பதிவு செய்த நாள்
12
அக்
2012
01:10
அசையாப் பொருள் பரம்பொருள் என்றும், அசைவுடைய செயல் சக்தி என்றும் கூறப்படுகிறது. பொதுவாக சிவராத்திரி, கிருஷ்ண ஜெயந்தி, ராமநவமி போன்ற விழாக்கள் ஒருநாள் விசேஷமாகக் கொண்டாடப்படும். ஆனால் சக்தி வழிபாடு மட்டும் நவராத்திரி என்ற பெயரில் ஒன்பது நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது. வருடத்தில் நான்கு நவராத்திரிகள் வருவதுண்டு. ஆனி மாத அமாவாசைக்குப் பின்னர் வருவது ஆஷாட நவராத்திரி. புரட்டாசி மாத அமாவாசைக்குப் பின்னர் வருவது மகா நவராத்திரி. தைமாத அமாவாசைக்குப் பின்னர் வருவது மாக நவராத்திரி. பங்குனி மாத அமாவாசைக்குப் பின் வருவது வசந்த நவராத்திரி. புரட்டாசி மாதமும் பங்குனி மாதமும் காலதேவனுடைய கோரைப் பற்கள் என்று புராணங்கள் கூறும். ஜீவராசிகள் யாவும் துன்பமின்றி நலமோடு வாழ இவ்விரு மாதங்களில் வருகின்ற நவராத்திரி காலத்தில் விரதம் மேற்கொள்வார்கள். நவம் என்றால் புதியது என்றும், ஒன்பது என்றும் இரு பொருள் தரக்கூடிய சொல்லாகும். பழமையோடும் புதுமை கலந்தும் பரிணமிக்க வழிகாட்டும் விழா என்றும் கொள்ளலாம். புரட்டாசி அமாவாசை நாளுக்குப்பின் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது நவராத்திரி. நவராத்திரியின்போது ஒன்பது நாளும் ஒன்பது வகையில் மலர் வழிபாடு செய்வார்கள். கொலுவிருக்கும் தேவியரை ஒன்பது ராகங்களில் துதித்து, ஒன்பது வகைப் பழங்கள், பிரசாதங்கள் படைத்து அன்னையின் மனம் மகிழ்வுறச் செய்வார்கள். படைத்தல், காத்தல், அழித்தல் எனும் மூன்று சக்திகளைக் கொண்ட அன்னையின் அருள் வேண்டி பூஜை செய்தலே நவராத்திரி வழிபாடாகும்.
துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என மூவகையாக மும்மூன்று நாட்கள் விழாக் கொண்டாடுவதும், இறுதியில் பத்தாம் நாள் அம்மனை சிம்ம வாகனத்தில் ஊர்வலமாகக் கொண்டு சென்று சூரனை வதம் செய்த நிகழ்ச்சியாக பாரிவேட்டையும் நடைபெறும். புரட்டாசி மாதத்தில் நவராத்திரி விழாவில் கொலு வைத்தல் பரம்பரையாகச் செயல்பட்டுவரும் பக்தி நிகழ்ச்சியாகும். நல்லோரின் நட்பை ஏற்றுப் போற்றுதலும் பக்தியைப் பெருகச் செய்வதும் கொலுவின் முக்கிய நோக்கமாக அமைகிறது. பிரதமை முதல் திரிதியை வரையில் கிரியா சக்தியாகிய துர்க்கா தேவியையும்; சதுர்த்தி முதல் சஷ்டி வரையில் இச்சா சக்தியாகிய மகாலட்சுமியையும்; சப்தமி முதல் நவமி வரையில் ஞான சக்தியாகிய சரஸ்வதியையும் வழிபாடு செய்து தசமியில் நவராத்திரியை நிறைவு செய்வது வழக்கம். மகேஸ்வரி, கவுமாரி, வராஹி, மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்மி, சாமுண்டீஸ்வரி போன்ற தேவியரின் மந்திரங்களை ஒன்பது நாளும் சொல்லி, பூஜை செய்வது நலமாகும். ஒன்பது நாளும் விரதமிருந்து அன்னையை வழிபடும் கன்னிப் பெண்களுக்கு திருமணம் கைகூடும். குடும்பத்தில் அன்பும் ஒற்றுமையும் ஓங்கும். இளம் பெண்கள் கல்வி, இசை போன்றவற்றில் சிறப்படைவார்கள். இல்லத்தில் செல்வம் சேரும்.
