நாங்கூர் மணிமாடக் கோவில் மகா சம்ப்ரோக்ஷணம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17செப் 2023 11:09
மயிலாடுதுறை: சீர்காழி அருகே நாங்கூரில் கோலாகலமாக நடைபெற்ற மணிமாட கோவில் மகா சம்ரோக்ஷனத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா நாகூரில் 108 திவ்ய தேசங்களில் 11 திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன. இதில் பிரதானமான மணிமாடக் கோவில் என்று அழைக்கப்படும் புண்டரீகவல்லி தாயார் சமேத நாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற ஸ்தலமான இங்கு இந்திரன், பிரம்மா, நாரதர், மதங்க முனிவர் ஆகியோர் பெருமாளை தரிசித்துள்ளனர். இக்கோவிலில் தை அமாவாசையின் போது நடக்கும் 11 கருட சேவை நிகழ்ச்சி உலக பிரசித்தி பெற்றதாக திகழ்கிறது இத்தகைய சிறப்புமிக்க கோவிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று காலை மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது. சம்ரோக்ஷனத்தை முன்னிட்டு கடந்த 13ஆம் தேதி பூர்வாங்க பூஜைகளும், 14 ஆம் தேதி யாகசாலை பூஜைகளும் தொடங்கி நடைபெற்றன 17 ஆம் தேதியான இன்று காலை ஏழாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து பூர்ணாஹூதி மற்றும் மகா அலங்கார தீபாராதனை நடைபெற்றது. காலை 9 மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்து விமானத்தை அடைந்தன. காலை 10 மணிக்கு சர்வ சாதகம் சீனிவாச பட்டாச்சாரியார், கோவில் அர்ச்சகர் நாராயண பட்டாச்சாரியார் ஆகியோர் தலைமையிலானவர்கள் பெருமாள், தாயார் சன்னதி விமான கலசங்களில் புனித நீர் தெளித்து மகா சம்ப்ரோக்ஷணத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து பெருமாள் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் சீர்காழி ஆர்டிஓ அர்ச்சனா, தாசில்தார் செந்தில்குமார் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை கண்டு பெருமாளை சேவித்தனர். கும்பாபிஷேகத்தையொட்டி எஸ்.பி. மீனா தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.