பதிவு செய்த நாள்
23
ஆக
2023
03:08
மேட்டுப்பாளையம்: காரமடை அருகே புதிதாக கட்டிய, சக்தி செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம், இன்று நடைபெறுகிறது.
காரமடை அடுத்த கெம்பே கவுடர் காலனியில், சக்தி செல்வ விநாயகர் கோவில் சிறிய அளவில் இருந்தது. தற்போது பெரிய அளவில் புதிதாக கோவில் கட்டி முடிக்கப்பட்டது. மேலும் கோவில் வளாகத்தில் முருகர், தட்சிணாமூர்த்தி, இந்திரன், துர்க்கை அம்மன், அன்னபூரணி, நவ நாயகர் ஆகிய சுவாமிகளுக்கு சன்னதிகள் கட்டப்பட்டுள்ளன. நேற்று மதியம் எஸ்.ஆர்.எஸ்.ஐ., பள்ளியில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து, தீர்த்த குடங்கள், முளைப்பாலிகளை, பெண்கள் ஊர்வலமாக சக்தி செல்வ விநாயகர் கோவிலுக்கு எடுத்து வந்தனர். அதைத் தொடர்ந்து மாலையில் முதற்கால வேள்வி பூஜை துவங்கியது. பின்பு கோபுரத்தில் விமான கலசம் அமைத்து, மூலவர் மற்றும் பிற சுவாமிகளை அந்தந்த சன்னதியில் பதித்து, எண் வகை மருந்து சாற்றும் திருப்பணிகள் நடைபெற்றன. இன்று காலை,4:15 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், இரண்டாம் கால வேள்வி பூஜையும் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து காலை, 6:00 லிருந்து,7:00 மணிக்குள் விமான கலசத்திற்கும், சக்தி செல்வ விநாயகர் மற்றும் பிற தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. இவ்விழாவில் சாந்தலிங்கர் அருள்நெறி மன்றத்தைச் சேர்ந்த குழந்தைவேல், சக்திவேல், சந்திரசேகரன் ஆகியோர் யாக வேள்வி பூஜைகள் செய்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.