காசியின் கருணைத்தாய்: சக்திபீடங்களில் மணிகர்ணிகா பீடமாகத் திகழ்வது காசி. தட்ச யாகத்தின் போது, கோபமடைந்த சிவன் அம்பாளின் உடலைத் தூக்கி ஆடும் போது, மணிகர்ணிகை என்னும் அம்பிகையின் குண்டலம் விழுந்த தலம் இது. கங்கைக்கு நிகரான நதியும் இல்லை. காசிக்கு நிகரான பதியும்(ஊர்) இல்லை என்பது சொல்வழக்கு. வாழ்வில் ஒருமுறையாவது காசிக்குச் சென்று கங்கையில் நீராடவேண்டும் என்பது லட்சியமாக இருக்கிறது. மோட்சத் தலங்கள் ஏழில் காசியே முதன்மையானது. உயிர்களின் பாவத்தைப் போக்கி பிறவி என்னும் பெருங்கடலைக் கடக்கும் தோணியாக விஸ்வநாதரும், விசாலாட்சியும் இங்கு வீற்றிருக்கின்றனர். காசியில் மரணம் அடையும் உயிர்களை விசாலாட்சியே தன் மடியில் கிடத்தி முந்தானையால் வீசி விடுவதாகவும், விஸ்வநாதர் அவர்களின் காதில் ராமநாமத்தை ஓதி முக்தி அளிப்பதாகவும் ஐதீகம். விசாலாட்சி என்பதற்கு விசாலமான கண்களைக் கொண்டவள் என்பது பொருள். தன் அகன்ற கண்களால் பக்தர்களின் மீது அருள்மழையை விசாலாட்சி பொழிகிறாள். பாசபந்தங்களைப் போக்கி முக்திவாசலைத் திறந்து விடுகிறாள். காசியில் வாரணம், அசி என்னும் ஆறுகள் வடக்கிலும் தெற்கிலுமாக ஓடுவதால் வாரணாசி என்ற பெயரும் உண்டு. கிரகங்களில் ஒருவரான புதன், காசி விஸ்வநாதரையும், விசாலாட்சியையும் வழிபட்டு கிரகபதவி அடைந்தார். இதனால் இங்கு வழிபட்டவர்களுக்கு கல்வி வளர்ச்சி, ஞானம் கிடைக்கும். இங்கு விமரிசையாக நடக்கும் விழாக்களில் நவராத்திரி முக்கியமானது.
மங்கல தீபம் ஏற்றுவோம்: நவராத்திரி காலத்தில் விடிய விடிய விளக்கு எரிவது வீட்டிற்கு செல்வ வளத்தை தரும். தீபத்தை குறித்த அரிய தகவல்களை இதோ! படியுங்க!
*விளக்கில் இருக்கும் ஐந்து முகங்கள் அன்பு, மனஉறுதி, நிதானம், சமயோசிதம், சகிப்புத்தன்மை ஆகிய நற்பண்புகளும் பெண்களுக்கு அவசியம் என்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளன.
*தரையில் விளக்கேற்றி வைக்கக்கூடாது. மரப்பலகையில் கோலமிட்டு, அதன் மேல் விளக்கு இருக்க வேண்டும். விளக்கிற்கு மலர் சூடுவது மிகநல்லது.
*தீபலட்சுமியாகப் போற்றப்படும் திருவிளக்கிற்கு சந்தனம், குங்குமம் இடுவது அவசியம். தீபலட்சுமியே! எங்கள் வீட்டில் எப்போதும் நிலைத்திருப்பாயாக! என்று சொல்லிக்கொண்டே விளக்கேற்ற வேண்டும்.
*அம்மன் கோயில்களில் மாவிளக்கு வழிபாடு செய்வது சிறப்பானது. உடல் ஆரோக்கியம் பெற செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நேர்த்திக்கடனாக மாவிளக்கேற்றி வழிபடுவது வழக்கம்.
*நாயன்மார்களில் நமிநந்தியடிகள், கணம்புல்லர், கலியநாயனார் ஆகியோர் விளக்கு வழிபாட்டினால் சிவன் அருளைப் பெற்றவர்கள். வேதாரண்யம் வேதபுரீஸ்வரர் கோயிலில் அணைய இருந்த விளக்கைத் தூண்டிய எலி மறுபிறவியில் மகாபலிச்சக்கரவர்த்தியாகப் பிறந்தது.
