பதிவு செய்த நாள்
24
அக்
2023
11:10
அன்னூர்: சொக்கம்பாளையம், செல்வ விநாயகர் கோவிலில் நவராத்திரி விழா இன்று நடந்தது.
சொக்கம்பாளையத்தில், 110 ஆண்டுகள் பழமையான, செல்வ விநாயகர் கோவிலில் 56வது ஆண்டு நவராத்திரி விழா கடந்த 15ம் தேதி கொலு பூஜையுடன் துவங்கியது. தினமும் மாலை 6:30 மணிக்கு, அபிஷேக பூஜையும், இரவு 7:30 மணிக்கு அலங்கார பூஜையும் நடந்தது. கடந்த 22ம் தேதி உயர்ந்த வாழ்வுக்கு உறுதுணையாக இருப்பது கல்வியே, செல்வமே, என்னும் தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. கடந்த 23ம் தேதி மாலையில் வாண வேடிக்கையுடன் அம்மன் அழைப்பு நடந்தது. இரவு பரதநாட்டியம் நடந்தது. காலை மகாத்மா காந்தி சிலைக்கும், சுதந்திர போராட்ட தியாகி பெட்டையன் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தேவனாபுரம் பெருமாள் குழுவின் பஜனையும், மதியம் செல்வ விநாயகருக்கு அபிஷேக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது. 1,000க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதையடுத்து, சிறுவர், சிறுமியருக்கு, விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. முக்கிய வீதிகள் வழியாக சுவாமி திருவீதி உலா பாண்டுரங்கன் குழுவின் பஜனை உடன் நடந்தது. அன்னூர், கோவை, காரமடை பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.