பதிவு செய்த நாள்
27
அக்
2023
03:10
மேட்டுப்பாளையம்: சடைச்சி மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில், டேங்க் மேடு பகுதியில் சடைச்சி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் புதிதாக கோபுரம், சிவன், முருகன் உள்பட பல்வேறு சுவாமிகள் சன்னதிகள் அமைக்கும் திருப்பணிகள் நடைபெற்றன. கும்பாபிஷேக விழா கடந்த, 25ம் தேதி விநாயகர் வழிபாடு, மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மாலை, 4:00 மணிக்கு செல்வபுரம் விநாயகர் கோவிலில் இருந்து, தீர்த்த குடங்கள் மற்றும் முளைப்பாரியை ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர். அதைத் தொடர்ந்து இரண்டு நாட்கள், மூன்று கால யாக பூஜைகள் நடந்தன. இன்று காலை, 5:00 மணிக்கு நாடி சந்தானம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. 7:00 மணிக்கு யாகசாலையில் இருந்து, தீர்த்த குடங்கள் ஆலயத்தைச் சுற்றி எடுத்து வரப்பட்டது. 7:30 மணியிலிருந்து எட்டு மணி வரை, கோபுர கலசத்திற்கும், எட்டு மணி வரை பிற சன்னதிகளில் உள்ள பரிவார் தெய்வங்களுக்கும், தட்சிணா மூர்த்தி குருக்கள், சிவ கணேஷ் சிவம் ஆகியோர் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் செய்தனர். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அதை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.