பதிவு செய்த நாள்
24
அக்
2023
11:10
சென்னை: வடபழனி ஆண்டவர் கோவிலில், விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளின் விரல் பிடித்து தொடக்க கல்வியை ஆரம்பிக்கும், வித்யாரம்பம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
சென்னை, வடபழனி ஆண்டவர் கோவிலில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சக்தி கொலு வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் பிரதானமாக, அம்பாளுக்கு தினசரி சிறப்பு அலங்காரம் செய்யப்படுகின்றன. விழாவின் நிறைவு நாளான நேற்று, சரஸ்வதி அலங்காரத்தில் அம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக நேற்று காலை, மாலையில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. நேற்று மாலை, சகஸ்ரநாம பாராயணம் செய்தனர். இதைத்தொடர்ந்து வேத பாராயணம், திருமுறை பாராயணம், மகளிர் குழுவினரின் கொலு பாட்டு நடந்தது.இதைத் தொடர்ந்து, அபூர்வா நாட்டியாலயா பள்ளி மாணவர்களின் பரதநாட்டியம் நிகழ்ச்சி, ஸ்ரீ நித்யாலயாவின் சார்பில் நந்தினி சுரேசின் அறனும் அங்கையர் கன்னியும் நாட்டிய நாடகம் நடந்தன. விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சக்தி கொலு நிகழ்ச்சிகளை கண்டு மகிழ்ந்தனர். சிறார்களிடம் ஆன்மிகத்தை வளர்க்கும் வகையிலும், அவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தி கோவிலுக்கு வரும் எண்ணத்தை கொண்டு வரவும், தினமும் அறிவுத்திறன் போட்டி நடத்தப்பட்டு, பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
விஜயதசமியை முன்னிட்டு, இன்று காலை 7:30 மணி முதல் 10:00 மணி வரை, 2.5 வயது முதல் 3.5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு விரல் பிடித்து தொடக்க கல்வியை ஆரம்பிக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான குழந்தைகள் வடபழனி ஆண்டவரை தரிசித்து அ எழுதி கல்வியை துவங்கினர். நிகழ்ச்சியில் கோவில் தக்கார் எல்.ஆதிமூலம் குழந்தைகளின் விரல் பிடித்து அ னா ஆவன்னா எழுத வைத்தார்.