பதிவு செய்த நாள்
28
ஆக
2023
12:08
காட்டுமன்னார்கோவில்,- காட்டுமன்னார்கோவில் அருகே, வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது, பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே திருநாரையூர் கிராமத்தில், உத்திராபதி என்பவர் வீடு கட்டுவதற்கு, அஸ்திவாரம் அமைக்க பள்ளம் தோண்டினார். அப்போது, கடப்பாரை உலோகத்தில் மோதும் சத்தம் கேட்டுள்ளது. இதனால், கவனத்துடன் அந்த இடத்தை தோண்டிய போது, 10 அடி ஆழத்தில் 6 ஐம்பொன் சிலைகள் இருந்துள்ளது. அவற்றை உத்திராபதி வீட்டில் பத்திரமாக வைத்துக் கொண்டார். இது குறித்த தகவல் அறிந்த கடலுார் எஸ்.பி., ராஜாராம், ஏ.எஸ்.பி. ரகுபதி, சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி., ரூபன்குமார் மற்றும் காட்டுமன்னார்கோவில் தாசில்தார் தமிழ்ச்செல்வன் தலைமையில் வருவாய் துறையினர் திருநாரையூர் கிராமத்திற்கு வந்து விசாரித்தனர். அப்போது, உத்திராபதி வீட்டில் வைக்கப்பட்டிருந்த சிவன், பார்வதி, ஆடிப்பூர அம்மன், போக சக்தி அம்மன், பஞ்சமூர்த்தி அம்பாள், இடம்புரி விநாயகர் ஆகிய 6 சிலைகள் மீட்டனர். மேலும் சிலைகள் இருக்கலாம் என்பதால், அந்த இடம், ஜே.சி.பி., உதவியுடன் மீண்டும் தோண்டப்பட்டது. அப்போது, திருவாட்சியுடன் கூடிய நடராஜர், அம்பாள் உள்ளிட்ட 3 சிலைகள் கிடைத்தது. இவை அனைத்தும் பீடத்துடன் உள்ளன. கண்டெடுக்கப்பட்ட சிலைகளில் நடராஜர், அம்பாள், சிவன் பார்வதி ஆகிய சிலைகள் ஒவ்வொன்றும் சுமார் மூன்றடி உயரமும் மற்ற சிலைகள் 1 அடி முதல் 2 அடி உயரம் வரை உள்ளது.
ஐம்பொன்னால் செய்யப்பட்ட இந்த சிலைகள், 12ம் நுாற்றாண்டு காலத்து சிலைகளாக இருக்கலாம் என, தெரிகிறது. இதன் மதிப்பும் பல கோடி இருக்கும் என, வருவாய்த் துறையினர் தெரிவித்தனர். சிலைகள், போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டு, வருவாய் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.