காசி விஸ்வநாதர் கருவறையில் சூரிய பூஜை; ஆண்டிற்கு 3 முறை மட்டுமே நடக்கும் அதிசயம்.. பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஆக 2023 12:08
திருச்சி : சர்க்கார்பாளையம், கரிகாலச் சோழனால் கட்டப்பட்ட பழமையான காசி விஸ்வநாதர் கோயில் கருவறையில் சூரிய ஒளி விழுந்ததை கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர்.
திருச்சி கல்லணை சாலை, சர்க்கார்பாளையம் கிராமத்தில் கரிகாலச் சோழனால் கட்டப்பட்ட பழமையான காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டிற்கு 3 முறை மட்டுமே நடைபெறும் சூரிய பூஜை வழிபாட்டில் திரளானன பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். காசியிலிருந்து லிங்கம் கொண்டு வந்து கரிகாலச் சோழன் இக்கோவிலை கட்டினார். அதன்பின்பே கல்லணை கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. சிவலிங்கத்தின் மீது சூரிய கதிர்கள் படும் நேரத்தில், அந்த சிவலிங்கத்தை வழிபடுவது சிறந்த நற்பலன்களை கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி மாதம், 7, 8, 9 ஆகிய தேதிகளில் காலை, 6 மணி முதல், 6.30 மணி சூரிய உதயத்தில் துவங்கி, சூரிய ஒளி கோவிலில் முன் மண்டபம் வழியாக படிப்படியாக நகர்ந்து கருவறையில் உள்ள மூலவர் சிலையின் நெற்றிப்பொட்டில் திலகம் இட்டது போல் ஜொலிக்கும். இதை சூரியனே வந்து பூஜை செய்து வழிபடுவதாக ஐதீகம். இப்படி தொடர்ந்து நடக்கும் சூரிய வழிபாடு இன்று, 24ம் தேதி முதல், 26ம் தேதி வரை நடக்கிறது. இன்று (ஆவணி 7) நடைபெற்ற சூரிய பூஜையில் மூலவர் காசி விஸ்வநாதர் மீது சூரியக்கதிர்கள் பட்டு பிரதிபலித்தது. தொடர்ந்து விஸ்வநாதருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.