திருப்பதி மலைப்பாதையில் கரடி, சிறுத்தை!; பக்தர்களுக்கு எச்சரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஆக 2023 12:08
திருமலை: திருப்பதியிலிருந்து திருமலைக்கு செல்லும் மலைப்பாதையில் நேற்றிரவு தனது குடும்பத்தாருடன் நடந்து சென்றுக்கொண்டிருந்த 6 வயது சிறுமியை, வன விலங்கு ஒன்று திடீரென இழுத்துச் சென்று, அடித்து கொன்றுள்ளது.
ஆந்திர மாநிலம், நெல்லுரை சேர்ந்த தினேஷ் என்பவர் அவரது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். தனது 6 வயது மகளுடன் திருப்பதி அலிபிரியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரையாக சென்றுள்ளார். நேற்றிரவு (ஆக.,11) 8 மணியளவில் லட்சுமி நரசிம்மர் கோயில் அருகே வந்தபோது, திடீரென விலங்கு ஒன்று, சிறுமியை பிடித்து புதருக்குள் இழுத்து சென்றது. தங்கள் கண் முன்னே மகளை சிறுத்தை இழுத்து செல்வதை பார்த்த பெற்றோர் அலறி கூச்சலிட்டனர். தகவலறிந்து திருப்பதி வன அதிகாரிகள் இரவு முழுவதும் சிறுமியை தேடினர். இன்று காலையில் லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு சற்று தூரத்தில், சிறுமி லக்ஷிதாவின் உடல் கண்டு பிடிக்கப்பட்டது. அதிலும் சிறுமியின் உடல் பாதிதான் உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மீதி பாகத்தை சிறுத்தை உட்கொண்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. தனது மகளின் சடலத்தை பார்த்து பெற்றோர், உறவினர் கதறி அழுதனர். பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதிகாரிகள் ஆய்வு: சிறுமியை தாக்கப்பட்ட இடத்தில் CCF நாகேஸ்வர ராவ் மற்றும் DAFO சதீஷ்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்த தாக்குதல் சிறுத்தையா அல்லது கரடியால் தாக்கப்பட்டதா என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்படும் என தெரிவித்தனர். விலங்குகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமராக்கள் மற்றும் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. 7வது மைல் முதல் நரசிம்ம சுவாமி கோவில் பகுதி வரை உயர் எச்சரிக்கை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.