திருச்செந்துார் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித்திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஆக 2023 01:08
திருச்செந்துார்: திருச்செந்துார் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலுடன் இணைந்த உபகோயிலான வெயிலுகந்த அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு கோயில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கோயிலிலிருந்து புறப்பட்டு கொடிப்பட்டத்தை வீதிகள் சுற்றி கோயிலுக்கு கொண்டு வந்தனர். காலை 5.40 மணிக்கு அம்மன் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் ஆறுமுகசுரேஷ் வல்லவராயர் திருவிழாக் கொடியை ஏற்றினார். அதன்பின்னர் கொடிமரத்திற்கு 16 வகையான அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வண்ண மலர்கள் மற்றும் தர்ப்பை புல்களால் அலங்கரிக்கப்பட்டது. காலை 6.40 மணிக்கு கொடிமரத்திற்கு மகாதீபாராதனை நடந்தது. பின்னர் வேத பாராயணம் தேவாரம் திருப்புகழ் பாடப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் அம்மன் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர் கார்த்திக், விதாயகர்த்தா சிவசாமி தீட்ஷிதர், திருவிழா மேற்பார்வையாளர் கார்த்திகேயன், சிவன் கோயில் மணியம் நெல்லையப்பன், 7வது வார்டு நகராட்சி உறுப்பினர் கெளரி கார்த்திகேயன், அதிமுக., முன்னாள் ஒன்றிய பொருளாளர் பழக்கடை திருப்பதி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 10 நாட்கள் நடக்கும் திருவிழாவில் காலை மற்றும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் வலம் வந்து கோயிலை சேர்கிறார். 10ம் திருவிழாவான வரும் செப். 1ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் அறங்காவலர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.