*விளக்கேற்ற எக்காலமும் உகந்தது பஞ்சுத்திரி. விழா நாட்களில் தாமரைத்தண்டுத்திரியால் விளக்கேற்ற முன்வினைப்பாவம் தீரும். எருக்கம்
பட்டைத்திரியால் விளக்கேற்ற செல்வம் சேரும்.
*விளக்கை ஒருமுகம் ஏற்ற ஓரளவு பலனும், இரண்டுமுகம் ஏற்ற குடும்ப ஒற்றுமையும், மூன்றுமுகம் ஏற்ற புத்திரபாக்கியமும், நான்குமுகம் ஏற்ற செல்வவளமும், ஐந்து முகம் ஏற்ற சகலசவு பாக்கியமும் உண்டாகும்.
*கிழமைகளில் செவ்வாய், வெள்ளியும், திதிகளில் அமாவாசை, பவுர்ணமியும், நட்சத்திரத்தில் கார்த்திகையும், பிரதோஷமும், தமிழ் மாதப்பிறப்பு நாளும் கோயில்களில் திருவிளக்கு பூஜை நடத்த உகந்தவை.
*கிழக்குநோக்கி விளக்கேற்ற துன்பம் நீங்கும். மேற்கு நோக்கி ஏற்றுவதால் கடன்தொல்லை
அகலும். வடக்குநோக்கி ஏற்ற செல்வவளம் பெருகும். தெற்கு நோக்கி ஏற்றுவது கூடாது.
*நதிகளில் ஏற்றி வைக்கும் தீபத்தை ஜலதீபம் என்பர். காசியில் தினமும் மாலையில் ஜலதீபங்களை ஏற்றி கங்கைநதியை வழிபடுவது காண்போரை பரவசத்தில் ஆழ்த்தும்.
*திருவிளக்குபூஜை நடத்துவது புண்ணியம் மிக்கதாகும். பலர் கூடி ஒரே மனதுடன் பூஜையில் கலந்து கொள்ளும்போது, யாகம் செய்வதற்கு ஈடானதாக ஆகிறது. கூட்டுப் பிரார்த்தனையானயால் இறையருளை எளிதாகப் பெற முடியும்.
நவராத்திரியில் காளி வேடம் போடும் ஆண்கள்: திருமீயச்சூர் லலிதாம்பிகையின் நெய்க்குள தரிசனம் மிகப் பிரபலமானது. விஜயதசமி அன்று அம்பாள் கருவறை முன் 15 அடி நீளத்திற்கு வாழை இலை போட்டு, அதில் 4 அடி அகலம், 1 1/2 அடி உயரத்திற்கு சர்க்கரைப் பொங்கலைப் பரப்புவர். அதன் நடுவே குளம்போல் அமைத்து அதனை நெய்யினால் நிரப்புவர். அதன் பின்னரே கருவறையின் திரையை விலக்குவர். அலங்கரிக்கப்பட்ட அன்னையின் திருவுருவம் நெய்க்குளத்தில் அதிஅற்புதமாகப் பிரதிபலிக்கும். இந்த நெய்க்குள தரிசனத்தினைக் காண்போருக்கு மறுபிறவியே இல்லை என்பது நம்பிக்கை. முத்தாரம்மன் சமேத ஞான மூர்த்தீஸ்வரர் ஆலய தசரா, கிராமியக் கலை விழாவாகப் புகழ்பெற்றது. குலசையில் தசரா விழா பன்னிரண்டு நாட்கள் கோலாகலமாக நடக்கும். பக்தர்கள் சுமார் ஒருமண்டலம் விரதமிருந்து ஏதேனும் ஒரு தெய்வம்போல் வேடம் அணிந்து சுவாமி ஊர்வலம் வரும்போது கூடவே வருவார்கள். காளி வேடத்தை ஆண்கள் மட்டுமே புனைவார்கள். ஊர்வலத்தில் கரகாட்டம், மயிலாட்டம், மேளம், தாளம், தாரை, தப்பட்டை, ஒயிலாட்டம் என கிராமியக் கலைகளும் இடம்பெறும். ஒவ்வொரு வருடமும் இவ்விழா கலை நயத்தோடும் மிகுந்த பக்தியுடனும் சிறப்பாக நடைபெறும்.
