும் அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்றுவருகிறது. மொத்தம் 118 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 8 கால வேள்விகள் நடத்தப்பட உள்ளன. மயிலாடுதுறை சிவபுரம் வேதசிவாகம பாடசாலை நிறுவனர் சிவஶ்ரீ சுவாமிநாத சிவாசாரியார் தலைமையில் 175 சிவாசாரியார்கள் கலந்துகொண்டு யாகங்களை நிகழ்த்துகிறார்கள். 40 வேதவிற்பன்னர்கள் வேதபாராயணம் நிகழ்த்துகிறார்கள். 108 ஓதுவார்கள் கலந்துகொண்டு தேவார திருவாசகங்களை ஆகஸ்டு 30 புதன் கிழமை முதல் செப்டம்பர் 3 ஞாயிறு வரை தொடர்ந்து 5 நாட்கள் பாராயணம் செய்யவுள்ளனர். இந்த நிகழ்வில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்து திருவருள் பெற கோவில் நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கும்பாபிஷேக முக்கிய நிகழ்ச்சிகள்; ஆகஸ்டு 27 ஞாயிறு காலை கணபதி ஹோமத்துடன் துவக்கம். தொடர்ந்து 28, 29 திங்கள், செவ்வாய் கிழமைகளில் பூர்வாங்க பூஜைகள் நடைபெறுகின்றன. 30ம் தேதி காலை காவிரியிலிருந்து புனிதநீர் கொண்டுவருதல், அன்று மாலை யாகசாலை யாகங்கள் துவங்குகின்றன. தொடர்ந்து செப் 3 ஞாயிறு காலை வரை காலை, மாலை 8 கால யாகங்கள் நடக்கின்றன. செப் 3 ஞாயிறு காலை மகா கும்பாபிஷேகமும், மாலை திருக்கல்யாணம், பஞ்சமூர்த்திகள் திருவீதியுலாவும் நடைபெறும்.