சூரியனுக்கு சஞ்ஜனா, சாயா என இரண்டு மனைவிகள். சஞ்ஜனாவுக்கு பிறந்தவர்கள் யமதர்மன், யமுனை என்னும் நதி(தங்கை) சாயாவுக்குப் பிறந்தவர் சனீஸ்வரன். நதியான யமுனையில் வாழ்ந்த காளிங்கன் என்னும் பாம்பை அடக்கி, கிருஷ்ணர் அந்நதியைப் புனிதப்படுத்தியதால் ஆயர்பாடி மக்கள் கொண்டாடினர்.
அதைக் கண்ட சனீஸ்வரன், ‘‘ சகோதரி யமுனா... உன்னை மங்களமானவள் எனக் கொண்டாடுகின்றனர். ஆனால் என்னை அமங்களன்(மங்களம் அற்றவன்) என பழிக்கிறார்களே...’’ என வருந்தினான். அதையறிந்த நாரதர், ‘‘ வருந்தாதே சனீஸ்வரா! கிருஷ்ணருடன் கிடைத்த நட்பால் உன் தங்கை யமுனை புனிதம் பெற்றாள். நீயும் அவரது அன்பை பெற்றால் நலம் பெறுவாய். அதற்கு முன்னதாக ேஹாலிகா என்னும் அரக்கியின் வரலாற்றை தெரிந்து கொள்’’ எனச் சொல்ல ஆரம்பித்தார். ‘‘அசுரனான இரண்யனின் மகன் பிரகலாதன். அவன் மகாவிஷ்ணுவின் பக்தன். இதை விரும்பாத இரண்யன் மகனைக் கொல்லவும் துணிந்தான். தன் சகோதரியான ேஹாலிகாவிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்தான். ஏனெனில் விசேஷ சக்தி கொண்ட அவளுக்கு தீயின் வெம்மை தாக்காது என்பதால் தான். பிரகலாதனைத் தீயில் தள்ளிய ேஹாலிகா, அவன் வெளியே வரமுடியாதபடி கைகளால் அழுத்தினாள். ஆனால் பிரகலாதனைக் காப்பாற்றினார் மகாவிஷ்ணு . ஆனால் அவள் ஒரு பெண் என்பதால் தண்டிக்கவில்லை. அவளோ மகாவிஷ்ணுவை பழிவாங்கக் காத்திருந்தாள். ஆயர்பாடியில் நந்தகோபரின் மகனாக மகாவிஷ்ணு (கிருஷ்ணர்) வளர்வதை கேள்விப்பட்டு, அங்கு திட்டத்தை செயல்படுத்தப் போகிறாள். அதற்கு முன்னதாக ஹோலிகாவை நீ ஒழித்துக் கட்டினால் மங்கள சனீஸ்வரனாகும் பேறு பெறுவாய்’’ என வாழ்த்தினார் நாரதர். திட்டமிட்டபடி ேஹாலிகா ஆயர்பாடிக்குச் சென்றாள். அப்போது கிருஷ்ணனும், அவனது நண்பர்களும் தீமைகளை ஒழிக்கும் விதமாக விறகுகளை அடுக்கி தீயிட்டு ஹோலி கொண்டாட தயாராயினர். கிருஷ்ணனைக் கொல்வதற்காக ேஹாலிகா விறகு கட்டுக்குள் ஒளிந்திருந்தாள். அங்கு வந்த சனீஸ்வரன் தன் கொடிய பார்வையை ஹோலிகா மீது செலுத்த, அவளது சக்தி மறைந்தது. விறகில் தீயை மூட்டிய கிருஷ்ணன் ஆரவாரித்தான். அதன் வெம்மை தாளாத ஹோலிகா எரிந்து சாம்பலானாள். நடந்த விஷயத்தை நாரதர் விவரிக்க அனைவருக்கும் உண்மை புரிந்தது. சனீஸ்வரனை வாழ்த்திய கிருஷ்ணர், ‘‘இன்று முதல் நீயும் மங்களமானவனாகத் திகழ்வாய். இனி சனிக்கிழமை அதிகாலை புனிதமானதாக விளங்கும். கலியுகத்தில் திருப்பதி வெங்கடேசப் பெருமாளாக வீற்றிருப்பேன். சனிக்கிழமையில் விரதமிருந்து என்னை தரிசிப்போரின் விருப்பத்தை நிறைவேற்றுவேன்’’ என வரம் அளித்தார்.