பதிவு செய்த நாள்
17
அக்
2023
02:10
சென்னை: சென்னிமலையில் கோயில் விவகாரம் தொடர்பாக, சென்னையை சேர்ந்த குணசேகரன் சாமுவேல் என்ற பாதிரியார் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
செப்., 26ம் தேதி ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் நடந்த கிறிஸ்துவ முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில், கந்த சஷ்டி அரங்கேற்ற தலமாக விளங்கும் சென்னிமலை முருகன் கோயில் மலையை, கல்வாரி மலையாக எனும் கிறிஸ்துவ மலையாக மாற்றுவோம் என்று பேசியதால், ஹிந்துக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்தும், கிறிஸ்துவ முன்னணியினர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், சென்னிமலை பஸ் ஸ்டாண்ட் முன், கடந்த 13 ம் தேதி ஹிந்து முன்னணியினர், சென்னிமலை ஆண்டவர் குழு, ஊர்மக்கள் உட்பட பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மன்னிப்பு கோரிய பாதிரியார்; இந்நிலையில் சென்னையை சேர்ந்த குணசேகரன் சாமுவேல் என்ற பாதிரியார் வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளதாவது: சென்னிமலை என்று சொல்லி ஒரு காரியம் குறித்து அனைத்து சேனல்களிலும் பார்க்கிறேன். இது எனக்கு மிகுந்த வருத்தத்தை உண்டாக்கக் கூடியதாக இருக்கிறது. கிறிஸ்தவ நண்பர்கள் சென்னிமலைக்கு சென்று பிரார்த்தனை செய்தது மிகவும் வன்மைக்குரிய காரியம். அதை அவர்கள் செய்திருக்கவே கூடாது. கிறிஸ்தவ நண்பர்கள், சென்னிமலைக்கு சென்று பிரார்த்தனை செய்தது மிகவும் தவறான காரியம். அதை வன்மையாக கண்டிக்கிறேன். மற்றவர் வழிபடும் ஸ்தலத்திற்கு சென்று தான், நீங்கள் இயேசுவை பிரார்த்தனை செய்ய வேண்டும் என வேதத்தில் சொல்லவில்லை. இது வேண்டுமென்றே செய்யப்பட்டதாய் கருதுகின்றேன். ஆகவே, அப்படிப்பட்டவர்கள் மீது கட்டாயம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அவர்களும் துணை போகின்றார்கள் என்று தான் அர்த்தம். இப்படிப்பட்ட ஒரு சிலர் செய்யும் காரியத்தினால், மொத்த கிறிஸ்தவ மக்களுக்கும் தவறான பெயர் உண்டாகிறது என்பதில் எந்த விதமுமான சந்தேகமும் கிடையாது. கிறிஸ்தவ முன்னணினு சொல்றாங்க... அந்த கிறிஸ்தவ முன்னணி என்பதே எங்களுடைய கிறிஸ்தவர்களுக்கே தெரியாத ஒரு புதிய ஏதோ ஒரு காரியமாக இருக்கிறது. எங்களுக்கே அது என்ன வென்று தெரியவில்லை. அது தான் உண்மை. ஏதோ ஒரு சிலர் சேர்ந்து, கிறிஸ்தவ முன்னணிணு சொல்லி தாங்களாவே பெயர் வைத்து கொண்டு இப்படி பிற மதத்தினருக்கு துன்புறுத்துவது மன உளைச்சலை கொண்டு வருவதை கண்டிக்கிறேன். கிறிஸ்தவ முன்னணியில் உள்ளவர்களை கண்டிக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க வேண்டும். காரணம், ஒட்டுமொத்த கிறிஸ்தவ மக்களுக்கும் பாதிப்பு உண்டாகிறது. வீணான மதக்கலவரத்தை கிறிஸ்தவ முன்னணியினர் கொண்டு வருகின்றார்கள். இதற்கு யாரோ பின்னணியில் இருந்து உதவி செய்வது போல் அறிகிறேன். ஆகவே என் அன்பு, பிற மதத்தினர், விஷேசமாக இந்து மதத்தை சார்ந்த சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என்னுடைய மனம் திறந்து, இந்த தவறான காரியம் குறித்து மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். கிறிஸ்தவர்கள் பெயரால் ஏற்பட்ட இந்த ஒரு காரியத்திற்காக கிறிஸ்தவர்களின் சார்பில் மன்னிப்பு கேள்கிறேன். தயவு கூர்ந்து மன்னித்து கொள்ளுங்கள். நமக்குள் எந்த விரோதமும் வேண்டாம். வீணாக தமிழகத்தில் மதக்கலவரத்தை உண்டாக்கி நமக்குள் இருக்கிற சமாதான குளைச்சலை ஏற்படுத்தி ஒரு வகையில் பாஜ., அரசு மீது சுமத்தி வீணான காரியத்தை செய்து வருபவர்கள் மீது அரசு கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்து முன்னணியினர் தயவு செய்து மன்னித்து கொள்ளுங்கள். அனைத்து கிறிஸ்தவர்களின் சார்பாக கேட்டு கொள்கிறேன். மன்னித்து கொள்ளுங்கள். மீண்டும் உங்களை நாங்கள் சகோதரர்கள் சகோதரிகளாய் கேட்டு கொள்ள விரும்புகிறோம். நாம் எல்லாம் அனைவரும் ஒரே மண்ணில் பிறந்தவர்கள். ஆகவே நம்மிடையே வேற்றுமைகள் வேண்டாம். மீண்டும் நான்ஒரு முறை கேட்டுக் கொள்கிறேன். மன்னித்து கொள்ளுங்கள். மன்னித்து கொண்டீர்கள் என்றால், சமாதானமாய் இருப்பது நலம். அவர்கள் செய்தது தவறு. வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு அந்த வீடியோவில் பாதிரியார் குணசேகரன் சாமுவேல் கூறியுள்ளார்.