இமயமலையில் அமைந்துள்ள குலுமணாலியில் இவ்விழா 10 நாட்கள் நடக்கும். இத்தலத்தில் அருள்புரியும் ரகுநாத் ஜீ தெய்வத்தை ஸ்ரீராமனே தன் கட்டை விரல் அளவில் செய்து கொடுத்திருப்பதாக தல வரலாறு சொல்கிறது. நவராத்திரி சமயத்தில், குலு பள்ளத்தாக்கிலுள்ள முந்நூறுக்கும் மேற்பட்ட மலை தெய்வங்கள் பக்தர்கள் புடைசூழ ஊர்வலமாக வந்து ரகுநாத் ஜீக்கு மரியாதை செய்வார்கள். விதவிதமான கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். பதினோராம் நாள் அனைவரும் வீடு திரும்புவார்கள். சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ளது ஜகதல்பூர். இத்தல நாயகி தண்டேஸ்வரி. இங்கே ஒரு நாள் அல்ல இருநாள் அல்ல எழுபத்தைந்து நாட்கள் தசரா விழாவைக் கொண்டாடுவார்கள். இப்பகுதி பழங்குடியினர் அவரவர் பிரிவுக்கு உட்பட்ட ஆலய தெய்வச் சிலைகளை அலங்கரித்து தண்டேஸ்வரி ஆலயத்திற்கு ஊர்வலமாக எடுத்து வருவார்கள். பின் தண்டேஸ்வரி முன் வைத்து பூஜித்து, மரியாதை செய்வர். அதன்பின் தினமும் கலை நிகழ்ச்சிகள் நடத்துவார்கள். இந்த எழுபத்தைந்து நாட்களும் யாரும் வீட்டில் இருக்க மாட்டார்கள். தண்டேஸ்வரி ஆலய சுற்றுப்புறத்திலேயே தங்கி சமைத்து சாப்பிட்டு கலைநிகழ்ச்சி நடத்தி தூங்கி வெட்ட வெளியிலேயே இருப்பர். எழுபத்தாறாம் நாள்தான் அவரவர் தெய்வங்களுடன் இல்லம் திரும்புவர்.
கோவை பொள்ளாச்சி சாலையில் உள்ள மகாலட்சுமி மந்திர் என்னும் அழகிய ஆலயத்தில் சரஸ்வதி, துர்கா, மகாலட்சுமி ஆகிய மூன்று தேவிகளும் கருவறையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இந்த ஆலயத்தில் நவராத்திரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கும். மிகப் பெரிய அளவில் இங்கு கொலு வைக்கப்படுவதுண்டு. தினசரி இந்த கொலுவைக் காண நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். விஜயதசமி அன்று புதிதாக பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் பெற்றோருடன் இங்கு கூடுகின்றனர். அன்று அவர்களுக்கு சரஸ்வதி தேவியின் முன்பாக எழுதத் தொடங்கி வைக்கின்றனர். அன்னையின் முன்புள்ள பளிங்கு மண்டபத்தில் நூற்றுக் கணக்கான குழந்தைகள் இப்படி அமர்ந்து எழுதத் தொடங்குவது நம்மை சிலிர்க்க வைக்கும் காட்சியாகும். பொதுவாக, விஜயதசமி பல நல்ல செயல்களைத் தொடங்கவும் வியாபாரங்களைத் தொடங்கவும் நல்ல நாள். எனவே அன்னையை இந்த நவராத்திரியின் போது பல உருவங்களில் நாம் வழிபடுவதுடன் விஜயதசமியன்றும் வழிபட்டு, பாவம் தொலைத்து நலனும் அருளும் பெறுவோமாக !
