நான்குநேரி சாஸ்தா கோயில் வளாகத்தில் செயல்பட்ட அன்னதான கட்டடத்திற்கு ‘சீல்’
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஆக 2023 01:08
நான்குநேரி: நான்குநேரி அருகே பெருவேம்புடையார் சாஸ்தா கோயிலில் செயல்பட்ட அன்னதான டிரஸ்ட் கட்டடத்திற்கு, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் நான்குநேரி அருகே உள்ள ராஜாக்கள் மங்கலம் பெருவேம்புடையார் சாஸ்தா கோயில் உள்ளது. பழமையான கோயிலுக்கு மாநிலம் முழுவதிலும் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் ராதாபுரம் தாலுகாவில் உள்ள தண்டையார்குளத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சுப்பிரமணியன் இக்கோயிலில் அன்னதான டிரஸ்ட் என்ற பெயரில் தொண்டு நிறுவனம் துவக்கி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வந்தார். இதில் கோயிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்ரமித்துள்ளதாக அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அவர் ஆக்ரமிப்பு இடங்களிலிருந்து வெளியேறுமாறு அறநிலையத் துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து நெல்லை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா, நான்குநேரி தாலுகா ஆய்வாளர் லதா, திருவேம்புடையார் சாஸ்தா கோயில் நிர்வாக அலுவலர் முருகன் உள்ளிட்ட அறநிலையத் துறை ஊழியர்கள் நேற்று அன்னதான டிரஸ்ட்க்கு சொந்தமான கட்டடத்தில் இருந்த பொருட்களை வெளியே எடுத்து வைத்தனர். தொடர்ந்து அங்கு வழங்கப்பட்ட மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதற்கு அன்னதான டிரஸ்ட் மற்றும் இந்து மக்கள் கட்சி சார்பில் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அவர்களுக்கும் அறநிலையத்துறை ஊழியர்களுக்கும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் அனைத்து பொருட்களும் அகற்றப்பட்டு கட்டடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.