பதிவு செய்த நாள்
06
செப்
2023
01:09
திருச்சுழி : திருச்சுழி அருகே பழமையான விநாயகர் சிற்பத்தை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.
திருச்சுழி அருகே எழுவணி கிராமத்தில் பழமையான விநாயகர் சிற்பம் இருப்பதை, பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் ஆய்வாளர்கள் செல்லபாண்டியன், தாமரைக்கண்ணன், ஸ்ரீதர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அவர்கள் கூறியதாவது: முற்கால பாண்டிய மன்னர்கள் வீரத்திலும், பக்தியிலும் கலைகளிலும் சிறந்து விளங்கினர். இதற்கு உதாரணமாக தற்போது அதிக அளவில் கிடைத்துக் கொண்டிருக்கும் முற்கால பாண்டியரின் சிற்பங்களும் கல்வெட்டுகளுமே சாட்சி. ஒவ்வொரு ஊரிலும் முற்கால பாண்டியர்கள் சிவனுக்கும், பெருமாளுக்கும் தனித்தனியே கோயில் அமைத்து சைவத்தையும், வைணவத்தையும் இரு கண்களாக பாவித்து அந்த கோவில்களுக்கும் அதிக அளவில் பொருளுதவி கொடுத்தும், இறையிலி நிலங்கள் கொடுத்தும் பக்தியை வளர்த்தனர். மக்களும் அதே வழியை பின்பற்றி கோவில்களை பாதுகாத்து வந்தனர். கால ஓட்டத்தில் அதிகமான கோவில்கள் சிதைந்து காணாமல் போய்விட்டன. கோவில்கள் அழிந்தாலும் அவற்றில் உள்ள சிற்பங்கள் இப்பொழுது அதிக அளவில் வெளிப்பட்டு வருகின்றன. இதன் மூலமாக முற்கால பாண்டியர்களின் கலை பாணியை அறிய முடிகிறது. இங்குள்ள விநாயகர் சிற்பம் மூன்றரை அடி உயரத்திலும், இரண்டடி அகலத்திலும் உள்ளது. துதிக்கை இடது புறமாக வளைந்த நிலையில் மோதகத்தை பற்றியவாறு உள்ளது. மொத்தம் நான்கு கரங்கள் உள்ளன. வலது மேல் கரத்தில் மழுவும், இடது மேல் கரத்தில் பாசமும் உள்ளது. வலது கீழ்கரத்தில் உடைந்த தந்தம் உள்ளது. இவர் ராஜ நீலாசனத்தில் அமர்ந்து கம்பீரமாக காட்சி தருகிறார். இன்றைய காலகட்டத்தில் முற்கால பாண்டியர்களின் கோயில்கள் கிடைக்காவிட்டாலும் அவர்கள் காலத்தைச் சேர்ந்த சிற்பங்களும், கல்வெட்டுகளும் அதிகம் கிடைத்து வருகின்றன, என்று கூறினர்.