வைணவ திருத்தலங்களுள் முதன்மையானதாகப் போற்றப்படும் திருவரங்கத்தில் அரங்க நாயகியாக அருள்பாலிக்கும் தாயார், நவராத்திரி நாட்களில் தினமும் மாலையில் புறப்பாடு கண்டருள்வார். புறப்பாடு ஆகும் முன் சங்கநாதம் ஒலிக்கும். பிராகாரங்களை ஒருமுறை வலம் வந்தபின் கொலு மண்டபத்தில் வீற்றிருந்து பின்னர் இரவு 8.30 மணிவாக்கில் மூலஸ்தானம் எழுந்தருள்வார். அதுவரை நாதஸ்வரக் கச்சேரிகள் நடக்கும். மூலஸ்தானத்துக்கு முன்மண்டபத்தில் அன்னை எழுந்தருளும்போது கோயில் யானை துதிக்கையை உயர்த்தி நமஸ்கரிக்கும். மௌத்ஆர்கனை வாயில் வைத்து ஒலி எழுப்பும். பின்னர் பேஷ்கார் எனப்படும் கோயில் அதிகாரிக்கு தாம்பூலம் கொடுக்கும். இதை வேடிக்கை பார்ப்பதற்காகவே குழந்தைகள், பெரியவர்கள் என்று கூட்டம் வரும். நவராத்திரி ஏழாம் நாள் தாயாரின் திருவடிகள் வெளியில் தெரியும்படி அலங்காரம் செய்யப்பட்டு புறப்பாடு ஆகும். இந்தத் திருவடி சேவையைக் காண பக்தர்கள் ஆலயத்தில் குவிந்துவிடுவார்கள். அந்த ஒரு நாள்தான் தாயாரின் திருவடிகள் தரிசனம் கிடைக்கும்.
ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள திருக்கூடலையாற்றூரில் நர்தன வல்லபேஸ்வரர் கோயிலில் இரண்டு அம்மன் சன்னதிகள் உள்ளன. இவற்றுள் ஞானசக்தி அம்மன் சன்னதியில் குங்குமமும்; பராசக்தி அம்மன் சன்னதியில் விபூதியும் பிரசாதமாகத் தரப்படுவது வித்தியாசமானது.
இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி, ஆதி சக்தி, பராசக்தி, குடிலா சக்தி என ஆறு அம்சங்களையும் ஒருங்கே கொண்டு தேவி அருள்பாலிக்கும் தலங்கள் ஒன்பது. அவை காஞ்சி காமாட்சி, ஸ்ரீசைலம் பிரமராம்பாள் தேவி, கோல்ஹாப்பூர் மகாலக்ஷ்மி, உஜ்ஜயினி காளிகாதேவி, கயா மங்களாதேவி, அலகாபாத் அலோபிதேவி, உத்தரப்பிரதேசம் விந்தியவாசினி, நேபாளம் குஹ்யகேஸ்வரி, வாரணாசி விசாலாட்சி.
சக்கரப்பள்ளி, அரிமங்கை, சூலமங்கலம், நந்தி மங்கலம், பசுபதிமங்கலம், தாழை மங்கலம், புள்ளமங்கலம் ஆகிய ஏழு ஊர்களையும் சப்தமங்கலத் தலங்கள் என்று கூறுவர். இத்தலங்களில் முறையே பிராமி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டியாக அம்பிகை பூஜை செய்ததாகக் கூறுகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் இருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் சாலையில் சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது காட்டுச் செல்லூர் என்னும் கிராமம். இங்கே உள்ள வேம்பி அம்மன் கோயிலில் சுமார் 1200 ஆண்டுகள் பழைமைவாய்ந்த துர்க்கை அம்மனின் திருமேனி உள்ளது. நின்ற கோலத்தில் காட்சி அளிக்கும் இந்த துர்க்கை அம்மன் சிற்பம் நான்கு திருக்கரங்களுடன் காணப்படுகிறது. மேல் இருகரங்களில் பிரயோகச் சக்கரமும், சங்கும், கீழ் வலக்கரத்தில் ஞான முத்திரையும் திகழ, கீழ் இடக்கரத்தை இடுப்பில் வைத்து அற்புத தரிசனம் தருகிறாள். இக்கரத்தில் கிளி ஒன்று ஏறிச் செல்வது போல் அமைந்திருப்பது சிறப்பாகும். விஜயதசமி அன்று அம்பு போடும் திருவிழா இங்கு மிக விசேஷம்.
ஒரு வருடம் கெடாத தேங்காய்: நவராத்திரி சமயத்தில் நெமிலி திரிபுரசுந்தரி கோயிலில் கலசத்தில் வைக்கப்படும் தேங்காய் அடுத்த வருடம் வரை கெடாமலிருக்கும். அந்தத் தேங்காயை மறுவருட நவராத்திரியின்போது உடைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகிக்கின்றனர்.
