பதிவு செய்த நாள்
01
செப்
2023
02:09
மதுரை: சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத களிமண்ணில் தயாரிக்கப்பட்ட சிலைகள் மட்டுமே விநாயகர் சதுர்த்தியின் போது அனுமதிக்கப்படும்.
ரசாயனங்களால் செய்த சிலைகளுக்கு அனுமதி கிடையாது என தமிழக அரசு தரப்பு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்தது. ஹிந்து முன்னணி மதுரை மாவட்ட கோட்ட செயலாளர் அரசுபாண்டி தாக்கல் செய்த பொதுநல மனு: ஹிந்துக்கள் ஆண்டு தோறும் ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுகின்றனர். இயற்கையான களிமண்ணில் சிலைகளை வடிவமைத்து வண்ணம் தீட்டுவர். பூஜைக்கு பின் ஊர்வலமாக கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைப்பர். தற்போது ’பிளாஸ்டர் ஆப் பாரிஸ்’ (பி.ஓ.பி.,) மூலம் சிலைகளை வடிவமைக்கின்றனர். இதில் ஜிப்சம், சல்பர், பாஸ்பரஸ், மெக்னீசியம் உட்பட பல ரசாயனங்கள் உள்ளன. அலங்கரிக்க பிளாஸ்டிக், தெர்மாகோல் பயன்படுத்தப்படுகிது. இவை மட்கும் தன்மை கொண்டவை அல்ல. நீர்நிலைகளில் கரைப்பதால் மாசு ஏற்படுகிறது. ரசாயனங்கள் மூலம் மதுரை மற்றும் இதர கிராமங்களில் விநாயகர், பிற கடவுள் சிலைகள் தயாரித்து விற்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் திருவிழாக்களின் போது பி.ஓ.பி.,யை பயன்படுத்தி சிலை தயாரிக்க மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ளது. சிலைகள் தயாரிப்பதில் சுற்றுச்சூழலுக்கு உகந்த, மாசு ஏற்படுத்தாத இயற்கை களிமண்ணை பயன்படுத்தும் தயாரிப்பாளர்கள், கைவினைஞர்களுக்கு மட்டுமே உரிமம் வழங்க வேண்டுமென தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் பி.ஓ.பி.,யை பயன்படுத்தி சிலைகள் தயாரிப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. ரசாயனங்களால் செய்யப்பட்ட பெரிய அளவிலான விநாயகர் மற்றும் பிற சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று மதுரையில் நீர்நிலைகளில் கரைக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அரசுபாண்டி குறிப்பிட்டார். தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா பூர்வாலா, நீதிபதி சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது.
தமிழக அரசு தரப்பு: மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உத்தரவின்படி சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத இயற்கை களிமண்ணில் தயாரிக்கப்படும் சிலைகளை மட்டுமே விநாயகர் சதுர்த்தியின்போது பிரதிஷ்டை செய்ய மற்றும் ஊர்வலத்தில் கொண்டு செல்ல அனுமதிக்கப்படும். பி.ஓ.பி.,மற்றும் ரசாயனங்களால் செய்த சிலைகளுக்கு அனுமதி கிடையாது என தெரிவித்தது. இதை பதிவு செய்த நீதிபதிகள், ’மாசுக்கட்டுப்பாடு வாரிய உத்தரவை பின்பற்ற வேண்டும். யாருக்கும் ஆட்சேபனை இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி நிவாரணம் தேடலாம். வழக்கு பைசல் செய்யப்படுகிறது’ என உத்தரவிட்டனர்.