பதிவு செய்த நாள்
10
ஆக
2023
03:08
பல்லடம்: விநாயகர் சிலை வைப்பதில் இந்துக்கள் மத்தியில் அதிக ஆர்வம் இருந்தும், தயாரிப்பு குறைவால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, பல்லடம் அருகே, விநாயகர் சிலை தயாரிப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுவது வழக்கம். இவ்வாறு, நடப்பு ஆண்டு சிலைகள் வைப்பதில் இந்துக்கள் அதிக ஆர்வம் காட்டுவதாகவும், ஆனால், தயாரிப்பு குறைவால் போதிய சிலைகள் இல்லை என்றும், பல்லடம் அருகே விநாயகர் சிலை தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து, திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் கூறியதாவது: கடந்த, 13 ஆண்டுகளாக விநாயகர் சிலை தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறோம். திருப்பூர், தாராபுரம் பழனி, உடுமலை , பல்லடம், கோவை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளுக்கு சிலைகள் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். கிழங்கு மாவு, குச்சிகள் மற்றும் வாட்டர் கலர் பயன்படுத்தி, மாசு ஏற்படாத வகையில் சிலைகள் தயாரிக்கப்படுகிறது. குறைந்தபட்சம், 2 அடி முதல் அதிகபட்சம், 16 அடி சிலைகள் வரை எங்களிடம் உள்ளது. பாண்டிச்சேரி, விழுப்புரம் பகுதியில் இருந்து சிலைகளின் பாகங்களை பெற்று, இங்கு, சிலைகள் முழு வடிவமைப்பு பெறும். மார்ச் மாதமே இப்பணிகள் துவங்கி, ஆக., மாத இறுதியில் நிறைவடையும். ஒவ்வொரு ஆண்டும், 300க்கும் அதிகமான சிலைகள் தயாரித்து விற்பனை செய்வோம். கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மூன்று ஆண்டாக, சிலை விற்பனை மந்தமாகவே இருந்தது. தற்போது மீண்டும் பழைய நிலை திரும்பி வருகிறது. ஆனால், பெயிண்ட், அடிக்கு 600 ரூபாய் வரை விலை கூடியுள்ளது நடப்பு ஆண்டு, 200 சிலைகளுக்கு மட்டுமே ஆர்டர் கொடுத்துள்ளோம். இந்துக்கள், இந்து அமைப்பினர் கூடுதலாக சிலை வைக்க ஆர்வம் காட்டுகின்றனர் ஆனால், தயாரிப்பு குறைவு காரணமாக, சிலை தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. 20 அடிக்கு மேல் சிலைகள் கேட்கின்றனர். அரசு கட்டுப்பாடு உள்ளதால், உயரமான சிலைகளை தவிர்க்கிறோம் என்றார்.