சீர்காழி கோவிலில் கண்டெடுக்கப்பட்ட தேவார செப்பேடுகள், தெய்வத் திருமேனிகள்; அரசு கையகப்படுத்த பக்தர்கள் எதிர்ப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10அக் 2023 05:10
மயிலாடுதுறை : சீர்காழி சட்டைநாதர் கோவில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட தெய்வத் திருமேனிகள், தேவார செப்பேடுகள் குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாதர் கோவில் அமைந்துள்ளது. இகோவில் கும்பாபிஷேகம் மே 24ஆம் தேதி நடைபெற்றது முன்னிட்டு யாகசாலை அமைப்பதற்காக ஏப்ரல் 16ஆம் தேதி மண் எடுக்க குழி தோண்டிய போது 23 ஐம்பொன் தெய்வத்திருமேனிகள், பூஜை பொருட்கள் மற்றும் 413 முழுமையான தேவார பதிகம் பதித்த செப்பேடுகள், 83 சேதமடைந்த செப்பேடுகளும் கண்டெடுக்கப்பட்டு கோவில் சுவாமி சன்னதி அருகே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அவற்றை அரசு கையகப்படுத்துவது தொடர்பான பொதுமக்கள் கருத்து கூட்டம் இன்று மயிலாடுதுறை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) ராஜ கணேஷ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தருமபுரம் ஆதீன பிரதிநிதிகளாக பொது மேலாளர் ரங்கராஜன், கோவில்களின் தலைமை கண்காணிப்பாளர் மணி, மேலாளர் சேதுமாணிக்கம், சட்டைநாதர் கோவில் காசாளர் செந்தில் ஆகியோர் கலந்து கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். கூட்டத்தில் அதிமுக, பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர். அப்போது அவர்கள் தொன்மையான சீர்காழி கோவில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன்னால் ஆன தெய்வத்திருமேனிகள் மற்றும் தேவார பதிகங்கள் பதிக்கப்பட்ட செப்பேடுகளை அரசு கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்ததுடன், தெய்வத் திருமேனிகள் மற்றும் செப்பேடுகள் குறித்து அடுத்து வரும் தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் கோவில் வளாகத்திலேயே பெட்டகம் அமைத்து பாதுகாக்க வேண்டும். . பாதுகாப்பு பெட்டகம் அமைப்பதற்கு உண்டான செலவுத் தொகையை தருமபுரம் ஆதீனமே வழங்க உத்தரவாதம் அளித்துள்ளார் என தெரிவித்தனர். மேலும் கோயில் அருகில் கண்டெடுக்கப்படும் தெய்வத்திருமேனிகள் அந்தந்த கோவிலுக்கு வழங்கப்பட்டதற்கான ஆவணங்களை இந்து அமைப்பினர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.