பதிவு செய்த நாள்
09
செப்
2023
11:09
சென்னை: தி.மு.க., என்றால், ஆன்மிக நாட்டம் இருக்காது என்ற பிரசாரத்தை தவிடு பொடியாக்கி, அறநிலையத் துறையில் இதுவரை இல்லாத புதுப்புது திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம், என, ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட கோவில் சொத்துக்களின் விபரங்கள் அடங்கிய இரண்டாவது புத்தகத்தை, சென்னையில் நேற்று, அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார்.
பின், அவர் அளித்த பேட்டி: ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட, 167 கோவில்களின், 2,567 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து விபரங்கள் அடங்கிய முதல் புத்தகம், கடந்த ஆண்டு மே 17ல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, இரண்டாவது புத்தகம் வெளியிடப்பட்டது. அதில், 330 கோவில்களுக்கு சொந்தமான, 1,692 கோடி ரூபாய் மதிப்பிலான, 3,386 ஏக்கர் நிலம், மனை, கட்டடம், குளங்களின் விபரங்கள் இடம் பெற்றுள்ளன. இதுவரை, 5,171 கோடி ரூபாய் மதிப்பிலான, 5,721 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டு உள்ளதோடு, 1.49 லட்சம் ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்து பாதுகாக்கப்பட்டுள்ளன. பயன்பாட்டில் இல்லாத நகைகளை உருக்கி, முதலீடு செய்ததன் வாயிலாக, ஐந்து கோவில்களுக்கு, 4 கோடி ரூபாய் ஆண்டு வருமானம் கிடைக்கிறது. தி.மு.க., என்றால், ஆன்மிக நாட்டம் இருக்காது என்ற பிரசாரத்தை தவிடு பொடியாக்கி, அறநிலையத் துறையில் இதுவரை இல்லாத புதுப்புது திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். முதல்வரும், அமைச்சர் உதயநிதியும், சனாதன பிரச்னைக்கு தெளிவான அறிக்கை வெளியிட்டுள்ளனர்; இனியும் அது குறித்து கருத்து கூற தேவையில்லை. சனாதனம் என்பது வேறு; ஹிந்து மதம் என்பது வேறு. நாங்கள் எதிர்ப்பது சனாதனத்தில் இருக்கிற பெண் கல்வி மறுப்பு, உடன்கட்டை ஏற்றுதல் போன்ற கோட்பாடுகளை தான். அதனால், சனாதனத்தை ஏற்றுக் கொண்டவர்களை எல்லாம், நாங்கள் எதிர்ப்பதாக அர்த்தமாகாது. இவ்வாறு அவர் கூறினார். அறநிலையத் துறை செயலர் மணிவாசன், சிறப்பு பணி அதிகாரி குமரகுருபரன், கமிஷனர் முரளீதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.