அம்பிகையின் வாகனத்திற்கு தேங்காய் நீர்: மும்பை மும்பாதேவி ஆலயத்தில் ரிஷப வாகனத்தில் அமர்ந்து காட்சி தருகிறாள் அம்பிகை. இங்கே நவராத்திரி ஒன்பது நாட்களும் தேங்காய் உடைத்து அதன் நீரை அம்பிகையின் வாகனத்தில் ஊற்றி விடுகின்றனர். நவராத்திரி நாட்களில் வளர்க்கப்படும் ஹோமத்தின் சாம்பலை புருவத்தில் பூசிக் கொள்கின்றனர்.
ஆண்டுக்கு இருமுறை நவராத்திரி கொண்டாடவேண்டும்: ஆண்டுக்கு இருமுறை நவராத்திரி கொண்டாடவேண்டும் என்று தேவி புராணம் கூறுகிறது. சித்திரையில் வரும் நவராத்திரிக்கு வசந்த நவராத்திரி என்றும், புரட்டாசியில் வரும் நவராத்திரிக்கு சாரதா நவராத்திரிஎன்றும் பெயர்.இவ்விரு காலங்களும் எமனுடைய கோரைப்பற்களுக்குச் சமமாகும். கோடை, குளிர் என பருவகாலம் மாறும்போது நோய்நொடிகள் பரவும். இந்த ஆபத்திலிருந்து மக்களைக் காக்கும்படி தேவியைப் பூஜிக்கவேண்டும் என்பதால் இவ்விழாவை நடத்தினர். ஆனால், கோடையில் நடந்த சித்திரை நவராத்திரி காலப்போக்கில் மறைந்து விட்டது. புரட்டாசி சாரதா நவராத்திரியே இப்போது வழக்கத்தில் உள்ளது.
அம்மன் விரும்பும் நவராத்திரி: நவராத்திரி அம்பாளுக்கு மிகவும் விருப்பமான பண்டிகை. பகலும், இரவுமாக ஒன்பது நாட்கள் பூஜை செய்வது நவராத்திரி விரதம். ஆண்டுக்கு நான்குமுறை நவராத்திரி வந்தாலும் புரட்டாசி அமாவாசைக்குப் பின் வரும் சாரதா நவராத்திரியைத்தான் இமயம் முதல் குமரி வரை கொண்டாடுகிறார்கள். நவராத்திரி விழாவை தமிழகத்தில் பொம்மைக் கொலு என்றும்; வங்கத்தில் துர்க்கா பூஜை எனவும்; வடக்கே ராம் லீலா உற்சவமாகவும், கர்நாடகா, குலசேகரப்பட்டினம், குலுமணாலி, ஜகதல்பூர் தண்டேஸ்வரி ஆலயம் போன்ற இடங்களில் தசரா பண்டிகையாகவும் கொண்டாடுகின்றனர். இவ்விழாக் கொண்டாட்டத்தில் பெண் குழந்தைகளுக்குத்தான் ஏக குஷி. ஏனெனில் அவர்களை தினம் ஒரு வேடமிட்டு தெரிந்தவர்கள் வீடுகளுக்கு கொலு பார்க்க வாருங்கள் என அழைப்பு விடுக்க அனுப்புவார்கள். நவராத்திரி கொண்டாடுவதில் குடும்பத்தில் பெரியவர் முதல் சின்னஞ்சிறுவர்கள் வரை அனைவர் பங்கும் உண்டு. இதனால் ஒற்றுமை, மரியாதை, பக்தி உணர்வு அதிகமாகும். கலைத்திறன், கற்பனைத்திறன், பொறுமை, சுறுசுறுப்பு, கைவேலைத்திறன், பாட்டு, நடனத் திறன்களும் வெளிப்படும். நிவேதனப் பொருட்கள் விதம் விதமாய் செய்வதால் சமையல் கலை போற்றப்படுகிறது. விதவிதமான வேடங்கள் போடும்போது ஒப்பனைத்திறன் ஒளிர்கிறது. இவை அனைத்தினாலும் மன மகிழ்ச்சியும், பாராட்டும் கிடைக்கும். பூஜை மகிமையால் மனை சிறக்கும்; மகாசக்தி அருளால் மங்களம் பெருகும்; நினைத்தது நிறைவேறும். எனவே தான் நவராத்திரி சுபராத்திரி எனப்படுகிறது.
