பதிவு செய்த நாள்
27
அக்
2023
01:10
பந்தலூர்; நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் கூடலூர் பகுதியில் பனியர் இன பழங்குடி மக்கள், சார்பில் நெற்பயிர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பாரம்பரியமாக அறுவடை திருவிழாவை, ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 10ம் நாள் கொண்டாடி வருகின்றனர்.
நடப்பு ஆண்டிற்கான திருவிழா பந்தலூர் அருகே, பொன்னானி மகாவிஷ்ணு கோவிலில் நடைபெற்றது காலை 8 மணிக்கு கோவில் சிறப்பு பூஜைகள் செய்து விரதம் இருந்த, குமரன் என்பவருக்கு, கோவில் சார்பில், நல்லெண்ணை, புதுத்துணி வழங்கப்பட்டது .
உடல் முழுவதும் எண்ணை பூசி குளித்து, இவரின் தலைமையில் பழங்குடியின மக்கள் மற்றும் குந்தலாடி பகவதி அம்மன் கோவில் கமிட்டி நிர்வாகிகள் இணைந்து கேரளா மாநிலம் செட்டி ஆலத்தூர் என்ற இடத்தில் உள்ள வயல் பகுதிக்கு சென்றனர் அங்கு நெற்கதிர்களுக்கு சிறப்பு பூஜை செய்து முதிர்ந்த நெற்கதிர்களை அறுவடை செய்து தலை சுமையாக மீண்டும் கோவிலுக்கு எடுத்து வந்தனர் அங்கு பழங்குடியின மக்களின் இசை கருவிகளுடன் ஊர்வலமாக வந்து கோவிலில் சிறப்பு பூஜை செய்து பக்தர்களுக்கு நெற்கதிர்கள் மற்றும் ஆலமரத்து இலையுடன் கூடிய பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், வேலாயுதம், ஜெயபிரகாஷ். மற்றும் நிர்வாகிகள், பழங்குடியினர் சமுதாய நிர்வாகிகள் செங்குட்டுவன், வேலன், வாசு மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். இதில் பழங்குடியின மக்கள் மற்றும் வயநாடன் செட்டி சமுதாய மக்கள் உள்ளிட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.