பதிவு செய்த நாள்
01
நவ
2023
01:11
ஆண்டிபட்டி. ஜம்புலிப்புத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்திற்காக உபயதாரர்கள் மூலம் ரூபாய் பல லட்சம் செலவில் புனரமைப்புப்பணிகள் நடந்து வருகிறது.
ஆண்டிபட்டி அருகே உள்ள ஜம்புலிப்புத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் 800 ஆண்டுகளைக் கடந்த பழமையான கோயிலாகும். ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் கும்பாபிஷேகம் 2006ல் நடந்தது. 17 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இக்கோயில் கும்பாபிஷேகம் நடத்த ஹிந்து அறநிலையத்துறை மூலம் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. கோயிலில் உபயதாரர்கள் மூலம் பழமை மாறாமல் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கதலி நரசிங்கப்பெருமாள், செங்கமலத்தாயார், ஆஞ்சநேயர், நவக்கிரகம், ஆழ்வார்கள் சன்னதிகளில் பழமை மாறாமல் சீரமைக்கப்பட்டுள்ளன. கோயில் பிரகாரத்தில் மழை நீர் வடிகாலுடன் சிமென்ட் தளம், கோபுரங்கள் புதுப்பிப்பு பணிகள் தொடர்கிறது. கோயில் முன்பகுதியில் பக்தர்களுக்கான நிழற்கூரையுடன் தரைதளத்தில் பேவர்பிளாக் பதிக்கப்பட்டுள்ளது. சிதிலமடைந்த நிலையில் இருந்த தெப்பம் சீரமைக்கப்பட்டு, சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது.
கோயில் நிர்வாகத்தினர் கூறியதாவது: கோயிலில் பாலாலய பூஜைகளுக்கு பின் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான பணிகள் உபயதாரர்கள் மூலம் நடந்து வருகிறது. இன்னும் சில மாதங்களில் பணிகள் நிறைவு பெற்ற பின் வரும் ஜனவரியில் கும்பாபிஷேகத்திற்கான வாய்ப்பு உள்ளது. இவ்வாறு தெரிவித்தனர்.