மகாவிஷ்ணு சூரிய வம்சத்தில் ராமனாக அவதாரம் செய்ததால் ‘ரவிகுல திலகன்’ என்று அழைக்கப்பட்டார். சூரியனைப் போல தானும் பெருமை பெற வேண்டும் என சந்திரன் வேண்டினார். மனமிரங்கிய மகாவிஷ்ணு ‘‘உன் பெயரை என்னோடு சேர்த்துக் கொள்கிறேன்’’ என்று சொல்லி ‘ராமச்சந்திர மூர்த்தி’ என மாற்றிக் கொண்டார். அத்துடன் அடுத்த அவதாரத்தில் சந்திர வம்சத்தில் அவதரிப்பதாகவும் வாக்கு கொடுத்தார். இதனால் கிருஷ்ணஜெயந்தியன்று பூஜை முடித்து நிலாவை பார்த்தால் இருமடங்கு நன்மை உண்டாகும்.