உடன்குடி: குலசேகரபட்டினம் ஸ்ரீ முத்தாரம்மன் கோவில் தசரா விழாவில் கமல வாகனத்தில் முத்தாரம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடக்கிறது. விழா எட்டாம் நாள் இரவு அன்னை முத்தாரம்மன் கமல வாகனத்தில் கஜலெட்சுமி திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். 10ம் திருநாளான 24ம் தேதி இரவு 11 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் சிம்மவாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயில் முன் எழுந்தருளி மகிஷாசூரசம்ஹாரம் செய்தல் நடக்கிறது. 25ம் தேதி நள்ளிரவு ஒரு மணிக்கு சூரசம்காரம் முடிந்தவுடன் கடற்கரை மேடைக்கு அம்மன் எழுந்தருளி அபிஷேக ஆராதனை 2 மணிக்கு அம்மன் சிதம்பரேஸ்வரர் கோயிலுக்கு எழுந்தருளி சாந்தாபிஷேக ஆராதனை, 3 மணிக்கு அம்மன் திருத்தேரில் பவனி வந்து தேர் நிலையம் வருதல், காலை 5 மணிக்கு அபிஷேக, ஆராதனை, 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்மன் திருவீதி உலா புறப்பட்டு மாலை 4 மணிக்கு கோயில் வந்து சேர்ந்தவுடன் 4.30 மணிக்கு காப்பு களைதல் நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு அம்மனுக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது.