பதிவு செய்த நாள்
30
அக்
2023
05:10
வீரபாண்டி; ஆட்டையாம்பட்டி அருகே, திருமணிமுத்தாற்றின் கரையில், பாறையில் செதுக்கப்பட்டுள்ள பழமையான ஆஞ்சநேயர் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சேலம், ஆட்டையாம்பட்டி அருகே நாமக்கல் மாவட்ட எல்லையில், சென்னகிரி ஊராட்சிக்குட்பட்ட கோமாளிக்காடு என்ற இடம் உள்ளது. திருமணிமுத்தாற்றின் கரையில் உள்ள இப்பகுதியில் தென்னந்தோப்பு நிறைந்துள்ளது. இங்கு கணேசன் என்பவரது தோப்பில், 20 நாட்களுக்கு முன்பு கரை கட்ட மண்ணை தோண்டியபோது, பெரிய பாறையில் இரண்டு சிற்பங்கள் இருப்பது தெரியவந்தது. கைகளால் மண்ணை அகற்றி சுத்தம் செய்து பார்த்த போது, இரண்டு அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிலை மற்றும் அருகில் அவரது பக்தர் அல்லது இப்பகுதியை ஆட்சி செய்த மன்னரின் உருவம் ஒன்றரை அடி உயரத்தில், ஆஞ்சநேயரை போலவே கை கூப்பிய நிலையில் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. பழமையான இந்த சிலையில், அனுமனின் வால் வானை நோக்கி உயர்த்தியபடியும், நுனியில் மணி கட்டியுள்ளது, கண் இமைகள், உருவம், கழுத்தில் அணிந்துள்ள அணிகலன்கள், இடுப்பில் கட்டியுள்ள வஸ்திரம், அதன் கரைகள் என அனைத்தும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதே போல் அருகிலுள்ள மனித உருவத்திலும், இடுப்பில் கட்டியுள்ள வேட்டியின் மடிப்பு, கைகளில் காப்பு, தோள்களில் ஆபரணங்கள், சிகை என அனைத்தும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சிற்பங்கள் உள்ள பாறையில் ஆங்காங்கே எழுத்துகளும் கல்வெட்டுகளை போல் செதுக்கப்பட்டுள்ளது. அவை படிக்க முடியாத அளவுக்கு, அரிக்கப்பட்டு சேதமடைந்துள்ளது. இது குறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில்,‘‘கடந்த, 20 ஆண்டுக்கு முன்பு வரை இந்த சிலை வழிபாட்டில் இருந்த நிலையில், அதற்கு பின் கவனிப்பாரின்றி மண் மூடிவிட்டது. தற்போது மண்ணை தோண்டும் போது, மீண்டும் ஆஞ்சநேயர் வெளிப்பட்டு விட்டார்,’ என, தெரிவித்தனர்.