பதிவு செய்த நாள்
25
ஆக
2023
05:08
திருக்கோவிலூர்; மணம்பூண்டியில் பல்லவர்கால விநாயகர் சிலை வழிபாட்டில் இருந்து விலக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மணம்பூண்டி விநாயகர் கோவிலுக்கு வலது புறத்தில், தென்பெண்ணை ஆற்றங்கரையின் இடது புறத்தில், சாலை ஓரமாக கல் பலகையில் புடைப்புச் சிற்பத்துடன் விநாயகர் அழகுற காட்சியளிக்கும் சிலை வழிபாடு நடத்தப்படாமல் மரத்தடியில் வைக்கப்பட்டு இருப்பதை திருக்கோவிலூர் கபிலர் தொன்மை ஆய்வு மையத்தினர் கண்டறிந்தனர். ஆய்வு மையத்தின் தலைவர் உதியன், கல்வெட்டு ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், வரலாற்று பேராசிரியர் ஸ்தனிஸ்லாஸ், நூலகர் அன்பழகன் ஆகியோர் இதனை ஆய்வு செய்தனர். நான்கு அடிக்கு, மூனறு அடி அளவுள்ள கல்பலகையில் தலையில் கரண்டு முகடிலான கிரீடம், வலது பக்க தும்பிக்கையுடன், நான்கு கரங்களைக் கொண்ட இச் சிற்பத்தில் வலது மேற்கரத்தில் பாசாங்கயிறு, புஜத்தில் வாகுவளையமும், இடது மேற்கரத்தில் வளரி அல்லது சிறு தடி போன்ற ஒரு பொருளும், மணிக்கட்டில் காப்பும், கழுத்தில் சவடி அணிகலனும், மார்பில் முப்பிடி நூலும், வயிற்றுப் பகுதியில் உதரமங்குணமும் இருந்தது. உட்குழ ஆசன நிலையில், கால்கள் மடங்கியபடி, இடையில் சிற்றாடையுடன் அமர்ந்த நிலையில் உள்ளது. இது கி.பி., 9ம் நூற்றாண்டின் பிற்கால பல்லவர் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என ஆய்வில் தெரியவந்தது. அரசு கலைக்கல்லூரியில் பயிலும் வரலாற்றுத் துறை மாணவ, மாணவிகளும் ஆய்வில் பங்கேற்றனர்.