நாகப்பட்டினம்: நாகை அடுத்த வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா தேவாலய ஆண்டுத் திருவிழா நேற்று கொடியிறக்கத்துடன் நிறைவடைந்தது.
நாகை அடுத்த வேளாங்கண்ணியில் பிரசித்திப் பெற்ற ஆரோக்கியமாதா தேவாலய ஆண்டுத் திருவிழா, ஆக.,29 ம் தேதி கொடியேறறத்துடன் துவங்கி, செப்.,8 ம் தேதி வரை வெகு விமரிசையாக கொண்டாடப்படும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு பெரிய சப்பர பவனி நடைபெற்றது. இதில் நாகூர் தர்கா பரம்பரை கலிபா மஸ்தான் சாஹிப், தர்கா அறங்காவலர் குழு தலைவர் முகமது ஹாஜி உசேன் சாஹிப்,வேளாங்கண்ணி ரஜதகிரீஸ்வரர் கோவில் தலைமை குருக்கள் நீலகண்ட சாஸ்திரிகள் மற்றும் மும்மதத்தின் முக்கிய பிரமுகர்கள் கலந்துக் கொண்டு பிரார்த்தனை செய்தனர். நேற்று மாதாவின் பிறந்த நாளை முன்னிட்டு காலை 6 மணிக்கு விண்மின் தேவாலயத்தில் தஞ்சை மறைமாவட்ட பரிபாலகர் சகாயராஜ் தலைமையில் கூட்டுப்பாடல் திருப்பலி நடந்தது. தொடர்ந்து மாலை தேவாலய முகப்பில் ஏற்றப்பட்டிருந்த மாதாவின் உருவம் பொறித்த கொடி இறக்கப்பட்டு விழா நிறைவடைந்தது. பின் தேவாலய கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசிர் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற நிகழ்வுகளில் நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டனர்.