நவராத்திரி பூஜையை தெய்வங்களும், தேவர்களும்கூட செய்து பலன் பெற்றுள்ளனர். நாரதர் அறிவுரைப்படி ராமர் கடைப்பிடித்து ராவணனை அழித்து சீதையை மீட்டு வந்தார். கண்ணபிரான், சியமந்தக மணி காரணமாக அடைந்த அபவாதம் இப்பூஜை செய்ததால் நீங்கியது. பஞ்சபாண்டவர்கள் பாரதப் போரில் வென்றதும் இந்த பூஜை செய்ததால்தான். தீய சக்தி மேலோங்கும்போது காத்திட வேண்டினால் அம்பாள் சண்டிகையாக ஒன்பது கோடி வடிவங்கள் எடுத்து தீமையை அழித்து நன்மை செய்வாள் என தேவி மகாத்மியம் கூறுகிறது. நவராத்திரியில் 9 நாட்களும் பூஜை விரதம் அனுஷ்டிக்க வேண்டும். இயலாதவர்கள் அஷ்டமி நாளில் மட்டுமாவது விரதம் இருந்து பூஜை செய்யலாம். விஜயதசமி தினத்தில் அம்பிகை அசுரர்களை அழித்து வெற்றிவாகை சூடினாள். ஆணவம் - சக்தியாலும், வறுமை-செல்வத்தினாலும், அறியாமை-ஞானத்தினாலும் வெற்றி கொள்ளப்பட்ட தினம் என்பதால் வீரம், செல்வம், கல்விக்கு உரிய தேவியரான துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என முப்பெரும் தேவியர்க்கும் உரியதாக இதை சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். அன்றைய தினம் புதிதாகத் தொடங்கும் எல்லாக் காரியங்களும் எளிதாக வசமாகும் என்பது ஐதீகம். அன்று அபிராமி அந்தாதியினைப் படிப்பது மிகச் சிறந்த பலன் தரும்.
மூன்று சக்தியை ஒன்றாக வழிபடும் நவராத்திரி: நவராத்திரி நாட்களில் அம்பிகையை வெவ்வேறு வடிவங்களில் அலங்கரித்து வழிபடுவர். அம்பிகையை முதல் மூன்று நாட்கள் துர்க்கையாகவும்; அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியின் அம்சமாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் முப்பெரும் சக்தியரை வழிபடுவார்கள். நவராத்திரியின் முதல் நாள் தேவியான மகேஸ்வரி பாலா, மது கைடபர் அழிவுக்குக் காரணமான தேவி. இரண்டாம் நாள் வழிபடப்படும் கவுமாரி, குமாரியாகப் போற்றப்படுகிறாள். அவளே ராஜ ராஜேஸ்வரியாகவும் ஆராதிக்கப்படுகிறாள். மூன்றாவது நாளுக்கு உரியவாராகி, கன்யா கல்யாணி என்று அழைக்கப்படுகிறாள். நான்காம் நாளில் அருள்பவள், மகாலட்சுமி. இவள் ரோகிணி என்று அழைக்கப்படுகிறாள். ஐந்தாம் நாள் வைஷ்ணவியாகவும் மோகினியாகவும் அலங்கரிப்பர். ஆறாவது நாளுக்குரிய தேவிவடிவம். இந்திராணி. அன்று சர்ப ராஜ ஆசனத்தில் தேவி அமர்ந்திருக்கும் கோலத்தில் பூஜை செய்வது வழக்கம். ஏழாம் நாள், தேவி மகாசரஸ்வதி, சுமங்கலி என அழைக்கப்படுகிறாள். எட்டாவது நாள் தேவியானவள் நரசிம்மிதருமி. நரசிம்மி வடிவின் சினம் தணிந்த கோலம் இது. அன்று அன்னை அன்பே உருவாக அருள்பாலிக்கிறாள். ஒன்பதாம் நாள் அம்பிகை, சாமுண்டி மாதா, அம்பு, அங்குசம் தரித்த லலிதா பரமேஸ்வரியாக அன்னையை வழிபடுவது வழக்கம்.பத்தாம் நாள் அசுரர்களை அழித்து அம்பிகை பெற்ற வெற்றியைக் குறிக்கும் விஜயதசமி. அன்று அன்னை வெற்றித் திருமகளாக அலங்கரிக்கப்பட்டு ஆராதிக்கப்படுகிறாள். இந்த வடிவங்களில் தேவியைத் தரிசித்து வழிபடுவதால் நவநிதிகளும் பெற்று, நீடுழி வாழ்வர் என்பது ஐதிகம்.