நான்குநேரி: நான்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் நேற்று நடந்த பரிவேட்டை வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நான்குநேரி வானமாமலை பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் 8 சுயம்பு சேத்திரங்களில் முதன்மையானது ஆகும். இங்கு வானமாமலை பெருமாளுக்கு தினந்தோறும் காலையில் நித்திய எண்ணெய் காப்பு நடைபெறுவது வழக்கம். நேற்று விஜயதசமியை முன்னிட்டு பரிவேட்டை வைபவம் அதிகாலையில் நடந்தது. இதில் உற்சவ மூர்த்தியான தெய்வநாயக பெருமாள் கோயிலில் இருந்து குதிரை வாகனத்தில் எழுந்தருளி ராமானுஜம் தெருவிற்கு வந்தார். அங்கு சமனம் பார்க்கும் வைபவம் நடந்தது. தொடர்ந்து செல்வன் தெரு, மெயின் ரோடு வழியாக கிருஷ்ணன் கோயிலுக்கு வந்தடைந்தார். அங்கு சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. இதில் நான்குநேரி மடத்தின் 31வது மடாதிபதிமதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.