பதிவு செய்த நாள்
01
நவ
2023
10:11
நாமக்கல்; நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், நாளை கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கோட்டை சாலையில், நரசிம்மர், நாமகிரித்தாயார் கோவில் எதிரே, ஒரே கல்லில் உருவான, 18 அடி உயர சிலையுடன் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு, நின்ற நிலையில் வணங்கியபடி, சாந்த சொரூபியாக ஆஞ்சநேயர் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தமிழகம் மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து, சுவாமியை தரிசிக்கின்றனர். இக்கோவிலில், 1996 மற்றும் 2009ல் கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது, ஹிந்து சமய அறநிலையத்துறை மூலம், 64.60 லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டன. இதையடுத்து, யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. நேற்று காலை, 8:00 மணிக்கு, மகாசாந்தி மற்றும் அதிவாச ஹோமம், தமிழ் ப்ரபந்த் சமர்பணம், பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, காலை, 10:00 மணிக்கு, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று காலை, 9:10 மணிக்கு, யாத்ராதானம், கும்பப்ரயாணம் நடந்தது. தொடர்ந்து, 10:00 மணிக்கு, திருக்குட நன்னீராட்டு பெருவிழா, மகா சம்ப்ரோஷணம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ராம கோஷம், ஜெய் ஆஞ்சநேயா கோஷத்துடன் ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர். நாமக்கல் மாவட்ட எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் தலைமையில், நாமக்கல், சேலம் மாவட்டங்களை சேர்ந்த, 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், 105 ‘சிசிடிவி’ கேமராக்கள் பொருத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குழு தலைவர் நல்லுசாமி, அறங்காவலர்கள் சீனிவாசன், டாக்டர் மல்லிகை, செல்வா சீராளன், ரமேஷ் பாபு, அறநிலைய துறை உதவி கமிஷனர் இளையராஜா, கண்கணிப்பாளர் அம்சா உள்ளிட்டோர் செய்துள்ளனர்.