பதிவு செய்த நாள்
22
அக்
2023
07:10
சென்னை, வடபழநி ஆண்டவர் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, சக்தி கொலு வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவின் ஏழாம் நாளான நேற்று, அம்பாள் கம்பாநதி அலங்காரத்தில் அருள் பாலித்தார். கோவிலுக்கு வருகை தந்த உடுப்பி புதிகே மடத்தின் மடாதிபதி சுகுனேந்திர தீர்த்த சுவாமிகள், ஆண்டவரை தரிசித்து, ஏழாம் நாள் சக்தி கொலுவை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். சிறுவர்களுக்காக சிறப்பு அறிவுத்திறன் போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன. மேலும், நேற்று மாலை, ராக ரம்யம் குழுவினரின் வயலின் கச்சேரியும், டாக்டர் ராஜசேகர சிவாச்சாரியாரின் சொற்பொழிவும் நடந்தது. விழாவில் இன்று, உற்சவர் மீனாட்சி அம்மனுக்கு ஏகதின லட்சார்ச்சனை காலை 7:30 மணி முதல் 12:30 மணி வரையிலும்; மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணிவரையிலும் நடக்கிறது.
வடிவுடையம்மன் கோவில்: திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், நவராத்திரி திருவிழாவின் ஆறாம் நாளான நேற்று முன்தினம் இரவு, உமா மகேஸ்வரியாக எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவொற்றியூர், தேரடி, அகத்தீஸ்வரர் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோவில் நவராத்திரி விழாவில், அம்பாள் ராஜ ராஜேஸ்வரி அலங்காரத்தில் எழுந்தருளினார். திருவொற்றியூர், பொன்னியம்மன் கோவிலில், உற்சவ தாயாருக்கு, கவுரி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
மழலையர் வித்யாரம்பம்; வடபழனி ஆண்டவர் கோவிலில், வரும் 24ம் தேதி காலை 7:30 மணி முதல் 10:00 மணி வரை, இரண்டரை வயது முதல் மூன்றரை வயது வரை உள்ள குழந்தைகளுக்கு விரல் பிடித்து தொடக்க கல்வியை ஆரம்பிக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடக்கிறது.