உப்பூர் விநாயகருக்கு இரு தேவியருடன் திருக்கல்யாணம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17செப் 2023 11:09
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகருக்கு இரு தேவியருடன் நடைபெற்ற திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் பிரசித்தி பெற்ற விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயில் மூலவர் மீது பகல் முழுவதும் சூரிய ஒளி படும் வகையில் கருவறை அமைய பெற்றுள்ளதால் இந்த விநாயகர் வெயிலுகந்த விநாயகர் என அழைக்கப்படுகிறார். செப்.10 கொடியேற்றத்துடன் சதுர்த்தி விழா துவங்கி செப்.19வரை விழா நடைபெறுகிறது. விழாவின் எட்டாம் நாளான நேற்று மாலை, விநாயகருக்கு சித்தி தேவி, புத்தி தேவி ஆகிய இரு தேவியருடன் திருக்கல்யாணம் நடைபெற்றது. தமிழகத்திலே இரு தேவியருடன் இந்த விநாயகருக்கு மட்டுமே திருக்கல்யாணம் நடைபெறுவதால், திருக்கல்யாண நிகழ்வில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். விநாயகருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றதும், பெண் பக்தர்களுக்கு தாலிக்கயிறு, மஞ்சள், குங்குமம் வழங்கப்பட்டன. தொடர்ந்து விநாயகர் திருமணத்திற்கு பக்தர்கள் திருமண மொய் எழுதியதுடன், மொய் விருந்தாக பரிமாறப்பட்ட கொழுக்கட்டைகளை பக்தர்கள் பெற்றுச் சென்றனர். பல ஆண்டுகளாக திருமண தடையால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் நிவர்த்தி வேண்டி விழாவில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று மாலை தேரோட்டம் நடைபெற்று, நாளை நடைபெறும் சதுர்த்தி தீர்த்தவாரியுடன் சதுர்த்தி விழா நடைபெறுகிறது.