பதிவு செய்த நாள்
29
செப்
2023
01:09
உத்தரகன்னடா: நரேந்திரமோடி 3வது முறையாக பிரதமர் ஆக வேண்டி, கோகர்ணாவில் மஹாருத்ரயாகம் செய்யப்படுகிறது. மத்தியில் 2014, 2019ல் பா.ஜ., ஆட்சியை பிடித்தது. இரண்டு முறையும் நரேந்திர மோடி பிரதமரானார். 2024ல் நடக்க உள்ள லோக்சபா தேர்தலிலும் பா.ஜ., வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆவார் என்று அக்கட்சியினர் நம்பிக்கை வெளிப்படுத்துகின்றனர். இந்த வகையில், சமூக ஆர்வலர் அனந்தகுமார் ஹெக்டே என்பவர், மோடி 3வது முறையாக பிரதமராக ஆகவேண்டி உத்தரகன்னடா மாவட்டம், கோகர்ணாவில் மஹாருத்ரயாகம் நடத்துகிறார். அங்குள்ள பிரசித்தி பெற்ற மஹாகணபதி, மஹாபலேஸ்வரா கோவிலில் நேற்று சிறப்பு பூஜை செய்து விட்டு, அஹல்யாபாயி ஹோல்காரா மண்டபத்தில் மஹாருத்ரயாகம் துவக்கினார். மூன்று நாட்கள் நடக்கும் இந்த யாகத்தை ஒட்டி, நேற்று, ருதுஜவரா வர்ணனே, கணபதி பூஜை , மஹாசங்கல்பம் உட்பட வெவ்வேறு பூஜைகள் செய்யப்பட்டன. இன்று மஹாருத்ரயாகம், பூர்ணாஹுதி நடக்கிறது. நாளை சிறப்புபூஜைகள் நடக்கின்றன. கிருஷ்ணபட் சடக் ஷரி மற்றும் பரமேஸ்வரா மார்காண்டே ஆகியோர் தலைமையிலான அர்ச்சகர்கள் யாகத்தை நடத்தி வருகின்றனர். மூன்று நாட்களும் பக்தர்கள் யார் வேண்டுமானாலும், மஹாருத்ரயாகத்தில் பங்கேற்று மோடி மீண்டும் பிரதமராக வேண்டி கொள்ளலாம்.