பதிவு செய்த நாள்
31
அக்
2023
06:10
ராணிப்பேட்டை; ராணிப்பேட்டை அருகே, ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில், ஐப்பசி மாத கிருத்திகையை முன்னிட்டு, அறுகோண தெப்பக்குளத்தில், பக்தர்கள் ஆரத்தி காட்டும் நிகழ்வு நடந்தது.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் மலைக்கோவில் அடிவாரத்தில், புதியதாக அறுகோண தெப்பக்குளம் அமைக்கப்பட்டு கடந்த பிப்., 12 ம் தேதி திறக்கப்பட்டது. இது, தினமும் மாலை, 5:30 முதல், இரவு, 7:30 மணி வரை திறந்திருக்கும். அந்த நேரங்களில் பக்தர்களுக்காக, திருப்புகழ், கந்த சஷ்டி கவசம், தேவாரம், கந்தர் கலிவெண்பா, கந்தர் அலங்காரம், ரத்தினகிரி அந்தாதி மற்றும் பக்தி பாடல்கள் ஒலிபரப்பப்படும். பக்தர்கள் மாதந்தோறும், கிருத்திகை வேள்வி பூஜை செய்து, அவர்களது கையால் ஆரத்தி செய்யும் நிகழ்வு நடக்கும். நேற்று இரவு, ஐப்பசி மாத கிருத்திகையை முன்னிட்டு, அறுகோண தெப்பக்குளத்தில் பக்தர்கள் ஆரத்தி எடுக்கும் நிகழ்வு நடந்தது. இதையொட்டி வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் உற்சவர், அறுகோண தெப்பக்குளக்கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வும் நடந்தது. தொடர்ந்து பாலமுருகனடிமை சுவாமிகள் தலைமையில், நடந்த, பக்தர்கள் ஆரத்தி எடுக்கும் நிகழ்வை, ஏராளமானோர் வழிபட்டனர்.