பதிவு செய்த நாள்
21
செப்
2023
12:09
கரூர்: விலை மதிக்க முடியாத வரலாற்று சின்னங்களின் ஒன்றான, சிறுகுன்றின் மேல் நிற்கும் சுண்டக்காபாறை, போதிய பராமரிப்பு இல்லாமல் அழியும் அபாயத்தில் உள்ளது. கரூர் மாவட்டம், குளித்தலை- அருகே சத்தியமங்கலம் பஸ் ஸ்டாப் அருகில், சிறு குன்றின் மீது சுண்டக்கா பாறை என்ற குண்டாங்கல் பாறை அமைந்துள்ளது. சுண்டக்காய் போன்று உள்ளதால், அந்த பெயரில் அழைக்கப்படுகிறது. முட்டை வடிவில், 30 அடி உயரமுள்ள குண்டாங்கல் பாறை, உயரம் குறைவான ஒரு சிறு குன்றின் மீது அமைந்திருக்கிறது. குண்டாங்கல்லின் ஒரு சிறு பகுதி மட்டுமே, அந்த குன்றின் மீது அழுத்தி நிற்கும் காட்சி நம்மை வியக்க வைக்கிறது.
குண்டாங்கல் பாறையின் கிழக்கு முகத்தில், 20 அடி உயரத்தில் செவ்வக வடிவத்தில, 4 அங்குல ஆழத்திற்கு வெட்டப்பட்டு, அதில் வர்த்தமானர் மஹாவீரர் பத்மாசன தியான கோலத்தில் அமர்ந்திருப்பதையும், அவரோட தலைக்கு மேல முக்குடைகளும், தலைக்கு பின்னாடி ஒளிவட்டம் இருக்கும்படியாகவும் கலைநயத்தோட சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மஹாவீரருக்கு இருபுறமும், மலர் ஏந்திய இரு பெண்களுடன், இரு ஆண்கள் அவரை போற்றியபடி உள்ளனர். இந்த சிற்பங்கள் காண்பவர் கண்களை கவரும் வகையில் செதுக்கப்பட்டுள்ளது. நவீன கருவிகள் அந்த காலத்தில இல்லாதபோதே, சிற்பங்கள் மிக நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளது ஆச்சரியத்தை தருகிறது. இந்த சிற்பங்கள் கி.பி. 4-ம் நுாற்றாண்டு அல்லது அதற்கும் முந்தைய காலமாக இருக்கலாம் என, வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். இந்த சிற்ப தொகுப்புக்கு கீழ் சமண சமயத்தின், 23-வது தீர்த்தங்கரரான பார்சுவதநாதரின் உருவம், பாம்பின் தலைப்பகுதி, குடை பிடித்தது போல ஓவியம் செதுக்கப்படுள்ளது அதிசயப்பட வைக்கிறது. பாறையில இருக்கிற ஒரு கல்வெட்டு எழுத்து ‘யாகரடு’ என்ற பெயரை காட்டுவதாக உள்ளது. எழில் மிகுந்த சிற்பத் தொகுதியை தாங்கியுள்ள குண்டாங்கல் பாறைக்கு கீழ், சமணத் துறவிகள் படுப்பதற்காக மிக நேர்த்தியாக செய்யப்பட்ட, சமணர் படுக்கைகள் உள்ளன. மலையின் மீது வட்ட வடிவில் கிணறு போன்ற இயற்கை மழைநீர் சேமிப்பு சுனை ஒன்றும் உள்ளது. இதனை, சமண துறவிகள் குடிநீருக்காக பயன்படுத்தியுள்ளனர். இத்தகைய சிறப்புவாய்ந்த குண்டாங்கல் பாறை, தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும், தகுந்த பாதுகாப்பு இல்லாததால் சீரழியும் நிலையில் உள்ளது. மேலும், மது அருந்துபவர்களின் புகலிடமாகவும், அந்த பாறையில் பெயர்களை கிறுக்குபவர்களின் கூடாரமாகவும் மாறி கொண்டிருக்கிறது. எனவே, விலை மதிக்க முடியாத வரலாற்று சின்னத்தை பாதுகாக்க முன்வர வேண்டும்.