பதிவு செய்த நாள்
02
செப்
2023
10:09
கெங்கவல்லி: தர்மராஜர் கோவிலில், 65 ஆண்டுகளாக தேர் திருவிழா நடத்தப்படவில்லை என, பக்தர்கள் கவலையில் உள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி சுவேத நதி தென்பகுதியில் உள்ள தர்மராஜர் கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு, 1873ல் புதிதாக கட்டப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. 1942ல் முதன் முதலாக தேர் திருவிழா நடந்தது. தொடர்ந்து, 1958ல் தேர் திருவிழா நடந்தது. இதையடுத்து, 2001ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, தினமும் வழிபாடு நடந்து வருகிறது. 20 ஆண்டுகளுக்கு முன் மரத்தாலான சக்கரத்தில், 15 அடி உயரத்தில் தேர் வடிவமைக்கப்பட்டு வெள்ளோட்டம் நடந்தது. ஆனால், கோவில் விழா குழுவினர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தேர் திருவிழாவை நடத்தவில்லை. தற்போது தேர் சேதம் அடைந்து, அதன் சக்கரம் மண்ணில் புதைந்து வருகிறது. 22 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் மட்டுமின்றி, 65 ஆண்டுகளாக தேர் திருவிழா நடக்கவில்லை என, பக்தர்கள் புலம்பி வருகின்றனர். இதுகுறித்து கெங்கவல்லி மக்கள் கூறுகையில், ‘வெள்ளோட்டம் விடப்பட்டு நிறுத்திய தேர், 20 ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருந்ததால் சேதம் அடைந்துள்ளது. இதனால் இரும்பு சக்கரம் பொருத்தி புதிதாக தேர் செய்யவேண்டும். தேர் திருவிழா, கும்பாபிஷேகம் நடத்த, தமிழக அரசு நிதி ஒதுக்க வேண்டும்’ என்றனர்.