நெல்லையில் 10ம் நுாற்றாண்டு அய்யனார் சிற்பம் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09செப் 2023 11:09
விளாத்திகுளம்: நெல்லை அபிஷேகப்பட்டியில் 10ம் நுாற்றாண்டைச் சேர்ந்த அய்யனார் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த சிலை தொடர்பாக திருநெல்வேலி மாவட்டம், அபிஷேகப்பட்டியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர்களான நடராஜன், செல்வராசு, ராமசுப்பிரமணியன் மற்றும் பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல்கள ஆய்வாளர்களான தாமரைக்கண்ணன், ஸ்ரீதர் ஆகியோர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது, அந்த சிற்பம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட அய்யனார் சிற்பம் என்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, நெல்லை பல்கலைக்கழக வளாகத்தின் ஒரு பகுதியில் நாங்கள் கண்டறிந்த அய்யனார் சிற்பமானது ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பாண்டியர் காலசிற்பமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இச்சிற்பம் 3 அடி உயர பலகைக்கல்லில் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. தலைப்பகுதி கிரீடத்துடன் அகன்ற ஜடாபாரமும், வட்டமான முகத்துடன் காதுகளில் பத்ரகுண்டலங்களும் அணிகலன்களாக இடம் பெற்றுள்ளது. அய்யனாரின் இடதுபுறம் பூர்ணகலை அல்லது புஷ்கலை சிற்பம் சுகாசன கோலத்தில் அமர்ந்த நிலையில் செதுக்கப்பட்ட பெண்சிலையும் இடம் பெற்றுள்ளது. மேலும் இங்கு ஒரு கருப்பணசாமி சிலையும் கையில் அரிவாளுடன் நின்ற கோலத்தில் இடம் பெற்றுள்ளது. இங்கு காணப்படும் சிற்பங்களை பார்க்கும் போது இப்பகுதியில் ஒரு பெரிய கோவில் இருந்து அழிந்திருக்கலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.